யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (01.07.2026) பிற்பகல் 03.00 மணிக்கு மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த கெளரவ கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள சமூக மட்ட அமைப்புக்களை அழைத்து அவர்களின் தேவைப்பாடுகள், பிரச்சினைகளை அடையாளம் கண்டு உதவித் திட்டங்கள் வழங்குவதே நோக்கமாகும். மேலும், ஒஸ்மானியா கல்லூரி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி, உட்கட்டுமான தேவைப்பாடுகள், வாழ்வாதாரம், வீட்டுத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இக் இக்கலந்துரையாடல் அமையும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகளை கலந்துரையாடுவதற்கே இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக காண வேண்டும் எனவும், இக் கலந்துரையாடலில் பழைய விடயங்களை தவிர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். இக் கலந்துரையாடலில் முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யாழ். தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் அரசாங்க அதிபரால் திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் இன்றைய தினம்(01.07.2026) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கோள் மண்டல காட்சி தொகுப்பானது வடக்கு மாகாணத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் குறிப்பாக கல்வித் துறைக்கும் ஒரு சிறந்த மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், கோள் மண்டலம் நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வசதிகளோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான கோள்மண்டலம் சூரியன், நட்சத்திரங்கள் போன்ற விடயங்கள் காட்சியளிப்பது யதார்த்த பூர்வமாக விண்வெளியில் இருக்கத்தக்க வகையிலான உணர்வையும் பிரம்மிக்கத்தக்க வகையிலே நேரடியாக பிள்ளைகள் அறிவியல் சார்ந்த விடயங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதான வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், கோள்மண்டலம் தொடர்பான அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும், இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள கூடியதாகவும் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஆரம்பித்திருப்பது அனைவருக்கும் பார்க்கக் கூடிய வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதாக மாவட்டத்திற்கு உள்ளேயே இவ்வாறான கோள்மண்டலத்தை நேரடியாக பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி தந்தமைக்கு அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ். தொழிநுட்பவியல் கல்லூரி சமூகத்தினர், அனுசரணையாளர்கள்,
நடமாடும் கோள்மண்டலத்தின் இணைப்பாளர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர், யாழ். தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் குறித்த மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் காட்சிக்கூடமானது ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை மாலை 05.00 மணி தொடக்கம் மாலை 06.30 மணிவரையும், இரவு 07.00 மணி தொடக்கம் இரவு 08.30 மணிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாகாண கல்வி அமைச்சின் அனுமதி பெற்று இது நடைபெறுவதனால் மாணவர்கள் பாடசாலை ஊடாக முற்பதிவு செய்து வழங்கப்படும் நேரத்தில் இதனை பார்வையிட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல்களை 077 7826217 அல்லது 076 1089005 தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் இன்றைய தினம் (30.06.2026) பி. ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.
யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இக் கூட்டத்திற்குவருகை தந்த கெளரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், சிறுவர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை நடப்பாண்டிலும் எதிர்வரும் காலங்களிலும் மாவட்டத்தில் எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பாக கௌரவ அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை 2025, 2026 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற நிதிகளை மிக சிறப்பான முறையில் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக குறிப்பாக மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவலர்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்ற நிதிகளை மிகச் சிறப்பான முறையில் செலவு செய்ததாகவும் அத்துடன் ஏனைய அமைச்சுக்களில் இருந்து கிடைக்கப்படும் நிதிகளையும் சரியான முறையில் பயன்படுத்தி உள்ளதாகவும் அனைத்து உத்தியோகத்தரையும் ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைந்த வகையிலே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எங்களுடைய பிரச்சினைகளை தமிழ் மொழியிலே கலந்துரையாடக்கூடிய ஓர் அமைச்சராக கௌரவ அமைச்சர் அவர்கள் வருகை தந்திருப்பது பெருமைப்படக்கூடிய ஒரு விடயமெனவும் உத்தியோகத்தர்கள் தங்கள் தேவைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் சரியான முறையில் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், உத்தியோகத்தர்களாகிய நாம் வினைத்திறனாகவும் சரியான முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது அக்குடும்பம், பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் எனவும் உத்தியோகத்தர்களின் சிறப்பான அர்ப்பணிப்பான சேவைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்,
எமது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அடிக்கடி யாழ்ப்பாணம் வருகைதந்து பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர் என்பதுடன், வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்தவர்கள் சிறுவர்கள் ஆகியோருக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர் எனவும் தெரிவித்து, இக் கலந்துரையாடலில் பங்குபற்றும் அதிகாரிகள் உத்தியோகத்தர்களுடன் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும், முன்னேற்றத்தினை புள்ளிவிபர ரீதியாக குறிப்பிட்டாலும், அது எவ்வாறு யதார்த்தமாக உள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், எமது சனாதிபதி அவர்களை ஏமாற்றிவிட முடியாது ஆகவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை நல்ல முறையில் ஆராய வேண்டும் என்பதுடன் இக் கலந்துரையாடல் வினைத்திறனான அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 மற்றும் 2026 காலப்பகுதிகளில் சிறுவர் பெண்கள் சார்ந்த அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களினால் முன்னளிக்கை செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களால் பெண்கள் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக பல விடயங்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலின் இறுதியில் உத்தியோகத்தர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கெளரவ அமைச்சர் அவர்களினால் ஆராயப்பட்டன. இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பெண் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த அரச உத்தியோகத்தர்கள், பொலீஸ் அதிகாரிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்தும் மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம் (01.07.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இக் கண்காட்சியினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் இக் கண்காட்சி அமைந்துள்ளது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் திரு. இ. ஜனத்குமார், பிரதம கணக்காளர் திரு. எஸ்.கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாகாண திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், ஊடகவியாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.06.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள்,உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்களை இக் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளோம். உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளின் செய்யற்படுகள் எமது மாவட்டத்திற்கு அதிக தேவைப்பாடுடையதாகும். இன்று ஊடகங்களில் உளவளத்துணை மற்றும் உள சமூக பிரச்சினைகள் தொடர்பில் அதிகமான செய்திகள் வெளிவருகின்றன. இவற்றை தடுப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு இங்கு கூடியுள்ள அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது. மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் அமைச்சு மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவு சார்ந்து இரண்டு உத்தியோகத்தர்களும், பாடசாலைகளில் உளவளத்துணை ஆசிரியர்களும், வைத்தியசாலைகள் சார்ந்தும் வைத்திய அதிகாரி பணிமனை சார்ந்த உளவளத்துணை ஆலோசனை உத்தியோகத்தர்களும் இருக்கின்றார்கள். இந் நிலையில் துறை சார்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து செயற்படுவது காலத்தின் தேவைப்பாடாகும். அதன் அடிப்படையில் காலாண்டுக்கு ஒரு முறை அனைவரையும் ஒருங்கிணைத்து இக்கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதனூடாக சரியான திட்டமிடலுடன் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும். இதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதன்போது கடந்த கால கூட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், உளவளத்துணை மற்றும் உளசமூக வேலைகளில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் சாவல்கள், மாவட்ட மட்ட உளசமூக பிரச்சினைகள் மற்றும் தலையீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, சுகாதார வைத்திய அதிகாரிகள், உள மருத்தவ வைத்திய அதிகாரிகள், மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர், துறைசார்ந்து பணியாற்றும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக ஆலோசகர்கள், பிரதேச செயலகங்களின் உளவளத்துணை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.






