மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் (03.11.2022) காலை 9.00 மணியளவில் யாழ். மாவட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கௌரவ கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு, மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய இதர தேவைகளை பூரணப்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதம் இதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கௌரவ அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதில், அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது "தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள நடைமுறைகளை அறிந்துகொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்தோடு தற்பொழுது இங்கு உடனடிப் பிரச்சினையாக குடிநீர்ப் பிரச்சினை உள்ளது, இதனை பவுசர் மூலம் தற்பொழுது நிவரத்தி செய்துள்ளோம்.
அத்தோடு மின்சாரம், பாதுகாப்பு மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகளை நாம் செயற்படுத்தவேண்டியுள்ளது.தம்புள்ளை விஜயத்தின் பின்னர் வரிகளை அறவிடுதல் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைக்கு கொடுக்கவேண்டிய வரிகள் மற்றும் முகாமைத்துவம் குறித்தும் கலந்துரையாடி ஒருசில விடயங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.உற்பத்தியாளர் தாமாக அல்லது சிறு குழுக்களாக இங்கு வருகை தந்து தமது உற்பத்தி பொருட்களை வெளியூருக்கு அனுப்பி விற்பனை செய்வதற்கு இந்த மத்திய நலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். வெளியூர் வியாபாரிகளும் தமது உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி போன்ற பிரதேசங்களுக்கு மத்திய நிலையமாக இந்த மத்திய நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது






