2026ஆம் ஆண்டிற்கான 13ஆவது யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு இன்றைய தினம் (04.07.2026) வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், கடமை நேரங்களை பாதிக்காத வகையில் விடுமுறை தினங்களில் அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப் போட்டிகள் நடைபெற்றதாகவும், உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர நல்லுறவு மற்றும் உடல் உள ஆரோக்கியத்திற்கும் இவ்வாறான போட்டிகள் பக்கபலமாக அமைவதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்டச் செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்கள் முழுமையாக இப் போட்டியில் பங்குபற்றியது மகிழ்ச்சியான விடயம் எனவும், இறுதிப் போட்டி நிகழ்வினை பார்க்கும் போது உத்தியோகத்தர்கள் அர்பணிப்புடனும், உற்சாகத்துடனும், வினைத்திறனாகவும் பலம்பொருந்திய நிலையில் பங்குபற்றியுள்ளார்கள் எனவும், இது ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்குவதற்கு வலுச் சேர்ப்பதாகவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் வடமராட்சி கிழக்கில் நடைபெறுவது சிறப்பான விடயம் என்றும், எமது மாவட்டத்திலேயே இயற்கைச் சூழல் கடினமாகவுள்ள பிரதேசங்களாக வடமராட்சி கிழக்கும் மற்றும் நெடுந்தீவும் காணப்படுவதாகவும், அந்த வகையில் இவ்விரண்டு பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை மிகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறான சூழலில் இன்றைய போட்டிகளை மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்திய வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியினையும் விசேடமாகத் தெரிவித்தார். மேலும், அரச அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப் போட்டியினை சிறப்பாக நடாத்திய நலன்புரிக் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் தமது பாராட்டுக்களை அரசாங்க அதிபர் தெரிவித்து, உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், 2027 ஆம் ஆண்டுக்கான அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டி காரைநகர் பிரதேசத்தில் நடைபெறும் என்ற அறிவித்தலை வெளியிட்டார்.
பிரதம விருந்தினர் உரைக்கு முன்பதாக, வடமராட்சி கிழக்கு பதில் பிரதேச செயலாளர் திரு. F.C சத்தியசோதி அவர்களின் வரவேற்புரையும், ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளருமான திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையுரையும் இடம்பெற்றது. மேலும், அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண மடலின் முதற்பிரதியினை அனுசரணையாளரான கிருபா லேணர்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. தனித்தா கிருபாகரன் அவர்களுக்கு அரசாங்க அதிபர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அனுசரணையாளரான இலங்கை வங்கியின் உதவி பொதுமுகாமையாளர் திரு. சிவானந்தன் அவர்களுக்கும் ஏனைய மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கினார். இன்றைய நிகழ்வில் அரசாங்க அதிபர் சுற்றுப் போட்டிகளான - துடுப்பாட்டம் (ஆண்/பெண்), உதைப்பதாட்டம், கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், தாச்சி (ஆண்/பெண்), கயிறிழுத்தல்(ஆண்/பெண்) ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அணிவித்து கெளரவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்தினை தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் சம புள்ளிகள் பெற்று தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் நலன்புரிக் கழகத்தின் விளையாட்டுச் செயலாளர் திரு. ம.நிமலன் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டது. இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

2026ஆம் ஆண்டிற்கான 13ஆவது யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.07.2026) காலை 09.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டார்.
