இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களிற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (13.01.2023) வெள்ளிக்கிழமை பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் தந்தை செல்வா அரங்கில்" காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் திரு.மு.நந்தகோபாலன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ விருந்தினர்களாக யாழ் சனச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் திரு .தி.லக்ஷன், யாழ் அரிமாக்கழகம் தலைவர் லயன் கு.ஜெயந்தன், நல்லூர்க்ஷஅரிமாக்கழகம் தலைவர் லயன் ர.பாலரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சமூக பாதுகாப்பு சபையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களிற்கான பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 100 மாணவர்கள் 5,000 ரூபா முதல் 50,000 ரூபா வரையான புலமைப்பரிசிலிற்கான காசோலைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவப்பருவத்திலேயே முதுமைப்பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இப் பாதுகாப்புத்திட்டத்தில் தமது பிள்ளைகளை இணைத்துக் கொள்ளும் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தமது முதிர்வுக் காலத்தில் அரசதுறை வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளாத போதும் மாதாந்த ஓய்வூதியம் ஒன்றினைப்பெற்றுக்கொள்ளத்தக்க வாய்ப்பினை இப்பாதுகாப்புத்திட்டம் வழங்குகின்றது.
தரம் 5 புலமைப்பரிசில் சித்தி, க.பொ.த.சாதாரணதர சித்தி (சிறப்பு) க.பொ.த உயர்தர (பல்கலைக்கழக அனுமதி) என்பவற்றிற்கு பெறுமதி வாய்ந்த புலமைப்பரிசில்களை வழங்கி மாணவர்களிற்காக கல்வி ஊக்குவிப்பினை வழங்கும் திட்டமாகவும் சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களிற்கான பாதுகாப்புத் திட்டமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் அமுல்படுத்தலில் யாழ் மாவட்டம் முன்னிலை வகித்து செயல்படுவதுடன் ஏனைய மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.





