"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உரையாற்றினார். அரசாங்க அதிபர் தமதுரையில், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் தேசிய முன்னுரிமை செயற்பாடுகளாக Clean Sri Lanka, டியிற்றல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய மூன்று முக்கிய திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் குறித்து அனைவரும் நன்கு அறிந்தவர்கள் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன்,
அந்த வகையில், Clean Sri Lanka தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக பல்வேறு செயற்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக அரச சேவைக்கான நேர்மைக் கலாச்சாரத்தை உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இது அனைவரின் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய பொறுப்பாகும். ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம்” என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிகழ்வு அந்த நேர்மை வாரத்தின் முதலாவது நிகழ்வாகும். ஒவ்வொரு அமைச்சுக்கும் தனித்தனி தினங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றின் பொறுப்புகளுக்கு அமைவாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இன்று “சட்டத்தை மதிப்போம் – நேர்மைமிக்க அரசு சேவை” என்ற தொனிப்பொருளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
ஒரு அரச உத்தியோகத்தரிடம் இருக்க வேண்டிய நேர்மை, பொறுப்புணர்வு, கடமை உணர்வு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை நாம் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொதுமக்களுக்கு திறமையான, வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவது எமது அடிப்படைப் பொறுப்பாகும் எனவும், அரச சேவையின் திறன், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். அதற்காக ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தமது பணிப்பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற வேண்டும்.
இன்று நாம் மேற்கொண்டுள்ள நேர்மை உறுதிமொழி ஒரு அரச சேவையாளர் எவ்வாறு தமது கடமைகளை உயர்ந்த ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது எனத் தெரிவித்தார். ஆதலால், மாவட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் ஒவ்வொரு உத்தியோகத்தரும் தங்களது பணிகளை நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் மேற்கொண்டு, பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். அதுவே “நேர்மையான அரசு சேவை – தூய்மையான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கான உறுதியான அடித்தளமாக அமையும் எனவும் தெரிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்கும் வகையில் "நேர்மையான கலாசாரம் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம் 2026 ஜுலை 27 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வெறுமனே ஒரு வாரத்துக்கு மட்டும் மட்டுப் படுத்தப்பட்ட ஒரு நினைவு தின விழாவாக கருதாது அரச சேவையின் அடித்தளத்தை நிலையானதாக மாற்றியமைக்கும் குறுங்கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான ஒரு அணுகுமுறையாக கருதி செயற்படுத்தப்பட்டுள்ளது.
 
 
2 4 5 6 9 10 13 14 15
இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் "யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம், பண்பாடு, ஆளுமை" என்ற நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் (26.07.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் தலைமையில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி அவர்கள் பங்கேற்றார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், இந் நூல் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல், இலக்கியம், பண்பாடு மற்றும் ஆளுமை ஆகியவற்றை மட்டுமன்றி, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தின் ஒப்பற்ற ஆளுமையாக உலகிற்கு அடையாளப்படுத்தும் படைப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தின் ஆளுமைக்குரிய உயரிய பண்புகளைத் தன்னகத்தே கொண்டவராக பேராசிரியர் சிவலிங்கராஜா திகழ்வதாகவும், தனது எண்பதாவது வயதிலும் இத்தகைய அரிய நூலை வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்க சாதனையெனவும் தெரிவித்த அவர், பேராசிரியர் நூறாண்டுகள் நலமுடன் வாழ்ந்து தமிழுக்கும் சமூகத்திற்கும் மேலும் பல அரிய நூல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தாம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்திலிருந்தே பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களை சிறந்த ஆசிரியராகவும், தமிழ் உணர்வாளராகவும், மாணவர்களை அன்போடு வழிநடாத்தும் தந்தைபோன்ற ஆளுமையாகவும் அறிந்திருந்ததாக தெரிவித்தார். பின்னர் நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கின்ற தற்போதைய காலங்களிலும் மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேராசிரியர் வழங்கிய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் பெரும் துணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற தமிழ்மொழித் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பேராசிரியருடன் கலந்துரையாடியபோது, தமிழ்மொழியின் ஆழமும் அதன் சமூகப் பெறுமதியும் குறித்து அவர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்கள் நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரிய குறைபாடுகளில் ஒன்று வரலாறு, மொழி மற்றும் இன அடையாளம் சார்ந்த ஆவணங்களை முறையாகப் பதிவு செய்யாமையாகும் என்றும், அந்தக் குறையைப் போக்கும் பணியில் பேராசிரியர் சிவலிங்கராஜா போன்ற அறிஞர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். "யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம், பண்பாடு, ஆளுமை" நூல், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான இலக்கிய மரபு, பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஆளுமைகளை ஆவணப்படுத்தும் அரிய பொக்கிஷமாகும் என்றும், இது ஒரு நூலாக மட்டுமன்றி ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு மரபை பாதுகாக்கும் வரலாற்று ஆவணமாகவும் திகழும் என்றும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் தமிழின் வளர்ச்சிக்காக இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும், எளிமை, மனிதநேயம், பணிவு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட சிறந்த அறிஞராக அனைவரின் மதிப்பையும் பெற்றிருப்பதாகவும் அரசாங்க அதிபர் பாராட்டினார். மேலும் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் நீண்ட ஆயுளுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளை ஆற்றி, வருங்கால சந்ததிகளுக்கும் தமிழின் பெருமையை எடுத்துச் செல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வரவேற்புரையைக் கலாநிதி சி.பத்மராஜா நிகழ்த்தினார். இலங்கைத் தமிழியற் கழகத்தின் தலைவர் கலாநிதி க.இரகுபரன் நூல் வெளியீட்டுரையை வழங்கினார். மேலும் நூலின் முதற் பிரதியை இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எஸ்.பரமராஜா பெற்றுக்கொண்டார். வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் மதிப்பீட்டுரையையும், தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வாழ்த்துரையையும் வழங்கினார். இந் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
1 2
 
