யாழ்ப்பாண மக்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் (20.06.2022) காலை 10.30மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட எரிபொருள் விநியோகத்துக்காக பங்கீட்டு அட்டை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும் மக்கள் தமக்கான பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற முடியும் எனவும் அரச பணியாளர்கள் தமது திணைக்கள தலைவர் ஊடாக மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அத்தியாவசிய சேவைக்காக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள ஒரு ப.நோ.கூ.ச (MPCS) நிரப்பு நிலையம் செயற்படுத்தப்படும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை தீர்மானித்தல், பாவனையாளர் அதிகாரசபை அரிசி ஆலைகளுக்கும் திடீர் சோதனை மேற்கொள்ளல், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் தலைவர்களும் கலந்து கொண்டனர்.