பிரணவம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “வாழ்வியலில் திருமுறைகள் – திருமுறைகளில் வாழ்வியல்” என்ற தொனிப்பொருளில் முதலாவது சர்வதேச சைவ மாநாடு இன்று (15.08.2026) யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. பேராதனைப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவருமான கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றதுன. இம்மாநாட்டில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், யாழ்ப்பாணத்தில் முதலாவது சர்வதேச சைவ மாநாடு நடைபெறுவது பெருமைக்குரியதும் வரவேற்கத்தக்கதுமான விடயம் எனவும், கடந்த வாரம் சர்வதேச இந்து மாநாடு நடைபெற்ற நிலையில், இவ்வாரம் சர்வதேச சைவ மாநாடு நடைபெறுவது யாழ்ப்பாண மண்ணின் சமய மற்றும் பண்பாட்டு பெருமையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
மனிதனை நல்வழிப்படுத்தி சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை அம்சங்களை சமயங்கள் கொண்டுள்ளன. அந்த வகையில், சைவ சமயமும் மனித வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புடைய உயரிய சிந்தனைகளையும் வாழ்வியல் நெறிகளையும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருமுறைகள் உள்ளிட்ட சமய நூல்கள் மற்றும் சமய அனுட்டானங்கள் மனித வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்றும், திருமூலர் தனது திருமந்திரத்தில் “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளாமணி விளக்கே” எனக் குறிப்பிட்டதன் மூலம் மனித வாழ்வுக்கும் சமயத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார். முன்னைய காலங்களில் ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, மக்களுக்கான நீதிக் கூடங்களாகவும், கல்வி மையங்களாகவும், சமூக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மையங்களாகவும் விளங்கியதாகக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், தற்போதைய நிலையில் சில ஆலயங்களின் நிர்வாகப் பிரச்சினைகள் நீதிமன்ற வழக்குகளாக மாறி வருவது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு கிடைக்கப்பெறும் பல்வேறு முறைப்பாடுகள் ஆலய நிர்வாகப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, ஆலயங்களில் ஒலிபெருக்கிப் பயன்பாடு தொடர்பிலும் சமூகப் பொறுப்புணர்வு அவசியம் எனவும், குறிப்பாக மாணவர்கள் கல்வி கற்கும் மற்றும் பரீட்சைகளுக்குத் தயாராகும் காலங்களில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் எனவும் இது தொடர்பில் ஆலயங்கள் கவனத்தில் எடுத்து சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் ஆலயங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படாமல், சமயப் பெரியோர்கள், ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பல அறநெறிப் பாடசாலைகள் சிறப்பாக இயங்கி வருவதுடன், அவற்றுக்கு சமூக ஆர்வலர்கள் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர். இத்தகைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாக சைவ சமயத்தையும் அதன் வாழ்வியல் நெறிகளையும் எதிர்கால தலைமுறையினரிடம் கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மண்ணில் சைவ சமயம் மேலும் தழைத்தோங்க அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அரசாங்க அதிபர், மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த பிரணவம் அறக்கட்டளையினருக்கு தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். சமய நிகழ்வுகளுடன் ஆரம்பமான மாநாடு : மாநாட்டு நிகழ்வுகள் இன்று காலை 7.00 மணிக்கு நல்லூர் அருளமிகு சட்டநாதர் சிவன் கோயிலில் நடைபெற்ற திருக்கோயில் வழிபாடுகளுடன் ஆரம்பமாகின. இதனைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தை நோக்கிய சிறப்பு ஊர்வலம் இடம்பெற்றது. மாநாட்டு மண்டபத்தில் அருளாளர்களுக்குப் பாதபூசை மற்றும் ஆராத்தி இடம்பெற்றதைத் தொடர்ந்து, விடைக்கொடி ஏற்றுதல், மங்கல விளக்கேற்றுதல், இறை வணக்கம் மற்றும் ஆடல்வல்லானுக்குப் பூசை வழிபாடு உள்ளிட்ட சமய நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றன.
சைவ சமயத்தின் சிறப்புகள், திருமுறைகளின் மகத்துவம், அவை இன்றைய வாழ்வியலுடன் கொண்டுள்ள தொடர்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு சிறப்புரைகள் வழங்கப்பட்டன. மாநாட்டில் , பிரணவம் அறக்கட்டளையின் ஸ்தாபகப் பணிப்பாளர் திரு. சி. ரமேஷ் பாபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சைவ சமயத்தின் தொன்மை, திருமுறைகளில் பொதிந்துள்ள வாழ்வியல் விழுமியங்கள் மற்றும் அவற்றை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இம்மாநாடு, யாழ்ப்பாணத்தின் சைவப் பண்பாட்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. மாநாட்டில் மதத் தலைவர்கள், சமயப் பெரியவர்கள், அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 
1 3 4 5 6 7 8 9
நல்லூர் பிரதேச செயலகமும் நல்லூர் கலாசார பேரவையும் இணைந்து, பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த “பண்பாட்டு – 2026” விழா 14.08.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் (பதில்) திருமதி கி. மாலினி மற்றும் பிரபல வர்த்தகப் பிரமுகரும் “கல்விக் காருண்யன்” திரு. ஈ.எஸ்.பி. நாகரத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் மரபுக் கலைகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்காலத் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகக் கலைஞர் அமரர் சிவகுமாரன் அவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட “சிவகுமாரன் அரங்கு” நிகழ்வு, பாரம்பரிய கலை, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக நல்லூர் சட்டநாதர் ஆலய முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், மங்கல விளக்கேற்றல் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து நல்லூர் கீதவாணி இசைக்கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கல இசை மற்றும் ஆசியுரை நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சு. நிமலன் அவர்களின் அரங்கத்திறப்புரை இடம்பெற்றது.
தொடர்ந்து நல்லைக் கலாமன்ற நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் சிறப்பாக இடம்பெற்றது. இதனையடுத்து ஹிரிமையா நடனக்கல்லூரி மாணவர்களின் கும்மி நடனம், இளங்கலைஞர் மன்றத்தின் நாட்டிய அர்ப்பணம் மற்றும் ஜெயந்தி அபிநயஜோதித்ரா குழுவினரின் காவடிச்சிந்து ஆகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், கலைமன்றங்களுக்கிடையிலான பிரதேச மட்டப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தலைப்பிலான சிறப்பு நடன நிகழ்வு நர்த்தனவேதித்திரா குழுவினரால் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் “கலைஞானச்சுடர்” மற்றும் “இளங்கலைஞர்” விருதுகள் வழங்கப்பட்டன. பத்மராகம் இசைக் கல்லூரியினரால் வேணுகான இசை நிகழ்வும் வழங்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக நல்லூர் கீதவாணி இசைக்கல்லூரி மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து இடம்பெற்று, “சிவகுமாரன் அரங்கு” நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது. நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
 
