இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமை (NVQ 3) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு.ஜெயநாத் கேரத் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.07.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார்.
இவ் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் மின்னியலாளர்கள் பயிற்சியை பெற்றிருந்தாலும் தேசிய தொழில்தகைமை சான்றிதழ் என்பது சர்வதேச ரீதியாக வலுப்பெற்ற சான்றிதழ் எனவும், இப் பயிற்சியை பெற்றவர்களுக்கு இது ஒரு சமூக அங்கீகாரமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொருவரதும் தகுதிகள் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த மின்னியலாளர்களுக்கான பயிற்சிநெறி வழங்கப்பட்டதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளிமாவட்டத்திலிருந்து தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும், அதனை ஆராயும் போது இங்குள்ள தொழிலாளர்களில் குறிப்பிடப்பட்டவர்களின் சேவை வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமானதாக இன்மையால் வெளிமாவட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையுள்ளதாக அறியப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை எமது தொழிலாளர்கள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட இந்த தேசிய தொழில் தகைமை சான்றிதழ் மூலமாக வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவையை வழங்க கூடிய மனப்பாங்கை அனைவரும் வளர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இவ்வாறு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குதல் மூலமாக நிச்சயமாக வருமான மட்டம் உயர்வடையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, மின்னியலாளர்கள் இத்துறை சார்ந்து பூரண அறிவோடு இருப்பதாகவும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால் சமுதாயத்தில் உயரிய வாழ்வு கிடைக்கும் எனவும் சமுதாயத்தின் திருப்தி உங்களின் கைகளில் காணப்படுவதாகவும் நவீன உலகில் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய திறன்களை வளர்த்துக்கொண்டு இவ்வுலகிலே தொழில் விற்பனராக மிளிர வேண்டும் எனவும் தெரிவித்து, தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்சி பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும், இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (தொடர்பாடல்) திரு. ஏ. ஜெயசூரியன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் திரு.ஆர். திருமுருகன், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு. கே. கருணாகரன், மாவட்ட திறன் விருத்தி மாவட்ட இணைப்பாளர் திரு.நீலாம்பரன், பயிற்சியை நிறைவு செய்த மின்னியலாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.