இவ் இறுதிப் போட்டிகளின் முடிவுகள் :
01.துடுப்பாட்டம் (பெண்கள்) மாவட்டச் செயலகம் எதிர் மருதங்கேணி பிரதேச செயலகம். வெற்றி அணி : மாவட்டச் செயலகம்
02. கயிறிழுத்தல் (ஆண்கள்) காரைநகர் பிரதேச செயலகம் எதிர் உடுவில் பிரதேச செயலகம். வெற்றி அணி : காரைநகர் பிரதேச செயலகம்
03. கயிறிழுத்தல் (பெண்கள்) பருத்தித்துறை பிரதேச செயலகம் எதிர் உடுவில் பிரதேச செயலகம். வெற்றி அணி : உடுவில் பிரதேச செயலகம்
மேலும், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையிலான மகிழ்வூட்டும் போட்டிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னாசிய மற்றும் தேசிய ரீதியான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. கி. கமலராஜன் தலைமையில் இன்றைய தினம் (03.07.2026) காலை 09.00 சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. லாகினி நிரூபராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந் நிகழ்வின் ஆரம்பத்தில் சாவகச்சேரி நகர சுற்றுவட்டத்திலிருந்து டிறிபேக் கல்லூரி மாணவர்களின் பான்ட் இசையுடன், விருந்தினர்கள், வெற்றியீட்டிய மாணவர்கள் ஊர்வலமாக பொன்விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், தேசிய வலய கீதங்கள் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து தலைமையுரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் தமதுரையில், தென்மராட்சி கல்வி வலயமானது பாடசாலை அடைவு மட்டம் மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் முன்னுதாரணமாக திகழ்கின்றமைக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தேசிய, மாகாண, மாவட்ட ரீதியில் முதல் நிலை தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்களை கொண்ட கல்வி வலயமாக திகழ்கின்றது எனவும், அவ்வாறே அண்மையில் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் வட மாகாணத்தில் காணப்படும் 13 கல்வி வலயங்களில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது எனவும், இவற்றோடு விளையாட்டு செயற்பாடுகளிலும் பல்வேறு சாதனையாளர்களைக் கொண்ட வலயமாக இது காணப்படுகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேசம் தேசிய மற்றும் ஆசிய ரீதியில் போட்டிகளில் பங்குபற்றுவது என்பதே சாதனைக்குரிய விடயமாகும் என்றும், இப் பிள்ளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர்களுக்கும், பயிற்சிகளில் கலந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். இன்று பல பெற்றோர்கள் கல்வியில் மட்டும் தான் தமது பிள்ளைகளின் அடைவு மட்டங்களை முன்னிலைப்படுத்தி நிற்கின்ற நிலையில் இவ்வாறான விளையாட்டு செயற்பாடுகளிலும் பங்கு பெற்ற செய்த பெற்றோர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தென்பகுதி மாணவர்கள் பாடசாலை நேரத்திற்குப் பின்னர் பெரும்பாலான நேரத்தை விளையாட்டு மைதானங்களில் செலவிடுகின்றமையை பார்க்க முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் ஒப்பிட்டளவில் எமது மாவட்டத்தில் குறைவாக காணப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளதாகவும், எமது பெற்றோர் தனியார் கல்வி நிறுவனங்களிலேயே பிள்ளைகளை அனுப்பும் முனைப்பு அவர்களை விளையாட்டு மைதானத்திற்கு அனுப்பி விளையாட வைப்பதில் காட்டுவதில்லை. இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் இவ்வாறு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இப் பிள்ளைகளை பங்குபற்ற செய்து வெற்றியை ஈட்டிய இக்கல்வி வலயத்திற்கும் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வை ஏற்பாடு செய்த வலயக்கல்வி பணிப்பாளரின் முயற்சி என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இவ் வீர வீராங்கனைகளை தனியாக பாராட்ட வேண்டும் என்ற அவரின் எண்ணம் உண்மையில் பாராட்டுக்குரிய விடயமாகும். இது எமது மாவட்டம் மற்றும் பிரதேசத்திற்கு ஒரு முன்னுதாரணமான செயற்பாடாக அமைய வேண்டும்.
