சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு - பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28.03.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றியஅரசாங்க அதிபர் அவர்கள், சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மகளிர் தின நிகழ்வுடன் நின்று விடாது மாவட்டச் செயலக பெண்கள் பிரிவினால் மாவட்டச் செயலக பெண் உத்தியோகத்தர்களுக்கான யோகாசன வகுப்பு, மோட்டார் சைக்கிள் திருத்தும் பயிற்சி நடைபெற்றதன் தொடர்ச்சியாக இன்று பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையும் கண்காட்சியும் இடம் பெற்றுவருவதாகவும், பாலம் நிறுவனத்தின் அனுசரனையில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 15 பெண் முயற்சியாளருக்கான வாழ்வாதார திட்டத்திற்காக மொத்தமாக ரூபா 15 இலட்சம் வழங்கப்படவுள்ளதும் சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்டார். மேலும், இன்றைய காலகட்டத்தில் அரசாங்க சேவைகளில் அதாவது நிர்வாக மட்டத்தில் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பெண்கள் அதிகளவில் உள்ளதாகவும் இதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு பெண்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்கிவருவதாகவும், பெண்கள் முன்னோக்கிய நிலைமையில் வளர்ச்சி அடைந்து செல்வதாக குறிப்பிட்டதுடன், சர்வதேச ரீதியாகவும் மேம்பட்ட நிலைமையே காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், பெண்களின் வேலைச் சுமைகளுக்கு மத்தியிலும், தற்போது பிள்ளை வளர்ப்பில் குறிப்பாக பிள்ளைகளின் கல்வியின் முன்னேற்றத்தில் தயார்மார்களின் அக்கறை மற்றும் பங்களிப்பு அதிகமாக காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், எமது மாவட்டத்தின் பெண்கள் அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பிரதேச செயல ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத் திட்டத்திற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன், 40 ற்கு மேற்பட்ட பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மாலை 04.00 மணி வரை நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், காரைநகர் பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உதவிப் பிரதேச செயலாளர்கள், பாலம் நிறுவனத்தின் முகாமையாளர், வேல்ட் விஷன் திட்ட முகாமையாளர், Chrysali நிறுவன சிரேஸ்ட திட்ட இணைப்பாளர்,மாவட்ட பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.