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் 2026 ஆம் ஆண்டுக்கான ஒரு தேசிய நிகழ்வாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (24.07.2026) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்தைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையினரின் தமிழ்த்தாய் வாழ்த்து, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் தமிழ் மொழி வாழ்த்து, லாஸ்யமதி நடன மன்ற மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆகிய நிகழ்வுகளுடன் விழா ஆரம்பமானது.
பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவிருந்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் சமூகமளிக்க இயலாத நிலையில், அவரின் வாழ்த்துச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் கௌரவ எஸ். சாய் முரளி, அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. திலக் நந்தன கெட்டியாராச்சி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர். அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட "தமிழ் மொழி வளர்ச்சியில் இலங்கையர் பங்களிப்பு" என்ற நூலை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் வெளியிட்டு, அதன் முதல் பிரதியை இந்தியத் துணைத் தூதுவர் கௌரவ எஸ். சாய் முரளி அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் சிறப்புப் பிரதிகள் சிறப்பு அதிதிகளுக்கும் வழங்கப்பட்டன. நூல் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சுவாமிநாதன் விமல் அவர்கள் நிகழ்த்தினார். சுவாமி விபுலானந்தர் நினைவஞ்சலியும் ஞாபகார்த்த உரையும் சிவபூமி அறக்கட்டளையின் நிறுவுனர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் கலை அம்சங்களாக யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் நாட்டார் இசைமாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறையின் நாட்டிய நாடகம் மற்றும் திருநெல்வேலி அனுராகம் கவின்கலை நிலையத்தின் “பல்லியம்” கலைநிகழ்ச்சி என்பன அரங்கேறின. இறுதியாக மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந் நிகழ்வில் அரசகரும மொழித் திணைக்கள ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், ஏராளமான கலைஞர்கள், கலை ரசிகர்கள், மாநகர கெளரவ பிரதி முதல்வர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத குருமார்களுக்கான சமயப் பயிற்சியில் சித்தியடைந்த மத குருமார்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி (சிங்களம்) பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையிலும், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. திலக் நந்தன கெட்டியாராச்சி அவர்களின் பங்கேற்புடனும், இன்றைய தினம் (24.07.2026) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத குருமார்களுக்கான சமயப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 23 மத குருமார்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி (சிங்களம்) பாடநெறியை பூர்த்தி செய்த 87 அரச உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந் நிகழ்வில் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் (மொழிப்பயிற்சி) திரு. டி.டி.எஸ்.எம். ஜெயவீர, ஆணையாளர் (மொழிபெயர்ப்பு) திரு. சமிந்த மகலேகம, பிரதம கணக்காளர் திரு. எஸ். விக்னராஜ், மொழி ஆய்வுகூட மேற்பார்வையாளர் திரு. லசித் நாலந்த மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, இரண்டாம் மொழி (சிங்களம்) வளவாளர்களான திரு. ஏ. சிறிரங்கன் மற்றும் திரு. எஸ். நந்தன், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வட மாகாண ஒருங்கிணைப்பாளருமான திரு. நடராஜா உமாநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
 
 
1 3 9 6 5
 
 
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் (23.07.2026) விஜயம் மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். கெளரவ அமைச்சர் தலைமையிலான குழுவினர் குறித்த புராதனக் கட்டடத்தை பார்வையிட்டதுடன், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலைப் பெறுமதிகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள், புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.
மேலும், குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு, புனரமைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அவர்கள் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இக் களவிஜயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
1 3 4 5