யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நவராத்திரி விழாவின் முதல் நாள் பூஜை இன்றைய தினம் (11.10.2026) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10
“முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான “ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் கை. சிவகரன் தலைமையில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்கேற்புடன் இன்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தமது உரையில், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செய்திகளை அறிவியல் ரீதியாகவும், மக்களுக்குச் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வெளிக்கொணர வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இப்பயிற்சியின் மூலம் ஊடகவியலாளர்கள் தமது அறிவையும் திறனையும் மேம்படுத்திக்கொண்டு, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்க அதிபர் கருத்துரை :
போதைப்பொருள் ஒழிப்புக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் - அரசாங்க அதிபர் ஊடகங்கள் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி செய்திகளை வெளியிடுவது அவசியம் – யாழ். அரசாங்க அதிபர் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஊடகங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதுடன், செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவது அவசியம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். ஊடகங்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவற்றின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் முக்கிய பணியாற்றின. தற்போதைய அபிவிருத்திப் பயணத்தில், ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதுடன், சமூகத்தில் ஆரோக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் என எந்த ஊடகமாக இருந்தாலும், அதன் நம்பகத்தன்மை பேணப்படுவது மிகவும் அவசியமாகும். செய்திகளின் தலைப்புகள் சிலவேளைகளில் உள்ளடக்கத்துடன் முரண்படுவதால் மக்கள் மத்தியில் குழப்பமும் ஊடகங்கள் மீதான நம்பிக்கையின்மையும் ஏற்படக்கூடும். எனவே, செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். விமர்சனங்களை முன்வைப்பதில் தவறில்லை ஆனால் அவை உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதிமேதகு ஜனாதிபதியின் “முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளை ஆக்கபூர்வமாக வெளியிடுவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளைத் தேடிச் சென்று தகவல்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் உறுதிப்படுத்தி வெளியிடுவது அவசியம். ஊடகத்துறையினருக்குத் தேவையான மேலதிக பயிற்சிகளை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கும் மாவட்டச் செயலகம் ஒத்துழைக்கும். ஊடகவியலாளர்களுக்கும் அரச நிர்வாகத்தினருக்கும் இடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலம், மாவட்டத்தில் பொறுப்புணர்வுமிக்க ஊடகச் சூழலை உருவாக்குவதற்கு இச்செயலமர்வு அடித்தளமாக அமையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வளவாளர் :
இச் செயலமர்வின் வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், “முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டத்தின் செயற்குழு உறுப்பினருமான திரு. பஸீர் முஹம்மட் றஸாட் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் திருமதி சாமினி வையலட், யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள், மாவட்ட ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக, பிரதேச செயலகங்களின் துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 14 15
புவிசார் வளங்களான கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த யாழ்ப்பாண மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
புவிசார் வளங்கள் அகழ்வைக் கண்காணிக்க மாவட்ட மட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த அணுகுமுறை - அரசாங்க அதிபர் புவிசார் வளங்களை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் தொடர்பான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை வினைத்திறனுடனும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்காக, மாவட்ட மட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது னத் தெரிவித்தார். அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. எம். திலகரத்ன அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, புவிசார் வளங்கள் அகழ்வு தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. அதற்கமைய, இக்குழுவின் செயற்பாடுகளைச் சீராகவும் திறம்படவும் முன்னெடுப்பது அவசியமாகும். கருங்கல், சரளைக்கல், மண், மணல் மற்றும் களிமண் போன்ற புவிசார் வளங்களை அகழ்தல், அவற்றைக் கொண்டுசெல்லுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, உரிய நடைமுறைகளுக்கு அமைவாக விரைவான தீர்மானங்களை மேற்கொள்வதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்தார். இதற்காக, காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலகங்கள், யாழ்ப்பாண மாநகர சபை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், புவிசார் வளங்கள் அகழ்வுப் பொறியியல் பிரிவு, வீதி அபிவிருத்தித் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். சுற்றறிக்கைக்கு அமைவாக, மாவட்ட அரசாங்க அதிபர் அல்லது மாவட்டச் செயலாளர் இக்குழுவின் தலைவராகவும், அகழ்வுப் பொறியியலாளர் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுவர். மத்திய சுற்றாடல் அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் இக்குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன. தேவைக்கேற்ப ஏனைய அரச நிறுவனங்களின் அதிகாரிகளையும் கூட்டங்களுக்கு அழைத்து அவர்களின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். இதுவரை காலமும், புவிசார் வளங்களை அகழ்வதற்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளரின் பரிந்துரைகளுடன் அகழ்வுப் பொறியியலாளருக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட ஏனைய திணைக்களங்கள் மற்றும் தலைமையகத்தின் அனுமதிகளைப் பெற்ற பின்னர் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போதைய சுற்றறிக்கையின் நோக்கத்திற்கமைவாக, இச் செயன்முறையில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் இணக்கப்பாடுகளைப் பெற்று, ஒருங்கிணைந்த முறையில் தீர்மானங்களை மேற்கொள்வது முக்கியமாகும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, சுற்றாடல் பாதுகாப்பு, காணிப் பயன்பாடு, வீதிகளின் நிலை, நீர்வளங்கள், விவசாய நடவடிக்கைகள், தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தனித்தனியாகத் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெறுவதால் ஏற்படும் காலதாமதங்களைக் குறைப்பதுடன், அனுமதி வழங்கும் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அதேவேளை, எந்தவொரு தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடமளிக்காமல், உரிய சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். மேலும், இக்குழுவின் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான வருடாந்த அட்டவணையை முன்கூட்டியே தயாரித்து உறுப்பினர்களுக்கு அறிவிக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய, 2026ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமைகளில் கூட்டங்களை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்படும். 2027ஆம் ஆண்டிற்கான கூட்ட அட்டவணையும் முன்கூட்டியே தயாரித்து அறிவிக்கப்படும். அவசரத் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதற்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். எனவே, இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்துத் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் தங்களது நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கருத்துகளை முன்வைத்து, புவிசார் வளங்களை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். அனைவரினதும் ஒத்துழைப்புடன் இக்குழுவின் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் தமது நன்றிகளை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டவை :
