வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக
கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.
1990ஆம் ஆண்டு இடம்பெயர்வை எதிர்கொண்ட வலிகாமம் வடக்கு மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருந்த கலை மற்றும் பண்பாட்டு மரபுகள், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இன்றுவரை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருவது பாராட்டுக்குரிய விடயம் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், தாயகத்தை விட்டு பிரிந்து வாழ்ந்த காலங்களிலும் தமது கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து வந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைவதாகக் குறிப்பிட்டார். மேலும், கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கௌரவிப்பது அவர்களின் கலைப்பயணத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், இளம் தலைமுறையினரையும் கலைத்துறையில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மாகாணத்தின் நிதி ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இத்தகைய பண்பாட்டு விழாக்கள் கிராம மட்டத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், தமிழர் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கலை ஆற்றுகைகளுடன் ஆரம்பமான விழா !
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, பிரதேசத்தின் பல்வேறு கலை ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் துர்கையம்மன் ஆலய தலைவாசல் இராஜகோபுர முன்றலில் இருந்து விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு நடைபெற்றதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மங்கல இசையினை திரு. இ. ஞானசம்மந்தர், திரு. த. உதயசங்கர் மற்றும் குழுவினரின் கலை ஆற்றுகை இடம்பெற்றது.mஅதனைத் தொடர்ந்து பன்னாலை ஆசிரியர் திரு. நி. பாபுதரன் அவர்களால் அரங்கத் திறப்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து தெல்லிப்பழை கலாசார மத்திய கலைக்குழுவினர் (அளவெட்டி தெற்கு) வழங்கிய வரவேற்பு நடனம் சிறப்பாக இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, உதவிப் பிரதேச செயலாளர் திரு. செ. நிசான் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்வுகள்
பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகளையும், கலைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதேச மட்ட கலைமன்றப் போட்டியில் முதலிடம் பெற்ற “சோலைக்குயில்” அவைக்காற்றுக் களத்தினர், விழிசிட்டி வழங்கிய கிராமிய இசை நிகழ்வினை நடாத்தினர். அதனைத் தொடர்ந்து “வாத்தியப்பிருந்தா” எனும் இசை நிகழ்வை வலிகாமம் வடக்கு பிரதேச அணிசெய் வாத்தியக் கலைஞர்கள் வழங்கினர். மேலும், பிரதேச மட்ட கலைமன்றப் போட்டியில் முதலிடம் பெற்ற ஆரோகணா அரங்கக் கல்லூரி கலைக்குழுவினர் – தஞ்சிட்டி, அளவெட்டி வடக்கு ஆகியோரின் சிறப்புக் கலை நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து மாவை பொதுச்சேவைக் கழக கலைக்குழுவினர், பளை வீமன்காமம் வடக்கு வழங்கிய பாரம்பரிய ஒயிலாட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இவ்வாறு பிரதேசத்தின் பல்வேறு கலை வடிவங்களை ஒரே அரங்கில் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
கலைஞர்கள் கௌரவிப்பு :
“கலைச்சுடர் விருது” வழங்கி வைப்பு
பண்பாட்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிரதேசத்தின் கலைத்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டிற்கான பிரதேச “கலைச்சுடர் விருதுகளும்” வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி, ஒப்பனைக் கலையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவரும் அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த திரு. ஐயாத்துரை பத்மதாஸ் அவர்களுக்கு “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. வாத்தியக்கலையில், குறிப்பாக ஆர்மோனியம் இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் மல்லாகம் கிழக்கைச் சேர்ந்த திரு. சிவநாதன் றஜீவன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், வயலின் வாத்தியக் கலையில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அளவெட்டி தெற்கைச் சேர்ந்த திருமதி நிக்ஸ்சனா கோகிலரூபன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. கலைத்துறையில் தமது நீண்டகாலப் பணியினூடாக பிரதேசத்தின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் பங்களிப்பாற்றி வரும் கலைஞர்களை அடையாளப்படுத்தி கௌரவிக்கும் இந்நிகழ்வு, கலைஞர்களுக்கு மேலும் ஊக்கத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் அமைந்தது. கலைமன்ற மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசில்கள் இதனுடன், பிரதேச மட்ட கலைமன்றப் போட்டிகள் மற்றும் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வின் நிறைவாக, தெல்லிப்பழை கலாசார உத்தியோகத்தர் திரு. த. அமலதாஸ் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, நிகழ்வின் சிறப்பையும் சிறப்புறச் செய்தனர்.
 
