தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டு ஊர்வலம் இன்றைய தினம் (24.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி முன்றலில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, வைத்தீஸ்வராக் கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் காங்கேசன்துறை வீதி, சத்திரச் சந்தி, வைத்தியசாலை வீதி, கார்கில்ஸ் சந்தி மற்றும் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று காலை 10.30 மணியளவில் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தை வந்தடைந்தது. இவ்வூர்வலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலை நிகழ்வுகளுடன் புரவி நடனம், பொய்க்கால் குதிரை, கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி நடனம், செம்பு நடனம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், உடுக்கு, இன்னியம், தவில்–நாதஸ்வர இசை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. மேலும், தமிழ் மொழி மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அலங்கார கலாசார ஊர்திப் பவனியும் ஊர்வலத்திற்கு தனிச்சிறப்பைச் சேர்த்தது.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.07.2026) முற்பகல் 11.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் திண்மக் கழிவு அகற்றல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருகின்ற போதிலும், அவை கலந்துரையாடல்களுடன் மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
மேலும், சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் தமது அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களை மேலும் சிறப்பாக முன்னேடுத்தால் பொதுமக்கள் எவ்வித இடையூறுகளுமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். திண்மக் கழிவு அகற்றல், ஒலிபெருக்கி பாவனை உள்ளிட்ட சுற்றாடல் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு காணப்படுகின்ற போதிலும், சிலர் விதிமுறைகளை மீறி இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயற்பட்டு வரும் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1.திண்மக் கழிவு முகாமைத்துவம் :
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான காணித் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தீர்வாக, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் சேகரிக்கப்படும் கழிவுகளை அந்தந்த பிரதேசங்களிலேயே முறையாக முகாமைத்துவம் செய்வது பொருத்தமானது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2.சட்டவிரோத எரியூட்டல் நடவடிக்கைகள் :
வீடுகள், வீதிகள் மற்றும் திறந்த வெளிகளில் கழிவுகளை எரியூட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றால், பொலிஸாரினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
3.ஒலிபெருக்கி பாவனை தொடர்பான கட்டுப்பாடுகள் :
ஒலிபெருக்கி பாவனையினால் பொதுமக்களுக்கு அதிக இடையூறுகள் ஏற்படுமாயின், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டு, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை ஒலிபெருக்கி பாவனைக்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
4.மரணச் சடங்குகளில் வெடிகொழுத்தல் :
மரணச் சடங்குகளின் போது வெடிகொழுத்தல் மேற்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
5.டெங்கு கட்டுப்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் :
டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பில் ஜூன் மாதத்தில் 79 பேரும், ஜூலை மாதத்தில் 162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று நாள் விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், தொடர்ச்சியான கண்காணிப்புகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
உள்ளூராட்சி நிறுவனங்கள் திண்மக் கழிவுகளை அகற்றும் போது, கழிவு சேகரிப்பு கொள்கலன்களை முறையாக அமைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிரதேச செயலாளர்கள் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக சபைகளுடன் கலந்துரையாடி, பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் திண்மக் கழிவு முகாமைத்துவம், டெங்கு கட்டுப்பாடு மற்றும் ஒலிபெருக்கி பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
6.மணல் அகழ்வு தொடர்பான விடயம் :
மணல் அகழ்வு தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வீட்டுத் திட்டங்களுக்கான மணலைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபை தவிசாளர்கள், செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
 
அமரர் வயலின் வித்துவான் பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணா அவர்களின் நினைவாக, அவரின் பெயரில் வீதிக்கு பெயர் சூட்டும் நிகழ்வும் நினைவுரை நிகழ்வும் இன்று (23.07.2026) வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு, சுன்னாகம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் கௌரவ ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வயலின் வித்துவான் லக்ஷ்மிநாராயணா வீதி எனப் பெயரிடப்பட்ட பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து வட இலங்கை சங்கீத சபை மண்டபத்திற்கு புதிதாக பெயரிடப்பட்ட வீதியிலிருந்து அதிதிகள் இன்னிசை அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி வரவேற்புரையையும், உடுவில் பிரதேச செயலாளர் திருமதி பொ. பிறேமினி அறிமுக உரையையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பாக இராமநாதன் நுண்கலைப்பீட மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, கௌரவ அமைச்சர் மற்றும் சிறப்பு அதிதிகள் உரையாற்றி, பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணா அவர்களின் இசைப் பங்களிப்புகளையும் பண்பாட்டு மரபிற்கான சேவையையும் பாராட்டினர். இந் நிகழ்வின் நிறைவாக, அன்னாரின் புதல்வரும் உலகப் புகழ்பெற்ற வயலின் வித்துவான் டாக்டர் ல. சுப்பிரமணியம் அவர்கள் ஏற்புரையாற்றினார். இந் நிகழ்வில் மதத் தலைவர்கள் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
 
 
 
யாழ்ப்பாண மாவட்ட உணவுப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2025) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவு உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மாவட்டத்தின் வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி, போசாக்கும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், விவசாயத் திணைக்களமும் பிரதேச செயலாளர்களும் இணைந்து உணவு உற்பத்தி தொடர்பான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு, அவற்றுக்கான முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் காணப்படும் காணிகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக அடையாளம் கண்டு, அவற்றை பயிர்ச் செய்கைக்காக குத்தகை அடிப்படையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. முதற்கட்டமாக கோப்பாய், உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் பரீட்சார்த்தமாக அமுல்படுத்தப்படவுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தால் மாவட்டத்திற்கான மூன்று ஆண்டுகால உணவுப் பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி அமைப்புகளும் பிரதேச சபைகளும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனுடன், பிரதேச செயலக மட்ட விவசாயக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், எதிர்வரும் எல்-நினோ காலநிலையை முன்னிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆலோசனைகள், வீட்டு தோட்டங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் தரமான விதைநெல் உற்பத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், மாவட்ட புள்ளிவிபரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம். வித்தியானந்தநேசன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், விவசாயம், மீன்பிடி, கால்நடை உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 4 6 8
 
“பனை வளம் – நிலையான வாழ்வின் பலம்” என்ற தொனிப்பொருளில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் செ. அகல்யா அவர்களின் தலைமையில் இன்று (22.07.2026) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூர், முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணைத் தூதுவர் கௌரவ சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ஜூலை 22 முதல் 26 வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடவும், பொருட்களை கொள்வனவு செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு தரமான உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்திகளை இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் நாடா வெட்டி கண்காட்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றலும் இடம்பெற்றது. பின்னர் அவர்கள் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டதுடன், வரவேற்பு நடனம், கும்மி நடனம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் ஜூலை 22 முதல் 28 வரை "பனை வாரம்" அனுசரிக்கப்படுகிறது. பனை வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்துதல், பனைசார் உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் மற்றும் அவற்றின் சந்தைப்படுத்தலை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் பனை விதை நடுதல், பனைசார் உற்பத்திப் போட்டிகள், பாடசாலை மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், "தாலம்" சஞ்சிகை வெளியீடு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் வடக்கு மாகாண பனை மற்றும் தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், சம்மேளனப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27