யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மாவட்ட சிரேஸ்ட பேரவையும் இணைந்து நடாத்திய சர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (12.10.2022) மாலை 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக “குடும்பங்களின் இன்றைய நிலை” தொடர்பான வீதி நாடகம் செம்முகம் ஆற்றுகை குழுவினால் வழங்கப்பட்டதுடன், “முதியோர், சிறுவர்களிடையே ஆளிடைத்தொடர்பைக் கட்டியெழுப்புதல்” தொடர்பாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி முதல்வர் திரு.லலீசன் அவர்களினால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன், சிறுவர் கழகமும் முதியோர் சங்கமும் இணைந்து நடாத்தும் ஆற்றுகை நாடகம், சிறுவர் பள்ளியின் குழு நடனம், தனிநடனம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்துடன் முதன்மை விருந்தினராக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் முதியோர்களையும் சிறுவர்களையும் இணைத்து இந்நிகழ்வை நடாத்தியமை சிறப்பாக இருந்ததாகவும் போதை பொருள் பாவனையிலிருந்து இச்சமூகத்தைத் மீட்க பெற்றோர்கள் தம் பிள்ளைகளை சிறுவயதிலிருந்து ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்றும் அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சிரேஸ்ட பேரவையின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள், சிறுவர் கழகத்தினர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், மற்றும் முதியோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

12day1 12day2 12day3