கட்டட நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் கனிமங்களை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக 06.07.2026 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக் கோவைக்கு அமைவாக, மாவட்டத்தில் புவிசார் வளங்களின் அகழ்வு நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவற்றைச் சட்டரீதியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பது தொடர்பில் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான அனுமதிகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களும் 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்கச் சுரங்கங்கள் மற்றும் கனியவளச் சட்டம் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதல் ஆகியன கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
பங்குபற்றியவர்கள் விபரங்கள் :
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகப் பொறியியலாளர், மாவட்டப் பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் கிளை உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாநகர ஆணையாளர், பிரதேச சபைச் செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பொறியியலாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வடக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைப் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்களப் பிரதிஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக 07.10.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் WMPWNDB வீரக்கோன் (Major General WMPWNDB Weerakoon RSP Usp ndu) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (09.10.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, Brigadier L. P. Athukorala RSP USP psc உள்ளிட்ட படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்ட இறப்பு பதிவாளர்களுக்கான புற்றுநோய் இறப்பு கண்காணிப்பு தொடர்பான பயிற்சிச் செயலமர்வு, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தலைமையில் இன்று (09.10.2026) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.
தொடக்கவுரை :
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். புற்றுநோய் மரணங்கள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் - அரசாங்க அதிபர் அரசாங்க அதிபர் தமது தொடக்கவுரையில், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகப் பதிவு செய்வது பதிவாளர்களின் முக்கிய பொறுப்பாகும். குறிப்பாக, இறப்புப் பதிவுகள் தொடர்பில் சில பின்தங்கிய பிரதேசங்களில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும் எனத் தெரிவித்தார். தினமும் சுமார் 100 பேர் புதிதாகப் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதுடன், நாளொன்றுக்கு சுமார் 45 பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் மிகவும் கவலைக்குரியதாகும் எனத் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்திலும் புற்றுநோயின் தாக்கம் காணப்படுகின்ற நிலையில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்களைச் சரியான முறையில் பதிவு செய்வது தொடர்பான இத்தகைய பயிற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரணங்களைப் பதிவு செய்யும்போது பதிவாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இறப்புச் சான்றிதழில் தகவல்களைச் சரியாகப் பதிவு செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டரீதியான பொறுப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் முதலாவது பயிற்சிச் செயலமர்வு நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது செயலமர்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காகக் கொழும்பிலிருந்து வருகைதந்த வைத்தியர்கள் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்களின் சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதாகவும், எமது மாவட்டத்திலிருந்து பல நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், மாவட்டத்திலேயே புற்றுநோய் சிகிச்சைச் சேவைகளை வழங்கிவரும் வைத்திய நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார். இன்றைய முழுநாள் பயிற்சியில் பங்கேற்கும் பதிவாளர்கள், தமது சந்தேகங்களைக் கேட்டு, இறப்புப் பதிவுகளைச் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்வதற்குத் தேவையான தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இப்பயிற்சியில் பெறும் அறிவைத் தமது பணிகளில் நடைமுறைப்படுத்துவதுடன், பொதுமக்களிடையேயும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார். இச் செயலமர்வை ஏற்பாடு செய்த யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் கேதீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார். இப் பயிற்சியானது பதிவாளர்களின் அறிவையும் திறனையும் மேம்படுத்துவதுடன், புற்றுநோயால் ஏற்படும் மரணங்களைச் சரியாகப் பதிவு செய்வதற்கும், இது தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
செயலமர்வின் விபரங்கள் :
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் செனக்க தலகல, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார். புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கவிதா இந்திரநாத், யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புற்றுநோயின் சுமை, புற்றுநோய் பதிவேடு மற்றும் இறப்பு கண்காணிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக டாக்டர் சுராஜ் பெரேரா விளக்கமளித்தார். யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் இறப்பு கண்காணிப்பின் ஆரம்பகால அனுபவங்கள் குறித்து டாக்டர் ஜி. ராஜீவ் எடுத்துரைத்ததுடன், இக்கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து, புற்றுநோய் இறப்பு கண்காணிப்பு தொடர்பாக டாக்டர் திருமகள் உரையாற்றினார். டாக்டர் ராஜீவ், டாக்டர் ஜெசிதரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்ற குழுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. பங்கேற்பாளர்களின் கருத்துப் பரிமாற்ற அமர்வை டாக்டர் கேதீஸ்வரன் வழிநடத்தினார். மார்பகப் புற்றுநோய் மற்றும் பொதுவான புற்றுநோய் வகைகள் தொடர்பாக டாக்டர் தனேந்திரன் த விளக்கமளித்ததுடன், பெண்களுக்கான புற்றுநோய்கள் குறித்து டாக்டர் தனுயா மகாதேவன் உரையாற்றினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோய் இறப்பு கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வின் இறுதியில் டாக்டர் ஜெசிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
 
1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15