யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் 28.05.2002 அன்று இடம்பெற்றது.
வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணையை பயனாளர்களுக்கு விநியோகிக்கும் முறைமை, எரிபொருள் விநியோக முறைமை,மருந்துப்பொருள் தேவைப்பாடுகள், உணவுப் பொருள் தட்டுப்பாடு மற்றும் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துவற்காக யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக எடுத்து வரப்பட்டுள்ள மண்ணெண்ணையை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கூடாக கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்றொழில் சங்கங்களினால் சரியான முறையில் விநியோகிக்கப்படுவதை பிரதேச செயலாளர்கள் மற்றும் கடற்றொழிலாளர் திணைக்களம் ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயு விநியோகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்லந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலர்கள், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