 
 1 2 3 4 5 6 7 11 9 13 18
 

விவசாயத் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான (Tablet Technical Officers) ஒரு நாள் பயிற்சி நெறி மாவட்ட புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வித்தியானந்தனேசன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், விவசாயத் தொகைமதிப்புடன் தொடர்புடைய இப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், எந்தவொரு அபிவிருத்தித் திட்டமிடலுக்கும் தரவு இன்றியமையாதது எனவும், நம்பகமான தரவுகள் இல்லாமல் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், தரவுகள் பொதுவாக இரண்டு பிரதான வழிகளில் சேகரிக்கப்படுகின்றன எனவும், அவற்றில் முதல்நிலைத் தரவு என்பது களத்திற்குச் சென்று நேரடியாக சேகரிக்கப்படும் தரவுகளையும், இரண்டாம்நிலைத் தரவு என்பது ஏற்கனவே காணப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவுகளிலிருந்து பெறப்படும் தரவுகளையும் குறிக்கின்றன எனவும் அவர் விளக்கினார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளை வழங்கும் பிரதான நிறுவனமாக புள்ளிவிபரத் திணைக்களம் காணப்படுவதால், சேகரிக்கப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை, நம்பகமானவை மற்றும் உறுதிப்படுத்தப்பட்டவை என்பதனை உறுதி செய்வது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். 

விவசாயத் துறை தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தற்போதைய சூழலில் சில சவால்களை ஏற்படுத்தக்கூடும் எனவும், எனினும் காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப முறைகளுக்கு நாம் பழகிக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். இன்று நாம் சேகரிக்கும் ஒவ்வொரு தரவும் எதிர்கால சந்ததியினருக்குப் பயனளிக்கக்கூடிய பெறுமதிமிக்க வளமாகும். எனவே, தரவு சேகரிப்புப் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். இப்பயிற்சி நெறியில் 58 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டன.

 1 2 3 4 5 6 11

 

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று (03.09.2026) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரக் கிளை பிரதிப் பணிப்பாளர் திரு. மனுவேல் வித்தியானந்தநேசன் மற்றும் காரைநகர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. புவிலோகசிங்கம் அருள்நேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கௌரவ விருந்தினர்களாக கடற்கரை கரப்பந்தாட்டத்தில் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்ற செல்வி ஜெயக்குமார் கம்சிகா மற்றும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட மட்ட வீரரும் சிறந்த சுயதொழில் முயற்சியாளருமான திரு. தம்பிராசா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாணம் ஆகியன இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தோப்புக்காடு விளையாட்டுக் கழகமும் ஐயனார் விளையாட்டுக் கழகமும் விறுவிறுப்பாக மோதின. தொடர்ந்து, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணிக்கும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதித்துவ அணிக்கும் இடையில் கயிறிழுத்தல் போட்டி இடம்பெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளரின் தலைமையுரை, சிறப்பு விருந்தினர் உரை மற்றும் பிரதம விருந்தினர் உரை ஆகியன இடம்பெற்றன. இதன்போது விளையாட்டுத் துறையில் இளைஞர்களின் பங்களிப்பு, ஒற்றுமை, ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் விளையாட்டின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கு பிரதம விருந்தினர் உள்ளிட்ட விருந்தினர்களால் வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி உணர்வையும், இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கும் வகையில் இவ் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பானதொரு நிகழ்வாக அமைந்தது. இறுதியில் நன்றியுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து வருடாந்த விளையாட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
 
