யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தலைமையில் (16.02.2023) பிற்பகல் 2.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்திற்கு மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர், கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், தென்னை அபிவிருத்திச்சபை பிராந்திய முகாமையாளர், பனை அபிவிருத்திச்சபை பிரதிநிதிகள், புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகள், மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளர் வங்கிகளின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்பு சம்மேளனங்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது விவசாயம் தொடர்பான விடயங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
உணவு பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த பொறிமுறையில் பிரதேசமட்டங்களில் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் உணவு உற்பத்தியின் அடைவுமட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள், உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் ,உணவுவங்கிகளின் சமூக ,சமய ரீதியான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இயற்கை உர பாவனை மற்றும் அதன் விநியோகம், எதிர்காலத்தில் இடம்பெறும் என எதிர்நோக்கத்தக்க எரிபொருள் பிரச்சினைகள், போசனை குறைபாடு மற்றும் அதனை தீர்க்கும் வழிவகைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், இயற்கை உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாய உற்பத்திகள் குறித்து யாழ் மாவட்டம் மக்கள் மத்தியில் முதன்மையான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். யாழ் மாவட்டத்தில் இருந்து சிறிய அளவான விவசாய உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் நெல் செய்கை குறைவாக இருந்தாலும் ஏனைய உப உணவு செய்கைகள் குறித்து முன்னிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பிரதேசமட்டங்களில் துறைசார் பிரதிநிதிகளை அழைத்து விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்தல் அவ்வாறு தீர்க்க முடியாத பிரச்சினைகளை மாவட்ட மட்டத்தில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறினார்
 
 
மரக்கறி விதைகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்தல், வாழைச் செய்கை அழிவுக்கு காப்புறுதி வழங்குதல், வெளிநாட்டு ஏற்றுமதிகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகள், ஊழியர்களின் கூலி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக மினி உழவு இயந்திரத்தை கொள்வனவு செய்தல் தொடர்பான பிரச்சினைகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டு இது தொடர்பாக ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நெல் அறுவடை நிகழ்ச்சி திட்டம் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகிப்பதற்குரிய அரசாங்கத்தின் திட்டங்களும் விளக்கிக்கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 
16agri1 16agri2 16agri3 16agri4