2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யல பருவகால) நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக,நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் ( 31.08.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், 2026 யல பருவகாலத்திற்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலைக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் இருப்புகளைத் துரிதமாகக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதிமேதகு சனாதிபதி அவர்களினதும் அமைச்சரவையினதும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, விவசாயிகள் தமது அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் நெல் மற்றும் அரிசி விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஒத்துழைப்புடன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், மாவட்டச் செயலகங்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தரவாத விலையின்படி, தரமான சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டுநெல் கிலோகிராம் ஒன்றுக்கு 120 ரூபாவும், சம்பா நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 130 ரூபாவும் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இத்திட்டத்தில் பங்கேற்கும் தகுதியுடைய சிறு மற்றும் நடுத்தர அளவிலான பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், தமது மாவட்டச் செயலகங்களில் பதிவு செய்து கொண்டு, அரசாங்கத்தினால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக தகுதியுடைய பங்கேற்பாளர்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை வட்டியில்லாத சலுகை நிதி வழங்கப்படுவதுடன், கொள்வனவு செய்யப்படும் நெல்லை உரிய காலத்திற்குள் அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பது பங்கேற்பாளர்களின் முக்கிய பொறுப்பாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டில், அதிமேதகு சனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், மாவட்ட மட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நெல் உற்பத்தி நிலைமையைப் பொறுத்தவரையில், இத்திட்டத்தின் கீழ் பாரியளவில் நெல் கொள்வனவு செய்வதற்கான உற்பத்தி அளவு குறைவாகவே காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். எனினும், நெல் உற்பத்தி அதிகமாக உள்ள மாவட்டங்களில் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தலில் காணப்படும் சிரமங்களைத் தீர்க்கும் வகையில், உற்பத்தி பகுதிகளையும் கொள்வனவு செய்யக்கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலைகளையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி குறைவாக இருந்தாலும், இத்திட்டத்தின் மூலம் நெல் உற்பத்தியாளர்களுக்கு உரிய சந்தை வாய்ப்பும் நியாயமான விலையும் கிடைப்பதுடன், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் கொள்வனவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் போதியளவு நெல் கொள்வனவு செய்யக்கூடிய உற்பத்தி காணப்படுவதாக, அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். எனவே, நெல் உற்பத்தியாளர்கள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் பொறுப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள், கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதுடன், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள், அதாவது சுமார் 240 நாட்களுக்குள் பெறப்பட்ட நிதியை மீளச் செலுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தை விவசாயிகளின் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து திட்டத்தைச் சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, திட்டத்தின் நோக்கம், நடைமுறைகள், நிதி தொடர்பான பொறுப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடமைகள் தொடர்பான விளக்கக்காட்சி வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடலில் கலந்துகொண்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களது நிறுவனங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் திட்டத்தில் பங்கேற்பது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இணையவழியில் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்சந்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது என அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (28.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தொழிற்சந்தையை சிறப்பாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் தேடுவோருக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர், மாவட்டத்தில் நல்ல ஊதியத்துடன் கூடிய ஏராளமான தனியார் தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், அவை தொடர்பான தகவல்கள் உரிய இளைஞர், யுவதிகளை முழுமையாகச் சென்றடைவதில்லை எனத் தெரிவித்தார். இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் தொழிற்சந்தையின் மூலம் அதிகளவான இளைஞர், யுவதிகள் பயனடையும் வகையில் அவர்களின் விபரங்களை முன்கூட்டியே திரட்டி, தொழில் வாய்ப்புகளுடன் அவர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். தொழில் நாடும் இளைஞர், யுவதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாக தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்யுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். இணையவழிப் பதிவை மேற்கொள்ள முடியாதவர்கள் மாவட்டச் செயலகம் அல்லது தத்தமது பிரதேச செயலகங்களில் இயங்கும் மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு பிரிவுகளில் நேரடியாகத் தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இளைஞர், யுவதிகளின் தொழில் திறன்களை மேம்படுத்துவதுடன், அவர்களது கல்வி, திறமை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற தொழில் வாய்ப்புகளை அடையாளம் கண்டு வழங்குநர்களுடன் நேரடியாக இணைக்கும் முக்கிய தளமாக இத்தொழிற்சந்தை அமையவுள்ளது என மேலும், அரசாங்க அதிபர் தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சந்தையில் நிதி