குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024 இன் கீழ் வட்டத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கான (Circle Officers) இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.08.2024) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரையில் கருத்து தெரிவித்த பதில் அரசாங்க அதிபர் அவர்கள் நாட்டின் சகல விடயங்களுக்கும் மற்றும் தேசிய கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கும் புள்ளிவிபரங்களானது முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், துல்லியமான புள்ளிவிபரங்களை வினைத்திறமையாகப் பெற்று அறிக்கையிடுவதற்கு இப் பயிற்சி முக்கியத்துவம் பெறுவதாக தெரிவித்ததுடன், தற்போது நாட்டில் நடைபெற்று முடிந்த கட்டடங்களை நிரற்படுத்தும் செயற்றிட்டத்தில் அகில இலங்கை ரீதியாக யாழ்ப்பாண மாவட்டமானது முதலாவதாக இச் செயற்றிட்டத்தினை நிறைவேற்றியமைக்காக பிரதேச செயலாளர்களுக்கும், மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளருக்கும் மற்றும் புள்ளிவிபர உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ம. வித்தியானந்தநேசன் அவர்களால் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விபரிக்கப்பட்டது.
பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர்கள், புள்ளிவிபர உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இப் பயிற்சியில் கலந்துகொண்டார்கள்.
 
1 2 3 4 5