யாழ். மாவட்ட செயலகம் நடாத்தும் சர்வதேச மகளிர் தினம் - 2024 யாழ் மாவட்ட செயலக
வளாகத்தில் 26.03.2024 காலை 9.30 மணிக்கு “அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” என்னும் தொனிப்பொருளில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி.தி.ரூபினி வரதலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட மனிதவள முகாமைத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.சி.தேவரஞ்சினி அவர்களும், கௌரவ விருந்தினராக தடகள வீராங்கனை திருமதி.சிறிசெயானந்தபவ அகிலத்திருநாயகி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் உள்ளூர் பெண் முயற்சியாளர்களின் விற்பனைக்கூடங்கள் விருந்தினர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது மாவட்ட
புள்ளிவிபர அடிப்படையில் பார்க்கும் போது மாவட்ட பிரதேச நிர்வாகக் கட்டமைப்பில் சுமார் 60 சதவீதமானவர்கள் பெண்களாக காணப்படுகின்றார்கள். அத்தோடு பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதிலும் பெண்களே அதிகம் காணப்படுகின்றார்கள்.
ஒரு பெண்ணிற்கு வழங்கப்படும் கல்வி என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வழங்கப்படும் கல்வியாக அமையும் என்றும் இதன்போது தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலே விருந்தினர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள், சிறந்த பெண் சமூக மட்ட அமைப்புக்களும் கௌரவிக்கப்பட்டதுடன், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், மாவட்ட மகளிர் சம்மேளன பிரதிநிதிகள், பெண் முயற்சியாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.





