இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் தொடர்பான கலந்தாய்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (07.08.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்தாய்வில் தலைமையுரையாற்றிய பதில் அரசாங்க அதிபர் அவர்கள் மீளக்குடியமர்ந்தவர்களுக்கான காணி மற்றும் அடிப்படைத் தேவைகளை முழுமையாக தீர்க்க முடியாவிட்டாலும் கட்டம் கட்டமாக தீர்க்கலாம் எனவும் தொடர்புடைய திணைக்களங்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், இக் குடும்பங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வினை காலக்கிரமத்தில் தொடர்புடைய திணைக்களங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
2023 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த 83 குடும்பங்களில் - ஆய்வின் மூலம் காணி, வாழ்வாதாரம் உட்பட்ட தேவைப்பாடுகளை எதிர்நோக்கி வரும் இனங்கானப்பட்ட 23 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய தேவைகள் மற்றும் சேவைகள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் குறித்த கலந்தாய்வானது தொடர்புடைய திணைக்களங்களுடன் நடைபெற்று பயனாளிகளுக்கான தீர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. இக் கலந்தாய்விற்கான அனுசரணையினை IOM நிறுவனம் வழங்கியது.
இக் கலந்தாய்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாகாணக் காணி ஆணையாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பதிவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், IOM மற்றும் OfERR (Ceylon) பிரதிநிதிகள், இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5