யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், திணைக்களங்களில் பணி புரிகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் (05.08.2026) யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன், கற்கை நெறியின் வளவாளர் P.G.D சுனில் ஆரியரட்ன, வேலனை ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் எம்.அலெஸரீன், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வடமாகாண இணைப்பாளர் N.உமாகாந் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது கலந்துகொண்டிருந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, 150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களின் கற்கை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், இரண்டாம் மொழித்திறனானது தொழில் முன்னேற்றத்திற்கும் அரச சேவையின் செயற்திறனுக்கும் இன்றியமையாதது. ஏனெனில் இரண்டாம் மொழியான சிங்கள மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்வது அரச அலுவலக பணிகளை இலகுவாக மேற்கொள்ளவும், பதவி உயர்வு உள்ளிட்ட தொழில்முறை முன்னேற்றங்களுக்கும் பெரிதும் உதவும் எனத் தெரிவித்தார். மேலும், 150 மணித்தியால மொழிப் பயிற்சியுடன் கற்றலை நிறுத்திவிடாமல், NVQ உள்ளிட்ட மேற்படிப்புகள் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளின் ஊடாக மொழித்திறனை தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், முன்னைய காலங்களில் சுய கற்றல் ஊடாகவே பெருமளவானவர்கள் மொழி அறிவை மேம்படுத்திக் கொண்டனர். மேலும், Google Translate போன்ற மொழிபெயர்ப்பு செயலிகளை முழுமையாகச் சார்ந்திருக்காமல், முதலில் சிங்கள ஆவணங்களை வாசித்து புரிந்துகொள்ள முயற்சிப்பதன் மூலம் மொழியறிவும் கற்றலின் ஆர்வமும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த மொழிப் பயிற்சியில் பங்கேற்ற பயிலுநர்கள் சிங்கள மொழித் திறனுடன், பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு தனித்திறமைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததை பாராட்டிய மேலதிக அரசாங்க அதிபர், நிகழ்வை ஒழுங்குபடுத்திய ஆசிரியருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தேசிய மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற இக் கற்கை நெறியில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் 64 அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழிவாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையின் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதற்காகவும் இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 2 3 4 5 6 7 8 9 11 1012 13 14 15 16 1719 20 21
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன் அவர்கள், இன்றைய தினம் (06.08.2026) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, டித்வா புயல் அனர்த்தத்தின் போது சிறப்பாக கடமையாற்றிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் அலுவலர் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அரசாங்க அதிபர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார். அதேவேளை, புதிதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன் அவர்களை வரவேற்று, புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், இதுவரை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய திரு. ரி.என். சூரியராஜா அவர்கள், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் உதவிப் பணிப்பாளராக கடமையேற்க்கவுள்ளார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 8 9
தீவகத்தின் கல்வி, கலாசார மரபுகளைப் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம், புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தின் 1926–2026 நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. “ஒரு நூற்றாண்டு கல்விப் பயணம்… தொடரும் எங்கள் சேவையின் கனவு…” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வின் மாலை அமர்வு, பாடசாலை முதல்வர் திருமதி வ. அருட்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர்களான திருமதி ம. தனபாலசிங்கம், செல்வி ம. சுப்பிரமணியம் மற்றும் திரு. நா. பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், தீவகம் தனக்கே உரிய கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களால் சிறப்புப் பெற்ற பிரதேசம் எனக் குறிப்பிட்டார். அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு, கல்வி, தமிழ் இலக்கியம், கலை, கலாசாரம் மற்றும் சமூக விழுமியங்களில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட மண்ணாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