நிறுவனங்கள், தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல், ஹோட்டல் துறை, கணக்கியல், ஆடை உற்பத்தி, பாதுகாப்புச் சேவை, தாதியர் சேவை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், உயர்கல்வி வாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் - கணினித் துறை, தாதியர் பயிற்சி நெறிகள், ஏனைய தொழிற்பயிற்சி நெறிகள், கற்பித்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அவற்றின் ஊடாக தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. க. கருணாகரன், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இணையவழியில் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மூத்த வயதிலும் கல்வியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பாராட்டுக்குரியவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் மத்திய கல்வி அமைச்சின் கல்வி அபிவிருத்தி ஆலோசகருமான கலாநிதி நா. தணிகாசலம் பிள்ளை அவர்கள் எழுதிய “குழந்தமைக் கல்வியும் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளும்” மற்றும் “புலம்பெயர் நாடுகளில் இலகுதமிழ்” எனும் “இருநூல்கள் வெளியீட்டு விழா 26.08.2026 அன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இ. இளங்கோவன் தலைமை வகித்தார். இந் நிகழ்வின் அதிதிகளாக வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட கல்வி, நிர்வாகம், மருத்துவம் மற்றும் சமூகத்துறைகளைச் சார்ந்தவர்கள் சிறப்பித்தனர். இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தனது மூத்த வயதிலும் கல்வியையும் அறிவுத் தேடலையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் எனத் தெரிவித்தார். கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி, ஆசிரியர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த கலாநிதி தணிகாசலம்பிள்ளை, ஓய்வுபெற்று சுமார் 24 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தனது அறிவுத் தேடலைத் தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், தனது மூத்த வயதிலும் சட்டக் கல்வியை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளமை அவரது கற்றல் மீதான அர்ப்பணிப்பையும் அறிவுத் தேடலையும் வெளிப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
முன்பள்ளிக் கல்வி குழந்தையின் எதிர்காலக் கல்விக்கும் ஆளுமை வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகின்ற போதிலும், அதற்குரிய முக்கியத்துவம் கல்விக் கொள்கையில் போதியளவில் உள்ளடக்கப்படாத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்தகைய நூல்கள் மற்றும் ஆய்வுகள் எதிர்கால கல்விக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக இளைஞர்களுக்கு சிறந்த கல்வி, தொழில் மற்றும் தொழில் முயற்சி வாய்ப்புகளை உருவாக்குவது அனைவரதும் பொறுப்பு என வலியுறுத்திய அவர், கல்வியாளர்கள், நிர்வாகிகள், புலமையாளர்கள், வைத்தியர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே மாவட்டத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற நான்கு வைத்திய கலாநிதிகள் கௌரவிக்கப்பட்டமைக்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மருத்துவத்துறையின் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டமை இந் நிகழ்வை மேலும் அர்த்தமிக்கதாக்கியுள்ளது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
நிகழ்வுகள் :
நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன், யா/கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் செல்வன் பு. அபிஷாந்தனால் திருமுறை பாராயணம் இடம்பெற்றது.
தொடர்ந்து யா/வண்ணை நாவலர் வித்தியாலய உப அதிபர் திரு. க. சுகுந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசியுரைகளை
சிவஸ்ரீ இ. சுந்தரேஸ்வரக்குருக்கள், ஆதீனகர்த்தா, (ஸ்ரீசுந்தரேச ஆஞ்சநேயர் ஆலயம், மருதனார்மடம்) மற்றும் சிவஸ்ரீ. கூ.சிவலோகநாத தேசிகர் (ஓய்வு நிலை அதிபர். யா/சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயம். வட்டுக்கோட்டை) ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பும் நூலாசிரியர் அறிமுகவுரையும் சைவப்புலவர், சிவதொண்டர் திரு. N.P. ஸ்ரீந்திரன், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர், வலிகாமம் கல்வி வலயம், அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து “குழந்தமைக் கல்வி” எனும் நூல் தொடர்பான ஆய்வுரையை வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் திரு. சி. தர்மசீலன் வழங்கினார். “ஆரம்பக் கல்விச் செயற்பாடுகள்” நூலுக்கான ஆய்வுரையை ஆரம்பக் கல்விப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. அ. ரவீந்திரன் நிகழ்த்தினார். அத்துடன், “புலம்பெயர் நாடுகளில் இலகுதமிழ்” என்ற நூலுக்கான ஆய்வுரையை வலம்புரி தினச் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் திரு. ந. விஜயசுந்தரம் வழங்கினார். நூல்களின் முதற்பிரதிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் பேராசிரியர் க. தேவராஜா மற்றும் தொழிலதிபர் திரு. சி. சண்முகானந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியக் கலாநிதிகள் கௌரவிக்கப்பட்டனர். முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் த. குகதாசன், பொது வைத்தியர் டாக்டர் சி. சிவன்சுதன், நீரழிவு மற்றும் நரம்பியல் நிபுணர் டாக்டர் சி. அரவிந்தன், பேராசிரியர் டாக்டர் பா. பாலகோபி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு அதிதிகளின் உரைகள் இடம்பெற்றது. மேலும், நிகழ்வில் விசேட உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' திரு. எஸ். லலீசன் அவர்கள் நிகழ்த்தினார். நூலாசிரியரான கலாநிதி நா. தணிகாசலம் பிள்ளை அவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரை இடம்பெற்றது. நிகழ்வின் நிறைவில் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஓய்வுநிலை விஞ்ஞானபாட ஆசிரியர் செல்வி ச. வளர்மதி நன்றியுரை வழங்கினார். கல்வி, சமயம், இலக்கியம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பங்கேற்புடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.







