யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் "முற்கரை ஒதுக்கீட்டு அரச காணிகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தல்" தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 07.09.2022 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அடையாளப்படுத்தப்பட்ட கரைவலைப்பாடுகளுள் ஒன்றுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்களால் ஒரே காலப்பகுதியில் தொழிலை மேற்கொள்ளும் போது குறித்த காணிக்கான ஆவணம் வழங்கும் நபரை தெரிவு செய்தல், ஏற்கனவே அமைக்கப்பட்ட வாடிகளுள் தற்காலிக குடில்கள், சீமெந்து தளத்தாலானவை, சுவர்கள் பகுதியளவில் சீமெந்தால் கட்டப்பட்டவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும்,ஏற்கனவே அமைக்கப்பட்ட வாடிகளுக்கு அனுமதி வழங்கும் விஸ்தீரணம், கடலட்டை வளர்ப்பாளர்களால் கோரப்படும் வாடிகளுக்கான அனுமதி வழங்கல் மற்றும் அனுமதிக்கும் விஸ்தீரணம், அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்டு மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடங்கள் அடங்கலான காணியை வழங்குதல் தொடர்பான நடவடிக்கை மற்றும் கரையோரப் பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட அரச, தனியார் கட்டடங்கள் அரச காணிக்கட்டளை சட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கையெடுக்கும் போது கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி பெறல், பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத அரச காணிகளை பயன்படுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிமாவட்டச் செயலாளர், NAQDA உதவிப்பணிப்பாளர், மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.