அறிவையும் பண்பாட்டையும் போற்றிய சமூகமாகத் திகழ்ந்த புங்குடுதீவு, பல அறிஞர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களை உருவாக்கிய பெருமைமிக்க நிலம் என்றும் எனத் தெரிவித்தார். அந்தப் பாரம்பரியத்தின் அடையாளமாக நூற்றாண்டுக்கு முன்பு முன்னோர்களின் அர்ப்பணிப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் ஆரம்பிக்கப்பட்ட இவ்வித்தியாலயம், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கல்வி நிறுவனமாக திகழ்கிறது என்றும் பாராட்டினார். மேலும், தீவகத்தின் அபிவிருத்தியை புறக்கணிக்காமல் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக கடந்த ஆண்டு வீதி அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் என்றும் தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் வாழும் தீவகத்தைச் சேர்ந்த புலம்பெயர் மக்கள், தாம் பிறந்து வளர்ந்த மண்ணின் கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் மற்றும் சமூக விழுமியங்களைப் பாதுகாத்து முன்னேற்றுவதில் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், அதுவே இப்பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு வலிமையாகக் கொண்டு செல்லும் சிறந்த வழியாக அமையும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதால், பழைய மாணவர்கள், புலம்பெயர் உறவுகள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் தமது தாயகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் செந்தமிழ் சொல்லருவி எஸ். லலீசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கல்வி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நினைவுப் பாராட்டு நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாவை சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6 7 8 10 11 13
மானிப்பாய் மருதடி முன்பள்ளியின் "விளையாடுவோம் மகிழ்வோம்" விளையாட்டு விழா மானிப்பாய் மருதடி வித்தியாசகர் ஆலய தர்மகர்த்தா சபையின் கல்விக்குழு பொறுப்பாளர் திரு. T. பிரதீபன் அவர்கள் தலைமையில் 05.08.2026 அன்று மானிப்பாய் மருதடி முன்பள்ளிக்கு அருகிலுள்ள கோயில் வீதி அமைந்துள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டார். மேலும், செல்வகுமாரி சுப்பிரமணியம் (முன்னாள் ஆசிரிய ஆலோசகர், வலிகாமம் வலயம்), திரு. சிறில் பேஸ்ரட்‌ணம் (ஆசிரிய வளவாளர், முன்பள்ளி வலிகாமம் வலயம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், திரு. T. தர்மாகரன் (தலைவர், மாணிப்பாய் மருதடி வித்தியாசகர் ஆலய தர்மகர்த்தா சபை) கௌரவ விருந்தினராகவும் கலந்து கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், மனித வாழ்க்கைப் பருவங்களில் முன்பள்ளிப் பருவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு குழந்தை குடும்பச் சூழலிலிருந்து முதன்முறையாக வெளி உலகுடன் தொடர்பு கொண்டு சமூகத்துடன் இணையும் இடம் முன்பள்ளியாகும் எனவும், முன்பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி, அறிவு வளர்ச்சி மற்றும் சமூகமயமாக்கல் செயற்பாடுகள் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன எனத் தெரிவித்தார். மேலும், ஒரு குழந்தை குடும்பச் சூழலிலிருந்து சமூகச் சூழலுடன் முதன்முறையாக கலக்கும் இடம் முன்பள்ளி என்பதால், அங்குப் பெறும் அனுபவங்களும் கற்றல்களும் அதன் எதிர்கால வாழ்க்கையை நேர்மறையாக வடிவமைக்கின்றன எனவும், நாட்டின் பல பகுதிகளில் முன்பள்ளிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன எனவும் தெரிவித்தார். அவற்றில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
மேலும், முன்பள்ளியே ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதல் கல்விப் படியாகும். அந்த வகையில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இம்முன்பள்ளி, குழந்தைகளுக்கு கல்வியுடன் சமூகப் பண்புகள், குடும்ப விழுமியங்கள், ஆன்மிக நெறிமுறைகள் மற்றும் நல்லொழுக்கங்களைப் போதிக்கும் சிறந்த சூழலை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்தார். இன்று இம்முன்பள்ளி மாணவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். இவ்வாறான போட்டிகள் குழந்தைகளின் உடலாரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் வளர்க்கின்றன எனவும், முன்பள்ளியில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கம், சமூகப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் குழந்தைகள் வளர்ந்து முழுமையான ஆளுமையுடன் சமூகத்தில் திகழும் காலத்திலும் அவர்களுக்கு பெரும் பயனை அளிக்கும். எனவும் தெரிவித்தார். ஆரோக்கியமானதும் பொறுப்புணர்வுமிக்கதுமான எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதில் முன்பள்ளிகள் மிகப் பெரிய பங்காற்றுகின்றன என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 7
யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ருவான் ரணசிங்க அவர்களின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான உபகுழுவின் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் ஆகியோரின் பங்கேற்புடன், இன்று (04.08.2026) பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதையடுத்து, சுற்றுலா மேம்பாடு தொடர்பான உபகுழுவின் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு நோக்கங்களை விளக்கமளித்தார்.
இக் கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறிப்பாக, சுற்றுலாத்துறை அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 130 மில்லியன் நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டதுடன், அவற்றை துரிதப்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கருத்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் இயற்கை, பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சுற்றுலா வளங்களை மேலும் மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர கௌரவ பிரதி முதல்வர், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், சுற்றுலாத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) எச்.பி. சோமதிலக, சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) எஸ்.எல். நசீர், வடக்கு மாகாண சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அ. சோதிநாதன், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 11 13 14 15