கல்வி மட்டுமல்லாது அவர்களுடைய இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் பிள்ளைகளை பங்கு பற்ற செய்வது என்பது அவர்களுடைய எதிர்காலத்திற்கு மிகவும் உறுதுணையாக அமையும் என்றும், விளையாட்டு உபகரணங்கள் உயர்ந்த தரத்தில் கிடைக்காவிட்டாலும், வசதி குறைந்த பிள்ளைகள் தமது குறைந்த வசதி வாய்ப்பை பயன்படுத்தியும் இவ்வாறான வெற்றிகளை ஈட்டுவது என்பது சாதனைக்குரிய விடயமாகும். வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் இவ்வாறான போட்டிகளில் பங்குபெற்றுவது என்பதே பெருமைக்குரிய விடயமாகும் எனவும், தெற்காசிய ஸ்கேட்டிங் வேக ஒட்ட நிகழ்வின் சாதனைக்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, எமது மாணவர்கள் இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, தெற்காசிய மற்றும் தேசிய ரீதியாக வெற்றியீட்டிய மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் பின்வரும் மாணவர்களும், பயிற்றுனர்களும் அரசாங்க அதிபரால் கெளரவிக்கப்பட்டார்கள்.
01.மாலைதீவில் அண்மையில் நடைபெற்ற South Asia Speed Skating Championship (ஸ்கேற்றிங் விரைவோட்டம்) சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆண்டு 09 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி சாறுதி தர்மரூபன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும், தென்மராட்சி மண்ணுக்கும், இரண்டு 2ம் இடங்களையும் ஒரு 3ம் இடமுமாக மூன்று வெற்றிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து பெருமை சேர்த்திருந்தார்.
02.தேசியப் போட்டியில் வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி செல்வி ஜே. ஜெனிஸ்ரா 20 வயதுப் பிரிவு பாடசாலை மட்ட தேசிய பளுதூக்கல் நிகழ்வில் மூன்றாம் இடத்தினை பெற்றிருந்தார்.
03.சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் 20 வயதுப் பிரிவில்
செல்வன் எஸ். கஜானன் செல்வி பி.அபிசாளினி ஆகியோர் கோலுன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய ரீதியாக முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்திருந்தனர்.
04.ஸ்கேட்டிங் பயிற்றுநர்கள் செல்வி என்.வினுஷா, திரு எஸ்.ஜெபநேசன், திரு கு. ராஜதீபன் ஆகியோர் பாராட்டப்பட்டதோடு, குறிப்பாக இன்றைய தினம் றீமர்மஸ் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் அக்கடமி நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு என்.டெனா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். இவர் யாழ் மாவட்டத்தில் இந்த ஸ்கேட்டிங் விளையாட்டினை உருவாக்கி வளர்த்ததில் மிகக் காத்திரமான பங்கை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
05.தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.நடராசா.ஸ்ரீகாந்தா அவர்களும் இன்றைய தினம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
06.சாவகச்சேரி இந்துக்கல்லூரி பயிற்றுனர் திரு. கே. கனதீபன் அவர்களும், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பயிற்றுனர் திரு. பி. டிலக்சன் அவர்களும் அரசாங்க அதிபரால் கெளரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பல பேர் கலந்து சிறப்பித்தார்கள்.

2026 ஆம் ஆண்டிற்கான 13 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.07.2026) காலை 09.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டுள்ளார். நிகழ்வில் பிரதம விருந்தினர் உள்ளிட்ட விருந்தினர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்திலிருந்து உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன், விளையாட்டு மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேசிய கொடியினை அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலக கொடியினை மேலதிக அரசாங்க அதிபரும் பிரதேச செயலகங்களின் கொடிகளை அந்ததந்த பிரதேச செயலாளர்களாலும் ஏற்றப்பட்டன. மேலும், மதகுருமார்களின் ஆசியுரையினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முதலாவது போட்டியாக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கும் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கும் இடையிலான பெண்களுக்கான துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியினை அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார். இதில் மருதங்கேணி பிரதேச செயலக அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துட்டுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம்(02.07.2026) மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களான வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டம் மற்றும் பிரஜாசக்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் துறைசாா்ந்த விடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






