யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன் நலன்புரிக் கழகம் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா இன்றைய தினம் (17.07.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்புற நடைபெற்றது. அரசாங்க அதிபரின் வழிப்படுத்தலில் கலைத்துறையுடன் தொடர்புடைய மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் குழுப்பாடல் மற்றும் பல்லியம் இசை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. இக் கலை நிகழ்வை சிறப்பாக ஒழுங்குபடுத்தி வழங்கிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் குறித்த உத்தியோகத்தர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்திருந்தனர்.
இதன்போது குழுப்பாடலினை வழங்கிய திருமதி. நிரஞ்சலா ஸ்ரீரங்கன் (வயலின்), திருமதி.சுபேந்தினி லிங்கேஸ்வரன் (இசை), திருமதி.நிரஞ்சினி றகுணன் (இசை), திருமதி.மேகலா லக்ஸ்மன் (இசை), திருமதி.துக்ஷாந்தி பபிக்ஷன் (இசை), திருமதி. மஞ்சுளா அகிலன் (இசை), திருமதி.அபிசுஜா சஞ்சீவ் (இசை), திருமதி. சாந்திமலர் ஜெயபாஸ்கரன் (இசை), திருமதி அபிராமி துஜந்தன் (இசை), திரு.சதீஸ்குமார் நடராஜா (மிருதங்கம்), திரு.தே.விஜயச்சந்திரா (தபேலா) ஆகியோரும், 'பல்லியம்' இசை நிகழ்வினை வழங்கிய திருமதி. நிரஞ்சலா ஸ்ரீரங்கன் (வயலின்), திருமதி.சுபேந்தினி லிங்கேஸ்வரன் (வயலின்), திருமதி.நிரஞ்சினி றகுணன் (வயலின்), திருமதி. சிவகௌரி இந்திரஜித் (வயலின்), திருமதி. மேகலா லக்ஸ்மன் (ஓர்கன்), திருமதி. ஆர்த்தி தேவநாதன் (புல்லாங்குழல்), திருமதி. மஞ்சுளா அகிலன் (வீணை), திரு.சதீஸ்குமார் நடராஜா (மிருதங்கம்), திரு.தே.விஜயச்சந்திரா (தபேலா) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
1 2 3 4 5 6
 
 
யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா இன்றைய தினம்(17.07.2026) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ் ஆடிப்பிறப்பு விழாவில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்வில் வரவேற்புரையை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திருமதி தயாபரி கிரிதரன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் குழுப்பாடல், பல்லியம் இசை நிகழ்வுகளுடன் ஆடிப்பிறப்பின் மகிமை தொடர்பாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர் திருமதி க. குணதர்சனா அவர்களின் உரை உள்ளிட்ட கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இன்றைய நிகழ்விற்கு வருகை தந்த கெளரவ அமைச்சர் அவர்களை வரவேற்றதுடன், மாவட்டச் செயலகத்தில் வருடாந்தம் ஆடிக் கூழ் குடித்தலுடன் மாத்திரமே ஆடிப்பிறப்பு கொண்டாட்டமானது முன்னெடுக்கப்படும். ஆனால் இம் முறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளுடன் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும், இவ் கலை நிகழ்வினை ஆற்றிய உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், இவ்வாறான நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிக் கொணராமல் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் தமது திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதுடன், ஆடிப்பிறப்பின் மகிமை பற்றிய சிறப்புரை வழங்கிய உத்தியோகத்தருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ் மொழி தின மற்றும் விபுலானந்தர் நினைவு தின வைபவத்தில் தமிழ் தாய் வாழ்த்து ஒன்றை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்திற்கு வந்து கோவைகளுடன் மாத்திரமே தமது பணிகளை மேற்கொண்டு பின்னர் வீடு திரும்பும் செயற்பாடுகளுக்கு அப்பால் தமது துறை சார்ந்த ஏனைய திறமைகளையும் வெளிக்கொணர வேண்டும் என்பதற்கான களமாக இவ் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த வாரம் அதிமேதகு ஜனாதிபதியுடனான மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்ற போது அதில் மாவட்ட ரீதியான காட்சிப்படுத்தலில் எமது மாவட்டத்தின் காட்சிப்படுத்தல் முதல் நிலையில் திகழ்ந்தமை பெருமைக்குரிய விடயமாகும். இதற்கு உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்புமே காரணம் என தெரிவித்த அரசாங்க அதிபர் இவ்வாறான மாவட்ட செயற்பாடுகளுக்கு மென்மேலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
இவ் ஆடிப்பிறப்பு விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பா.ஜெகரன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு.எஸ். கபிலன் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் இம் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றதற்கு அமைவாக, இவ் போட்டித் தொடரின் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் இன்றைய தினம் (15.07.2026) கெளரவிக்கப்பட்டார்கள்.
இதன் போது அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய இளைஞர் மன்றத்தினால் தேசிய ரீதியாக நடைபெற்ற 36 ஆவது தேசிய போட்டித்தொடரின் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தினை பெற்றமை மகிழ்வான விடயம் எனவும், அதிலும் கொழுப்பு மாவட்டத்தில் இரு அணிகள் உள்ளடங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து ஒவ்வொரு அணி என்ற ரீதியில் 26 அணிகள் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளமை பாராட்ட வேண்டிய விடயம் எனவும், மேலும் கபடி இறுதிப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியினர் பங்குபற்றி இருந்தார்களெனவும், அந்த வகையில் முதலாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும் இரண்டாவது இடத்தினை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளமைக்கு இவ் விரண்டு மாவட்ட அணி வீராங்கனைகளுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் இப்போட்டிக்கு உறுதுணையாகவிருந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி அவர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்க அதிபர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது இளைஞர் யுவதிகள் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்தி இளைஞர்களுக்கு உறுதுணையாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டதுடன், கபடி போட்டிக்கு நீண்ட காலப் பயிற்சி அவசியம் எனவும், அந்த வகையில் எமது மாணவர்கள் இப்பயிற்சியின் சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு பெற்றோர்களும் தமது பங்களிப்பினை வழங்கி உள்ளார்கள் எனவும், ஆதலால் மாணவர்கள் கல்வி நிலையிலும் உயர்வு அடைய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன், தேசிய போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளிலும் எமது மாணவிகள் பங்குபற்றி சாதனைகள் நிலைநாட்ட வேண்டும் எனவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட அணியில் உள்ள செல்வி வி. டிலக்சஷா மற்றும் செல்வி ஆர். பிரியவர்ணா ஆகியோர் இலங்கை தேசிய கபடி மகளிர் அணியில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் குறித்த போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி சிறிமேனன், பயிற்றுனர்கள் யாழ். மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து வெற்றி ஈட்டிய வீராங்கனைகள் அவர்தம் பயிற்றுனர்கள் அரசாங்க அதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினார்கள்.
 
