யாழ்ப்பாண மாவட்ட  டெங்கு நோய் அபாயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில்  (23) பிற்பகல் மூன்று மணிக்கு யாழ்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

தற்போது யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துள்ளதோடு,  உயிரிழப்புக்கள் இடம்பெறுகிறது. யாழ் மாவட்ட நகர்புறங்களில் டெங்கு நோய் அபாயம் அதிகமாகவுள்ளது. இவை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

எதிர்வருகின்ற சனிக்கிழமை அன்று (27.01.2024) யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டு நீர் தேங்கும் இடங்களினை கண்டறிந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு திறக்கப்படாத கடைகள், ஸ்தாபனங்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் யாழ்மாவட்ட  அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

யாழ் மாவட்ட நகர்புறங்களில் டெங்குநோயை ஒழிப்பதற்கு வியாபார நிலையங்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டும். குறிப்பாக வியாபார நிலையங்கள் கழிவுகளை முறையாக அகற்றவேண்டும். யாழ் மாவட்ட வியாபார நிலையங்கள்  கழிவுகளை  அகற்றும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க  அதிபர் (காணி), யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், வர்த்தக சங்கத் தலைவர், மாநகர சபை ஆணையாளர்,சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸார், பொதுச்சுகாதார பரிசோதகர், பிரதேச சபை, வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்