1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்திய புத்தாக்கச் சூழலமைப்பை (Regional Innovation Ecosystem) வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இலங்கை தேசிய புத்தாக்க முகவராண்மையும் (NIA) இணைந்து ஏற்பாடு செய்த திறந்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் புத்தாக்கச் சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் தொழில்முனைவுகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தேசிய மட்டத்திலான அங்கீகாரம், வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். அதற்கான முதலாவது களமாக இன்றைய கலந்துரையாடல் அமைந்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தின் புத்தாக்க ஆற்றல்களை ஒருங்கிணைத்து, அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இக் கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும் என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்த காலத்திலிருந்தே பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் புத்தாக்க முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதுடன், தற்போதும் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தமது படைப்பாற்றலையும் புத்தாக்கச் சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். எனினும், இவ்வாறான பல புத்தாக்க முயற்சிகள் பாடசாலை அல்லது சமூக ஊடக மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, அவற்றை முறையாக அடையாளம் கண்டு, ஆவணப்படுத்தி, தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான வழிகாட்டல்களை வழங்கி, தேசிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதுடன், சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் உற்பத்திகளாகவும் சேவைகளாகவும் மாற்றுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், புத்தாக்குநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தகவல்களை பிரதேச செயலாளர்கள் ஊடாக Google Form மூலம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் மாவட்டத்தில் காணப்படும் புத்தாக்க ஆற்றல்களை அடையாளம் கண்டு, அவற்றை உரிய நிறுவனங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் இணைப்பதுடன், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தொழில்நுட்ப வழிகாட்டல், பயிற்சி மற்றும் ஆதரவு வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், புத்தாக்கங்களை விருத்தி செய்தல், வணிகமயமாக்கல், மதிப்புக்கூட்டல், வர்த்தகப் பெயராக்கம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற துறைகளில் உரிய வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம், இளைஞர்களின் படைப்பாற்றலை புதிய தொழில் மற்றும் பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் காணப்படும் திறமைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு வளர்த்தெடுத்து, அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகளுடன் இணைப்பதன் மூலம், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பங்களிப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் புத்தாக்க ஆர்வலர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துவதன் மூலம், யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தின் புத்தாக்க ஆற்றல்களை தேசிய மட்டத்தில் வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரி கலாநிதி முதித டி. செனரத் யாவா, சிரேஷ்ட உத்தியோகத்தர்களான திடாசி தஹாநாயக்க, நவோடி விக்ரமசிங்ஹ மற்றும் புத்தாக்க உத்தியோகத்தர் லயந்தினி சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய புத்தாக்க முகவராண்மையின் சேவைகள், திட்டங்கள் மற்றும் ஆதரவு வாய்ப்புகள் தொடர்பில் விளக்கங்களை வழங்கினர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புத்தாக்கச் செயற்பாடுகளை தேசிய மட்டத்திலான புத்தாக்க முயற்சிகளுடன் இணைத்து, அவற்றை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்தியத்தில் காணப்படும் புத்தாக்கச் சிந்தனைகள், ஆய்வுகள், புதிய தொழில்நுட்ப முயற்சிகள், உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் தொழில்முனைவுகளை முறையாக அடையாளம் கண்டு, அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான வழிகாட்டல், தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு, சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதுடன், அவற்றை உரிய அரச நிறுவனங்கள், தேசிய மட்டத்திலான புத்தாக்க அமைப்புகள் மற்றும் ஏனைய ஆதரவு நிறுவனங்களுடன் இணைத்து தேசிய மட்டத்திற்கு உயர்த்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், இக்கலந்துரையாடலின் முதலாவது அமர்வாக, இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான புத்தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் புத்தாக்க ஆற்றல்களை ஒருங்கிணைத்து, தேசிய புத்தாக்கச் சூழலமைப்புடன் இணைப்பதற்கான முக்கியமான ஆரம்பகட்ட நடவடிக்கையாக இக் கலந்துரையாடல் அமைந்துள்ளது. இன்றைய கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், புள்ளிவிபரத் திணைக்களத்தின் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர், விதாதா வள நிலைய மாவட்ட உத்தியோகத்தர், தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்துறைத் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 10 12 15 16
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (01.09.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அலுவலகக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் 30.08.2026 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் அமரர் சிந்துப்பிரியா நிசாந்தன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இவ்வாண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமாக இது அமைந்துள்ளதுடன், முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மற்றும் அவற்றின் முடிவுகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அலுவலக நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதுடன், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களை முழுமையாக வாசித்து, அவற்றின் உள்ளடக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்படுமாறும் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், பதிவேடுகளை (Records) முறையாகவும் தொடர்ச்சியாகவும் பராமரிப்பதன் மூலம் எதிர்காலத் தேவைகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்ததுடன், தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளைத் துரிதமாகவும், வினைத்திறனுடனும், சரியான முறையிலும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. பிரபாகரன், உதவி கணக்காய்வு அத்தியட்சகர் திரு. H. M. U. K. குமார் மற்றும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஷ்குமார் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டதுடன்,
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி. பொன்ராணி மற்றும் சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் திரு. ஜெறோஸ் ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இசுரேந்திரநாதன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9