இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமை (NVQ 3) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு.ஜெயநாத் கேரத் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.07.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார்.
இவ் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் மின்னியலாளர்கள் பயிற்சியை பெற்றிருந்தாலும் தேசிய தொழில்தகைமை சான்றிதழ் என்பது சர்வதேச ரீதியாக வலுப்பெற்ற சான்றிதழ் எனவும், இப் பயிற்சியை பெற்றவர்களுக்கு இது ஒரு சமூக அங்கீகாரமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொருவரதும் தகுதிகள் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த மின்னியலாளர்களுக்கான பயிற்சிநெறி வழங்கப்பட்டதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளிமாவட்டத்திலிருந்து தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும், அதனை ஆராயும் போது இங்குள்ள தொழிலாளர்களில் குறிப்பிடப்பட்டவர்களின் சேவை வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமானதாக இன்மையால் வெளிமாவட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையுள்ளதாக அறியப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை எமது தொழிலாளர்கள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட இந்த தேசிய தொழில் தகைமை சான்றிதழ் மூலமாக வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவையை வழங்க கூடிய மனப்பாங்கை அனைவரும் வளர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இவ்வாறு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குதல் மூலமாக நிச்சயமாக வருமான மட்டம் உயர்வடையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, மின்னியலாளர்கள் இத்துறை சார்ந்து பூரண அறிவோடு இருப்பதாகவும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால் சமுதாயத்தில் உயரிய வாழ்வு கிடைக்கும் எனவும் சமுதாயத்தின் திருப்தி உங்களின் கைகளில் காணப்படுவதாகவும் நவீன உலகில் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய திறன்களை வளர்த்துக்கொண்டு இவ்வுலகிலே தொழில் விற்பனராக மிளிர வேண்டும் எனவும் தெரிவித்து, தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்சி பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும், இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (தொடர்பாடல்) திரு. ஏ. ஜெயசூரியன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் திரு.ஆர். திருமுருகன், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு. கே. கருணாகரன், மாவட்ட திறன் விருத்தி மாவட்ட இணைப்பாளர் திரு.நீலாம்பரன், பயிற்சியை நிறைவு செய்த மின்னியலாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், அதிமேதகு சனாதிபதி மற்றும் கெளரவ அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட "யாழ்ப்பாண மாவட்டச் செயலக மடல்" - இன்றைய தினம் (09.07.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண அவர்களிடம் அமைச்சில் வைத்து கையளித்து வெளியிடப்பட்டது. மேலும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கெளரவ பி. ருவன் சேனாரத் மற்றும் அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோக பண்டார ஆகியோரிடமும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக மடல் அரசாங்க அதிபரால் கையளிக்கப்பட்டது.
 
1 2 3 4 5 6
வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பான செயலமர்வு இன்றைய தினம் (08.07.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எந்திரி என். சுதாகரன், SEA ஆலோசனை, நிறுவன பொது முகாமையாளர் டாக்டர். நரேந்திர டி சில்வா, Oriental Consultants Global Co அணியின் தலைவி திருமதி. டொமோகோ ஹட்டோரி ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இச் செயலமர்வின் தொடக்கவுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இச் செயலமர்வின் கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், நிலை பேண்தகு சக்தி அதிகார சபையினுடைய ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இச் செயலமர்வில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சக்திவளம் தொடர்பான கலந்துரையாடலாகவும் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வட மாகாணத்தின் மாவட்ட செயலாளர்கள் இது தொடர்பான விடய அறிந்துள்ளவர்களா இருப்பதனால், இது தொடர்பாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாகவும், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான விடையதானங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள், பிரதேச சபையினுடைய செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவியுடன் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொருவரும் தங்களுடைய பிரதேசம் மற்றும் கிராமத்தின் புதுப்பிக்கத்தக்க சக்தி வளம் தொடர்பான தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்க அதிபர் இதன்போது மேலும் தெரிவித்தார். திட்டத்தின் மூலோபாய
நோக்கமானது வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை ஆதரிப்பதற்காக SLSEA ஒரு மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டை (SEA) ஆரம்பித்துள்ளது. இது நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதையும், மூலோபாய திட்டமிடலை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கி ADB-யின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை CEA 2025 செப்டம்பரில் வெளியிட்ட ToR-க்கு அமைய இது நடத்தப்படுகிறது.
