மறைந்த சிவரத்தினம் இரத்தினகுமார் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சாவல்கட்டு சன்மார்க்கம் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப்போட்டி 2026.07.18 அன்று சாவல்கட்டு மகாத்மா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரி, கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இளைஞர்களிடையே விளையாட்டு உணர்வை ஊக்குவிப்பதுடன், சமூக ஒற்றுமையையும் மறைந்தோரின் நினைவைப் போற்றும் பண்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் பல அணிகள் உற்சாகமாகப் பங்கேற்று, விளையாட்டுத் திறமையையும் ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தின.

யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவுச்சபை நடாத்திய 104வது சர்வதேச கூட்டுறவு தின விழா கூட்டுறவுச் சபையின் தலைவர் திரு.ப.கேசவதாசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2026) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் "அனைத்துலக அமைதிக்காக கூட்டுறவுகள்" எனும் தொனிப்பொருளில் சிறப்புற நடைபெற்றது. இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையார் திரு.கி.சந்திரசேகரன் அவர்களும், கௌரவ விருந்தினராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு பிராந்திய முகாமையாளர் திரு.எஸ்.சிவதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் அதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றபட்டு மௌன இறைவணக்கம் இடம்பெற்றதுடன் கூட்டுறவுக் கீதம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டான பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களின் பேச்சு, சபையின் அங்கத்துவ சங்கங்களின் கலை நிகழ்வுகள், அதிதிகளின் உரைகள், 104வது சர்வதேச கூட்டுறவு தின விழா போட்டிகளில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள், அங்கத்தவர்கள், கூட்டுறவுக் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, அங்கத்தவர் இணைப்பு செயற்திட்டத்திற்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. இதனை விட வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் திரு.ரதீஸ் அவர்களின் சிறப்புரை மற்றும் கூட்டுறவுப் பணியாளர்கள் கௌரவிப்பு முதலான நிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் அங்கத்தவர்கள், வங்கி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் உபகுழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.07.2026) பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரை மற்றும் முன்வைப்பினைத் தொடர்ந்து, துறை ரீதியாக முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டம், சுகாதாரம், வீதிகள், போக்குவரத்து, வீட்டுத்திட்டத்திற்கான மணல் தேவைப்பாடு, தென்னை பயிர்ச் செய்கை சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள், குடிநீர் இணைப்புக்கள், யாழ்ப்பாண நகரத் திட்டம் (Jaffna 10 City progamme) என்பன விரிவாக ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில் கெளரவ அமைச்சர் குறிப்பிடுகையில், 2025, 2026ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீடுகள், மக்களைச் சென்றடைந்த திட்டங்கள், நிறைவேறாத திட்டங்கள் என்பன தொடர்பாக அனைத்து தரவுகளையும் உள்ளடக்கி யாழ் மாவட்டத்தின் இருக்கும் திட்டங்களின் கொள்கைகளை தயாரிக்கும் திட்டமாக தீர்மானங்களை எடுப்பதற்காக இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மாகாணமும் மாவட்டமும் இணைந்து வேலைத்திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மேற்கொள்ளுமாறும், இக்கூட்டத்திற்கு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் துறை ரீதியாக திணைக்களத் தலைவர்களை பங்களிப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் திட்டங்களை துறை ரீதியாக ஆராய்வது என தீரமானிக்கப்பட்டு அடுத்த ஆகஸ்ட் மாத மாவட்ட திட்டமிடல் உப குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கல்வி தொடர்பாக ஆராய்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர்கள் தங்களுடன் தொடர்புடைய திணைக்களங்கள், சமூக மட்ட அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு சுகாதாரம் ,கல்வி தொடர்பான தேவைப்பாடுகளை ஜீலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண , உதவிப் பிரதம செயலாளர் திருமதி. அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கவிதை பயிலரங்கம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2026) காலை 9.00மணிக்கு மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், எமது பண்பாட்டுக் கலைகளைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில் மாவட்டச் செயலகம் தொடர்ச்சியாக கலைத்துறை சார்ந்த மூத்த கலைஞர்களின் பங்களிப்புடன் இளம் கலைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பயிலரங்குகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத் தீர்மானம் கலாசார உத்தியோகத்தர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அரச பணிகளில் ஈடுபட்டிருக்கும் நாம், கலைத்துறை வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே இப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும், கவிஞர் இ.த. ஜெயசீலன் அவர்களும் வளவாளர்களாகப் பங்கேற்றமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். அதேவேளை, கலைத்துறையில் ஆர்வமுள்ள மூத்தோர், இளைஞர்கள், யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டிருப்பது இந் நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இவ்வாறான பயிலரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பை அனைவரிடமும் அரசாங்க அதிபர் வேண்டிக் கொண்டார். இப் பயிலரங்கை சிறப்பாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கிய வன்னி மண் நற்பணி மன்றத்திற்கும், நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
கவிஞர்களையும் படைப்பாக்கத் திறன்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இக் கவிதைப் பயிலரங்கில் இளம் கலைஞர்கள், கவிதை ஆர்வலர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 60 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப் பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக கவிஞர் சோ. பத்மநாதன் மற்றும் கவிஞர் இ.த. ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்று, மரபுக் கவிதை மற்றும் நவீனக் கவிதை தொடர்பான தெளிவான விளக்கங்களுடன் பயிற்சிகளை வழங்கினர். மேலும், கவிதை எழுதும் நுட்பங்கள், கவிதை வாசிக்கும் முறைகள், படைப்பாக்கத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல்களும் செயன்முறைப் பயிற்சிகளும் இடம்பெற்றன. பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் வளவாளர்கள் பயிலரங்கை உயிரோட்டமிக்க வகையில் முன்னெடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கி. மாலினி அனுசரணை வழங்கிய வன்னி மண் நற்பணி மன்றத்தின் உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கிளைகளுக்கிடையிலான உற்பத்தித்திறன் செயற்பாடுகளை மென்மேலும் ஊக்குவிக்கும் முகமாக காலாண்டுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இவ் மதிப்பீடுகளுக்கமைய இன்றைய தினம்(17.07.2026) மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் ஒவ்வொரு கிளைகளுக்கும் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் AAA /AA /A / B /C என்ற வகைப்படுத்தலுக்கு அமைய குறித்த சான்றிதழ்கள் கிளைத்தலைவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.