1 2 3 4 5 6 7 12 9 10
"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் (CITIZENS MIRROR INDEX 1.0) தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக வெற்றி பெற்ற பிரதேச செயலகங்கள் இன்றைய தினம்(16.07.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட ரீதியில் 14 பிரதேச செயலகங்கள் போட்டியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்டமைக்காக முதலில் தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார். மேலும் உற்பத்தித்திறன் செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், அடுத்த 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டிகளில் பிரதேச செயலகங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அடைவு மட்டத்தைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், உற்பத்தித்திறன் செயற்பாடுகள் பிரதேச செயலக ரீதியாக சிறப்பான தன்மையில் காணப்படுவதாகவும் ஒருங்கிணைந்த வகையிலே செயற்படுவதாகவும் அதற்கு வழிகாட்டலாக செயற்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கும் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். 2025 ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளை நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டதுதாகவும், சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award மற்றும் அகில இலங்கை ரீதியாக சிறந்த சமூக வலைத்தளத்திற்கான (Facebook ) Special Jury Award ஆகிய இவ் இரண்டு விருதுகளையும், "மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்து நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். அதேபோன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் சுற்றாடல், சூழல் சார்ந்த, உற்பத்தி திறன் சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றி அடைவு மட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து பிரதேச செயலகங்களும் தொடர்ந்தும் போட்டிகளில் பங்கு பற்றி ஒருங்கிணைந்து செயற்படும்போது அதன் ஒட்டுமொத்த வெளிப்பாடும் மாவட்டத்தை வந்தடையும் எனவும் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். அகில இலங்கை ரீதியாக 284 பிரதேச செயலகங்கள் போட்டிகளில் ஈடுபட்டு யாழ்ப்பாண மாவட்டம் மிகச்சிறந்த வெற்றியை தந்துள்ளமைக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் மேலும் முழு மனதுடன் செயற்பட்டு வெற்றிகளை ஈட்ட வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.மேலும் வினைத்திறனான சேவைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் அடுத்த 2026 ஆம் ஆண்டுக்கான உற்பத்தி திறன் செயற்பாட்டு மதிப்பீடுகளுக்கு உரிய செயற்பாடுகளை தயார் நிலையில் மேற்கொள்ளுமாறும் மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கேட்டுக்கொண்டார்
"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் தேசிய, மாவட்ட ரீதியிலும் 96.23 புள்ளிகளையும் AAA தரத்தினையும் பெற்று நல்லூர் பிரதேச செயலகம் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. மாவட்ட ரீதியில் நல்லார் பிரதேச செயலகமும், 2 ஆம் இடத்தினை 87.17 புள்ளிகளையும் AAA தரத்தினை பெற்று கரவெட்டி பிரதேச செயலகமும், 3 ஆம் இடத்தில் 85. 97 புள்ளிகளையும் AAA தரத்தினை பெற்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், புள்ளிகளின் அடிப்படையில் ஏனைய பிரதேச செயலகங்களுக்கு ம் சான்றிதழ் வழங்கப்பட்டன. "மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் 25 மாவட்டங்களில் மாவட்ட ரீதியாக பிரதேச செயலகங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டம் 7 ஆம் இடத்தினைபெற்றுள்ளது. இந் நிகழ்வில் "மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக வெற்றி பெற்ற பிரதேச செயலகங்களுக்கு அரசாங்க அதிபர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவி மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உற்பத்தி திறன் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
01
 
யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(15.07.2026) காலை 11:00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர் திரு.என்.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு நோய்க்காரணி, டெங்கு நோய்க்கான அறிகுறிகள், டெங்கு நோகள், டெங்கு பரவும் இடங்கள் அதற்கான நோய்ய் ஏற்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கை தடுப்பு நடவடிக்கைகள், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது, டெங்கு நோய்க்கான வைத்திய ஆலோசனைகள் என்பன தொடர்பில் கருத்துரைகளை வழங்கினார். இவ் விழிப்புணர்வு நிகழ்வில் நல்லூர் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. யோ. சுகிர்தன் மற்றும் அரியாலை பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. பி. சதீஷ்குமார், ஆகியோரும் கலந்து கொண்டனர்
 
1 4 5 6