‘நல்லைக்குமரன் மலர் 34’ (2026) வெளியீட்டு விழா இன்று (19.08.2026) புதன்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சைவ சமய விவகாரக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சைவ சமய விவகாரக்குழுவின் தலைவரும் யாழ்ப்பாண மாநகர ஆணையாளருமான திரு. டெ.க. அரவிந்தராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் கௌரவ (திருமதி) மதிவதனி விவேகானந்தராஜா சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் சிறப்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,
“எமது தமிழர்களின் அடையாளமாகத் திகழும் யாழ்ப்பாண மாவட்டம், தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் செறிந்து வாழ்ந்தாலும், தமிழர்களுக்கென தனித்துவமான அடையாளப் பிரதேசமாக விளங்குகின்றது. அதேபோன்று, யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாக நல்லூர் ஆலயம் திகழ்கின்றது. இந்துக்களினதும் சைவர்களினதும் முக்கிய திருத்தலமாக விளங்கும் நல்லூர் ஆலயம், ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்கின்றது. அத்தகைய சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தை அடியொற்றிய வகையில் ‘நல்லைக்குமரன்’ மலர் தொடர்ந்து 34 ஆண்டுகளாக யாழ்ப்பாண மாநகரசபையினால் வெளியிடப்பட்டு வருவது உண்மையிலேயே வரலாற்றுப் பெருமைமிக்க விடயமாகும். இதற்காகத் தொடர்ச்சியாக உழைத்த மாநகரசபையின் கௌரவ முதல்வர்கள், ஆணையாளர்கள் மற்றும் சைவ சமய விவகாரக்குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
ஒரு மண்ணினதும் ஒரு சமயத்தினதும் பெருமைகளைப் பதிவு செய்து வெளிப்படுத்துகின்ற இம்மலர், எதிர்காலத் தலைமுறைகளுக்கான வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணமாகும். எமது சமயம், பண்பாடு, வரலாறு மற்றும் சமூகப் பெருமைகளைத் தாங்கியதாகத் தொடர்ச்சியாக இம்மலர் வெளிவருவது பாராட்டுக்குரியது. இம்மலரில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பாக ஆய்வுரைகளையும் வெளியீட்டுரையையும் வழங்கியவர்கள் சிறப்பாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளை, யாழ்ப்பாண மாநகரசபையின் சைவ சமய விவகாரக்குழு பல்வேறு சிறப்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வருடம் ‘யாழ் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்படும் தகைசார் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் முனைவர் ச. மனோன்மணி தம்பதியினர் உண்மையிலேயே இவ்விருதுக்குத் தகுதியானவர்கள். யாழ்ப்பாணத்தின் மூத்த தமிழ்ப் பேராசிரியராகவும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளராகவும், சமூக அக்கறையுடன் பணியாற்றுபவராகவும் திகழும் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களையும் அவரது துணைவியாரையும் கௌரவிப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாநகரசபை நல்லூர் மண்ணில் நீண்டகாலமாகத் தனது பணியைத் தொடர்ந்து ஆற்றிவருவது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும். புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, விரைவில் அங்கு செயற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற போதிலும் நல்லூர் முருகப்பெருமானின் அருளால் அவரது புனித மண்ணிலேயே நீண்டகாலமாகத் தனது பணிகளை முன்னெடுத்து வருவது தனிச்சிறப்புக்குரியதாகும். நல்லூர் உற்சவ காலத்தைப் பார்க்கும்போது, முழு யாழ்ப்பாணமும் புனிதமடையும் காலமாகவே அதனை நாம் உணர்கின்றோம். அந்தத் தெய்வீகச் சக்தியோடு வாழுகின்ற பாக்கியம் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த எமக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் நாம் அனைவரும் பாக்கியசாலிகள்” எனத் தெரிவித்தார்.
நிகழ்வுகள் :
இந் நிகழ்வில் வரவேற்பு நடனத்தை செல்வி தி. பிரதிக்க்ஷா வழங்கியதுடன், வரவேற்புரையை பிரதி ஆணையாளர் திருமதி தவலோஜினி நிரோஷ் நிகழ்த்தினார். தொடர்ந்து, ஆசியுரைகளை வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் (பீடாதிபதி, விநாயகான குருபீடம்) மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான ‘செஞ்சொற்செல்வர்’ ஆறு. திருமுருகன் ஆகியோர் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ‘நல்லைக்குமரன் மலர் 34’ வெளியிடப்பட்டதுடன், அதன் முதற்பிரதி கௌரவ ஆளுநர் அவர்களால் வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி. ரமணராஜா மலர் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். தொடர்ந்து பேராசிரியர் ச. முகுந்தன் ஆய்வுரையை வழங்கினார். மேலும், இந் நிகழ்வில் விருந்தினர் உரைகள், ‘யாழ் விருது’ வழங்கிக் கௌரவித்தல், ஏற்புரை, மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தகைசார் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் முனைவர் ச. மனோன்மணி தம்பதியினர் ‘யாழ் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் நிறைவில் சைவ சமய விவகாரக்குழுவின் செயலாளர் திரு. சோ. கணேசநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே. சிவஞானம், பிரதி முதல்வர் கௌரவ இ. தயாளன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபரும் ‘செந்தமிழ்ச் சொல்லருவி’ எஸ். லலீசன், வலம்புரி நாளிதழ் பிரதம ஆசிரியர் திரு. நா. விஜயசுந்தரம், முன்னாள் மாநகர ஆணையர் திரு. வே.பொ. பாலசிங்கம், முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. தணிகாசலம்பிள்ளை உள்ளிட்டோர், சமயப் பெரியார்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
1 2 3 4 6 7 5 9 11 12 13 14 14 15 16 17 17 18
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (18.08.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பெளதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், குறித்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்து திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமானது எனவும் தெரிவித்தார். அத்துடன், இதுவரை மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசாங்க அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். தொழில்நுட்பம், ஆளணி மற்றும் திணைக்களங்களின் கொள்ளளவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காணப்பட்டபோதிலும், அனைத்து திணைக்களங்களும் ஒருங்கிணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பிரதேச செயலக மட்டத்தில் காணப்படும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சின் வேலைத்திட்டங்கள், சமுர்த்தி வேலைத் திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, நிறைவடைந்த திட்டங்கள், நிறைவடையாத திட்டங்கள் மற்றும் அவற்றை நிறைவு செய்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த அரசாங்க அதிபர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், உதவி கமநல சேவைகள் ஆணையாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் பிரதி/உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 87 10 11 14 20
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதிக்கும் வகையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தி, கௌரவ பிரதமர், கௌரவ பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர், இன்று (17.08.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து, தமது மகஜரை கையளித்தனர்.கையளிக்கப்பட்ட மகஜர், உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
1 2
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்று வரும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ. சோதிநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ. உமாமகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவின் இரண்டாவது நாளிலும் வடக்கு மாகாணத்தின் பாரம்பரியத்தையும் பண்பாட்டு தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக, பாரம்பரிய நாட்டிய மற்றும் நடன நிகழ்வுகளுடன், மக்களின் பாரம்பரிய வாழ்வியலோடு தொடர்புடைய வீரதீர விளையாட்டு நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. உள்ளூர் உணவு வகைகள், பாரம்பரிய கலைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் ஊடாக யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16
 
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜாவுக்கு இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இன்று (16.08.2026) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. குறித்த வீட்டை யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்கா பயனாளியான லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜாவிடம் கையளித்தார். இவ் வீடு கையளிக்கும் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கோப்பாய் பிரதேச செயலாளர் நா. தயாரூபன், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 13 15