வெதுப்பக உற்பத்திப் பொருட்களுக்கான விலை தொடர்பான கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை  மகேசன் அவர்களின் தலைமையில் 08.09.2022 காலை 11 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், உதவிக் கூட்டுறவு ஆணையாளர், பிறிமா பிராந்திய முகாமையாளர், செரண்டிப் மா விநியோக பிரதிநிதி, பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர், பேக்கறி உரிமையாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில்  வெதுப்பக உற்பத்திகள் மற்றும் அவற்றின் இடர்பாடுகள், உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், நுகர்வோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள், விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வெதுப்பகங்களுக்கான எரிபொருள் விநியோகம், வெதுப்பகங்களுக்கு சரியான பொறிமுறையில் மா விநியோகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டு விலை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மூலம் கண்காணித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், வெதுப்பக உரிமையாளர்களால் பாணின் விலையை இரு நூறு ரூபாவிற்கு விற்பனை செய்வதாக குறிப்பிடப்பட்டதோடு, வெதுப்பக மா விநியோகத்தை சீராக தருமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.