1 2 3 4 5 6 8 12 14 15 16
 
புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சலியா டயஸ் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (14.08.2026) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி மற்றும் 52 ஆவது படைப்பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (14.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) திரு. ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பொறியாளர் எஸ்.பி.சி. சுகேஸ்வர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்றதுடன், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கீழ் செயற்படும் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக -
க்ளீன் ஐலண்ட் (Clean Island) திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இத் திட்டத்தின் ஊடாக இத்தீவுகளை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இயற்கையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி இத் தீவுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதன் மூலம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க முடியும். இதன் மூலம் தூய்மையானதும் நிலையானதுமான சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். அத்துடன், இத்தகைய இயற்கை வளங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சிறுதொழில்கள், உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். இதன் மூலம் தீவுப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்த முடியும். எனவே, க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் மூலம் இத் தீவுப் பிரதேசங்களை பசுமையான, சூழல் நேயமிக்க மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான பிரதேசங்களாக மாற்றுவதற்கான செயற்பாடுகளை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இதற்காகவே இப்பகுதியின் சமூக அபிவிருத்தி தலைவர்கள், மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக, குறைந்தளவிலான மக்கள் தொகையைக் கொண்ட தீவுப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் கூடுதல் அக்கறை செலுத்தி, அவற்றில் காணப்படும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம், இப்பிரதேசங்களை வளமிக்கதும் பொருளாதார வலிமை கொண்டதுமான பகுதிகளாக மாற்றியமைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
எனவே, இத் திட்டத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பான பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு நோக்கங்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் திரு. ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு அவர்கள் விரிவான விளக்கங்களை வழங்கினார். யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் அவர்கள் தூய்மையான தீவுகள் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்வைப்புக்களை முன்வைத்தார். மேலும், இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், கிளீன் ஸ்ரீலங்கா வடமாகாண இணைப்பாளருமான திரு. எஸ். கபிலன் அவர்கள் கலந்து கொண்டு, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரை வழங்கினார். இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவான கருத்தாடல்கள் இடம்பெற்றன. தீவுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைமயமாக்கல் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், சமூக அபிவிருத்தி சபைத் தலைவர்கள், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய மற்றும் மாகாண மட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
 
0 2 3 4 5 6 7 8 9 11 13 15 16 17 18
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் இறுதிச் செயலமர்வு 13.08.2026 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநல மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) நிதி அனுசரணையுடன், சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் (IWMI) யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மீள்திறன் தொடர்பான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டங்கள் நீர்வளப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், வறட்சியை எதிர்கொள்வதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார்.
நிலத்தடி நீருடன் தொடர்புடைய நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதுடன், பாடசாலை மாணவர்களையும் இணைத்து முழுநாள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வின் முக்கியத்துவம் தற்போதைய நிலத்தடி நீர் நிலைமைகள் தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டுவதில் மட்டுமல்லாது, எதிர்காலத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை ஏற்கவுள்ள இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தங்கியுள்ளது என அரசாங்க அதிபர் தெரிவித்தார். தற்போது மாவட்டத்தில் தாளையடி நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும்போது நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்து, நீர்வளங்களை முறையாகப் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும், இளைய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு இவ்வாறான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பது காலத்திற்கேற்றதும் வரவேற்கத்தக்கதுமான முயற்சி எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கும், இணைந்து செயற்பட்ட அனைத்து திணைக்களங்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11