யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் (18.04.2024) அன்று காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மேலும், பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும் நேரங்களில் கனரக வாகனங்கள் வீதியில் செல்வதை கட்டுப்படுத்தல், எதிர்வரும் 21 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக திட்டம் மற்றும் வரட்சிக்கான குடிநீர் விநியோக திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீதி அபிவிருத்திகள், யாழ் நகரத்தில் பொது மலசலகூடம் அமைத்தல், போக்குவரத்து சேவைகள், சட்டவிரோத செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் மற்றும் கௌரவ ஆளுநரின் செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மத்திய மற்றும் மாகாண அமைச்சின் திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படையினர், விஷேட அதிரடிப்படை வலய அதிகாரி, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியின் பிரதிநிதி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





