யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், IOM நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களின் தலைமையில் 06.09.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டார். அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், IOM நிறுவன இணைப்பாளர், இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பயிற்சி நெறிகளை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
கொவிட் நிலமைகாரணமாக வெளிநாடுகளிலிருந்துவந்து வேலையற்றிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் மதிப்புக்குரிய அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக IOM நிறுவனத்தினால் இப்பயிற்சி நெறி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் தொழிற்சந்தையில் ஏராளமான தொழில்கள் காணப்படுகிறது. ஆனால் அதற்குரிய தொழிற்தகுதிகள் குறைவாக உள்ளது. அதற்கமைய கனரக வாகனங்களிற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப் பயிற்சியை நீங்கள் முறையாக பிரயோகிக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் மொழியறிவுகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். இதனூடாக வெளிநாடுகளில் கூட நீங்கள் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். எமது மாவட்ட இளைஞர் யுவதிகளை வழிகாட்டுவதற்காகவே இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், இன்றைய சூழலில் இளைஞர்களை வேலைவாய்ப்பில் உள்வாங்குதலில் பல சிக்கல்கள் காணப்படுகிறது. அந்தவகையில் IOM நிறுவனத்தினால் கனரக வாகனங்களிற்கான இப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக உங்களுக்கான வேலைவாய்ப்பை பெற்று வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்ய முடியுமெனவும் குறிப்பிடப்பட்டது