SEA என்பது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்சிகளில் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய திட்டமிடல் கருவியாகும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களை அடையாளம் காணவும், தீர்வுகளை ஆராயவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. இச் செயலமர்வில் பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டன. இச் செயலமர்வில் வட மாகாண மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 11 13
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.072026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக துரிதமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கலந்து கலந்துரையாடுவதற்காக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களில் டெங்கு தாக்கம் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த முதலாம் திகதியில் இருந்து 7ஆம் திகதி வரை 65 ஆக அது உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் தொடர்ச்சியாக இதனை கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் அதற்காக இந்த அவசர கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த வாரத்திற்கு முதல் வாரம் ஜனாதிபதி செயலகத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் கிராம அலுவலகங்களிலும் டெங்கு கட்டுப்பாட்டுவாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் அதனை கண்காணிப்பதற்கும் இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
01. பிரதேச செயலாளர் தலைமையில் செயலக டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தை இந்த வாரம் / அடுத்த வாரத்துக்குள் நடாத்துமாறும் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு செயலணிக் கூட்டத்தை கிராம அலுவலர் தலைமையில் உடனடியாக நடாத்தப்பட்டு சிரமதானப்பணிகள் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
02. யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் - ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணி இடம்பெற வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
03. டெங்குக்கட்டுப்பாட்டுக்குழு ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதிக்குள் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு திடீர் களப்பணி மேற்கொண்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
04. விழிப்புணர்வு வாரத்தினை இம் மாதம் - ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் ஜூலை 13ஆம் திகதி சகல வணக்கஸ்தலங்களிலும், 14ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், 15 ஆம் திகதி பாடசாலைகளிலும் தனியார், உயர்கல்வி நிறுவனங்களிலும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திரு.கேதீஸ்வரன், கௌரவ தவிசாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 10
8 11 12
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பும் மகிழ்வான மறுமலர்ச்சி வலைப்பின்னலும் மறுமலர்ச்சி நோக்கிய ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை இன்றைய தினம் (07.07.2026) வைத்தியசாலை வீதியிலுள்ள தொடர்பகம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாற்றம் அறக்கட்டளையினால் யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் மற்றும் வளர்பிறை உளவளத்துணை நிலையத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் ஒரு கூட்டு செயற்பாடாகும். இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில், இச் செயலமர்வின் தலைப்பிலேயே அதாவது ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான மறுமலர்ச்சியான வலைப்பின்னலும் என்ற தலைப்பிலேயே முழுமையான விடயமும் உள்வாங்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும், மாற்றம் அறக்கட்டளை நிறுவனமானது சமூகத்தில் நல்ல மார்க்கங்களை கொண்டு வர வேண்டும் என்ற நீண்ட கால பணியில் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், இவ்வாறானதொரு தலைமைத்துவம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் சமூகத்திலே போதையற்ற வாழ்வை கொண்டு வர வேண்டும் என்ற மாற்றத்தின் முயற்சிக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும் சமூக வலைப்பின்னல் என்ற விடயத்தை நோக்கும் போது சமூகத்தில் பல்வேறு பாதகமான வலைப்பின்னல்கள் அமைப்புக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக போதையை முனைப்பாக மேற்கொள்ளக்கூடிய வலைப் பின்னல் அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மாற்றம் அறக்கட்டளை நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். பிரதேச மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு முதலில் நன்றிகளை தெரிவிக்க வேண்டும் எனவும், ஏனெனில் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என கடமையாற்றி வருவதாகவும் அவர்களின் நல்ல சிந்தனைகள் எண்ணங்கள் போன்றவை சமூகத்தில் ஆரோக்கியத்தை கொண்டு நல்ல மனப்பாங்கை வளர்க்க இப்பயிற்சிகள் உதவும் எனவும் "மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்வோம் "எனும் கோட்பாடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எமது மாவட்டத்தை பொறுத்தவரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த அனைவரும் முனைப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் அதற்கு அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் சிறுவர்களை, இளைஞர்களை, யுவதிகளை வழிப்படுத்த வேண்டும் எனவும் சமூகத்தில் இச் செயற்பாடுகளுக்கு முரண்பட்டு நிற்கின்ற வகுதியினரும் காணப்படுவதாகவும் அவர்களையும் ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் கிராமங்களிலும் ஆரோக்கியமான மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் சமூகத்தில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் குடும்பத்தையும் சமூகத்தையும் ஒருங்கிணைந்த வகையில் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற பல்வேறு விடயங்களை இன்றைய வளவளர்கள் பயிற்சிகள் மூலம் வழங்கவுள்ளதாகவும் ஆற்றல்களை வளர்ப்பதோடு மட்டுமல்ல அறிவு திறனுடன் செயற்பட நல்ல மனப்பாங்கு தேவைப்படும் எனவும் அந்த மனப்பாங்குடன் இயன்றளவு சமுதாயத்தை மாற்ற வேண்டும். இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும் இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் மாவட்ட செயலகமும் உறுதுணையாக நிற்கும் எனவும் தெரிவித்தார். இந் நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்கலாநிதி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார், யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் முதன்மை ஆலோசகர் அருட்பணி பா.அன்றனி ஜேசுதாசன் அடிகளார், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் உ.தர்ஷினி, ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி கோகிலா மகேந்திரன் மற்றும் துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இச் செயலமர்வில் "ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புத் திறன்கள்" எனும் தலைப்பில் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களும், "சமகால போதைப்பாவனையில் எழும் சவால்களும் குடும்பக் குழப்பங்களும்" எனும் தலைப்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் யாழ் மாவட்ட மற்றும் வடமாகாண இணைப்பாளர் திருமதி சியாமினி வயலற் அயந்தன் அவர்களும், "போதை நீக்க உத்திகளும் குணமாக்கலுக்கான குழும மற்றும் சமூக அணுகுமுறைகளும்" எனும் தலைப்பில் மாற்றம் அறக்கட்டளை தாபகர் மற்றும் நிறைவேற்றுக் குழுத்தலைவர் அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அமதி அவர்களும், "சமூக விடியலுக்கான வலைப்பின்னலும் வழிகாட்டல் திறன்களும்" எனும் தலைப்பில்
வளர்பிறை உளவளத்துணை நிலைய இயக்குனர் அருட்பணி சூசை டேமியன் அமதி அவர்களும், "தலைமைத்துவமும் தகைமைகள் பகிர்தலும்" எனும் தலைப்பில் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் மற்றும் கல்வியமைச்சின் நிபுணத்துவ ஆலோசகர் கலாநிதி பா. தனபாலன் அவர்களும், "மாணவர்களுக்கான ORAS தூண்டுதலும் குழு ஆதரவும்" எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர்திரு ராஜேஸ் கண்ணா அவர்களும், "தொடர்பாடலும் குணமாக்கலும்" எனும் தலைப்பில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் மாற்றம் இயக்குனர் அறக்கட்டளை திரு. பே. பெனிக்னஸ் ஆகியோர் தொடர்ந்து ஐந்து நாட்கள் விரிவுரையாற்றவுள்ளனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10