வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட 'கிராமிய வாழ்விற்கான ஒளியூட்டல் திட்டத்தின்' யாழ் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் (06.07.2026) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் சிறப்புற நடைபெற்றது. யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.மலரவன் அவர்களினால் உருவாக்கப்பட்ட இத்திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தை தொடர்ந்து நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் முதற் கட்டமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இத்திட்டத்தில் அங்குரார்பண நிகழ்வுடன் சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் எம்.மலரவன் திட்டத்தின் நோக்கம் மற்றும் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து விளக்கமளித்தார். இதனூடாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனையுடன், கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து கண் பிரச்சினைகள் உள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு மூக்கு கண்ணாடி மற்றும் வெண்புரை சத்திர சிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களின் கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு சுகாதார உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், மருத்துவ நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ அவர்கள் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (06.07.2026) அரசாங்க அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பாக அரசாங்க அதிபர் தம்முடன் தொலைபேசியில் கலந்துரையாடி பொதுமக்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். இக் கலந்துரையாடலில் பின்வரும் மேலதிக விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய ஆணையாளர் தெரியப்படுத்தினார். 2023 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதிய 2334/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 01/01/2024 முதல் கட்டாயமாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்து பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் 2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித்திருத்தச்சட்டத்துக்கு அமைவாக 01/04/2026 முதல்
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பின்வரும் விடயங்களுக்கு அத்தியாவசியமானது எனத் தெரிவித்தார்.
1.வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு
2.கட்டடத் திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்கு
3. ஒரு மோட்டார் வாகனத்தின் பதிவிற்கு
4.மோட்டார் வாகன உரிமம் புதுப்பிப்பதற்கு
5.நிலத்தின் பதிவு அல்லது நிலத்தின் உரிமை மாற்றத்திற்கு
6. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கு
7.கிரெடிட் கார்ட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாகின்றது என ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பின்வரும் இலகு நடவடிக்கை மூலம் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரியப்படுத்தினார்.
பதிவு செய்திருப்பின் QR குறியீட்டை பயன்படுத்தி அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் IRD பதிவு / சான்றிதழை சரிபார்க்கவும் என்ற இணைப்பினூடாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு OTP இலக்கத்தைப் பெற்று TIN. இலக்கத்தை பார்வையிட முடியும்.
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும் எனவும் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது. பிராந்திய ஆணையாளருடனான இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன், திட்மிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.

நெடுந்தீவில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தினை 40 மில்லியன் ரூபாவில் கட்டுமானம் செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் (05.07.2026) மு. ப 11.30 மணிக்கு நெடுந்தீவில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என் பிரபாகரன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந் நிகழ்வில் 20 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலைகள் கெளரவ அமைச்சர்களால் வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான புத்தக பைகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மானிப்பாய் காளி விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த 24 அரச திணைக்கள அணிகள் பங்கேற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது. இத் தொடரில் மாவட்டச் செயலக அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. இந் நிலையில் நேற்றைய தினம் (05.07.2026) நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியானது காங்கேசன்துறை பொலிஸ் அணியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இவ் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டது.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (06.07.2026) குறித்த அணியினர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் வெற்றிக் கிண்ணத்தினை அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தனர். இதன் போது அணியினரின் சாதனையை பாராட்டிய அரசாங்க அதிபர் எதிர்காலத்திலும் இவ்வாறான போட்டித் தொடர்களில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ.தர்ஷினி ஆகியோர் உடனிருந்தார்கள்.

நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதிப் மேம்படுத்தல் 135.90 மில்லியன் ரூபாவில் - பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் (05.07.2026) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என் பிரபாகரன், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






