தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனமும் வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சந்தை தொடர்புகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் (B2B Forum) இன்று (22.07.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் இந்திர கௌஷிக் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வட மாகாண உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் உற்பத்திப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் நேரடியாக இணைக்கும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கருத்துரையாற்றிய வட மாகாண ஆளுநர், வட மாகாண உற்பத்தியாளர்களின் பொருட்களை ஏற்றுமதியாளர்கள் நேரடியாக கொள்வனவு செய்யும் வகையில் சந்தைப்படுத்தல் தொடர்புகளை உருவாக்கும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சியை பாராட்டினார். மேலும், வட மாகாணத்தின் விவசாயம் மற்றும் கடல்வளம் போன்ற வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், விவசாய உற்பத்திகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் இன்னும் போதிய அளவில் இல்லை என்றும் குறிப்பிட்டார். உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சந்தைப்படுத்தல் சவால்களுக்கு இத்தகைய B2B சந்திப்புகள் சிறந்த தீர்வாக அமையும் என்றும், தொழில் முயற்சியாளர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமன்றி எதிர்காலத்தில் ஏற்றுமதியாளர்களாகவும் வளர வேண்டும் என்றும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வட மாகாண நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில், தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் வட மாகாணத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் ஊக்குவிக்கும் பல்வேறு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக பாராட்டினார். யாழ்ப்பாண மாவட்டம் தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உற்பத்தியாளர்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதும் தொழில் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்நிகழ்வு உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்துள்ளதாகவும், மாவட்டத்தின் உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வின் போது தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தினால் உற்பத்தியாளர்களுக்காக "ஏற்றுமதியாளர்கள் இதழ்" வெளியிடப்பட்டது. இந் நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும், தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் நிறைவேற்று அதிகாரியுமான திரு. ஷிகாம் மரிக்கார், இந்திய துணைத் தூதரகத்தின் பிரதிநிதி திரு. சங்கரன் ராஜகோபாலன், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. எஸ். சிவகெங்காதரன், செலான் வங்கியின் உதவி பொது முகாமையாளர், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், கைத்தொழில் அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 6 5 7 8 9 10 11
புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு - புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம். எஸ். அமித் அவர்களின் தலைமையில் இன்று (21.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு, மீண்டும் ஆரோக்கியமான சமூக வாழ்வில் இணைத்திடுவது அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும் என்பதை வலியுறுத்திய இச் செயலமர்வில், போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குதல், தொழிற்பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்தல் மற்றும் சமூகத்தில் முழுமையான மனிதர்களாக மீள இணைத்தல் ஆகியவை புனர்வாழ்வு பணியகத்தின் முக்கிய நோக்கங்களாக காணொளி மூலமும் விளக்கப்பட்டன.
இலட்சக்கணக்கான இளைஞர்களின் உயிர்களையும் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப்பொருள் பேராபத்தை ஒழிப்பதற்காக நாடளாவிய விழிப்புணர்வு இயக்கம் அவசியம் என்பதையும், போதைப்பொருள் பாவனையிலும் விற்பனையிலும் ஈடுபடுவோர் அதிலிருந்து விலக வேண்டும் என்பதையும், இதற்காக முழு சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்செயலமர்வில் பாடசாலை உளவளத் துணை ஆசிரியர்கள், தொடர்புடைய ஆசிரியர்கள், பிரதேச செயலக உளவளத் துணை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவள ஆதரவு தொடர்பான விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
செயலமர்வின் வளவாளர்களாக பொலிஸ் போதைவஸ்து பணியகத்தின் பிரதிநிதி திரு. ஐ. பிரவீன் மற்றும் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திருமதி வினோதா அச்சுதன் ஆகியோர் பங்கேற்று விரிவுரைகளை வழங்கினர். ஆரம்ப நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் நிரஞ்சன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், புனர்வாழ்வு பணியகத்தின் மேலதிக பணிப்பாளர் பிரிகேடியர் பியலால், மாவட்டச் செயலக புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலக புனர்வாழ்வு உத்தியோகத்தர் மேஜர் S. A. R. N. பெரேரா, சிறைச்சாலை அத்தியட்சகர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அருட்சகோதரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்வித்துறை அதிகாரிகள், புனர்வாழ்வு பணியக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
2 3 4 5 6 7 8 9 10
பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (20.07.2026) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாணத்தில் தனது பணிக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்களின் சேவையைப் பாராட்டிய அரசாங்க அதிபர், அவரின் புதிய பொறுப்புகள் சிறப்புற அமைய மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள், கொழும்பு கடற்படை தலைமையகத்தின் மூன்றாம் நிலையிலுள்ள பிரதி பிரதானியாகப் பொறுப்பேற்கவுள்ளதுடன், கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக மேலதிக கடமைகளையும் பொறுப்பேற்கவுள்ளார். வட மாகாணத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், புனித கச்சதீவு அந்தோனியார் திருவிழா, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் உள்ளிட்ட முக்கிய மத நிகழ்வுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்து ஏற்பாடுகளை திறம்பட ஒருங்கிணைத்ததுடன், நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள் கடற்போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5
 
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், குறித்த போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாணப் பணிப்பாளர் திரு. K.D.C. காமினி அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (20.07.2026) பிற்பகல் 3.00 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 25 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில், பெண்களுக்கான போட்டிகள் பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கான போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டித் தொடரின் உதைபந்தாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும் எனத் தெரிவித்தார். மேலும், இவ்வருட தேசிய கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணி முதலாம் இடத்தையும், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உதைபந்தாட்டப் போட்டியில் பெண்கள் அணி முதலாம் இடத்தையும், ஆண்கள் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தமையை நினைவுகூர்ந்த அவர், சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இப்போட்டி வீரர், வீராங்கனைகளுக்கு கூடுதல் உற்சாகத்தையும் சாதகமான சூழலையும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உதைபந்தாட்டத்திற்கு புகழ்பெற்ற மாவட்டம் என்பதால் பெருமளவிலான பார்வையாளர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும், சுமார் 1,200 பேர் பங்கேற்கவுள்ள இப்போட்டித் தொடரின் மூலம் மாவட்டத்தின் பொருளாதார மற்றும் சேவைத் துறைகளுக்கும் பயன் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், பிரதேச செயலாளர்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் இப்போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என உறுதியளித்த அவர், யாழ்ப்பாண மாவட்ட அணியினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி சிறிமேனன், விளையாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி திரு. H.W. சுஜிவ் உதயகுமார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6
மூளாயில் அமைந்துள்ள கலைவாணி முன்பள்ளியின் பொன்விழாவும், கலைவாணி சனசமூக நிலையத்தின் 74 ஆவது ஆண்டுவிழாவும், வருடாந்த விளையாட்டுவிழாவும் கலைவாணி சனசமூக நிலையத் தலைமையில் திரு. து. சுஜிந்தன் J.P. அவர்கள் தலைமை 2026 ஜூலை 19 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கலைவாணி சனசமூக நிலைய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், எழுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் “கலைவாணி சனசமூக நிலையம்” என்ற பெயரில் ஒரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும்,
அந்த எழுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய கல்வி, பொருளாதார மற்றும் சமூகச் சூழலில், இந்தச் சனசமூக நிலையங்களின் தேவை மிகவும் முக்கியமானதாக இருந்தது எனவும் தெரிவித்தார். மேலும் , அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அதன் தேவையை உணர்ந்து இதனை ஆரம்பித்தது பாராட்டத்தக்க விடயமாகும். அதேபோல், இந்த முன்பள்ளி ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருவதுடன், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் இம்முன்பள்ளியில் கல்வி கற்றுள்ளனர். ஆகவே, இந்தக் கிராமத்தினதும், தொல்புரம் கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் இம் முன்பள்ளி நீண்டகாலமாகப் பங்களித்து வருகிறது. அதன் வளர்ச்சியையும் உயர்ச்சியையும், இப்பிள்ளைகளின் கல்வி நிலைமையிலிருந்து காண முடிகிறது. ஆகவே, இந்தப் பிள்ளைகள் தங்களுடைய கல்வியை முன்பள்ளியுடன் மட்டும் நிறுத்திவிடாமல், அதற்கு மேலான கல்வியையும் தொடர்ந்து கற்க, இந்தச் சனசமூக நிலையம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், கிராமத்து மக்களின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது எனவும், நிகழ்வு சிறிய இடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலும், பெருமளவான மக்கள் ஒன்றுகூடியிருப்பது அந்த ஒற்றுமையின் அடையாளமாகும். ஆகவே, கல்வி சார்ந்த செயற்பாடுகளிலும், சமூக அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளிலும் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், சிறப்பு விருந்தினர்களாக யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் திரு. பாலசிங்கம் பாலசுப்பிரமணியம், யா/மூளாய் அ.மி.த.க. பாடசாலை அதிபர் திருமதி சகுந்தலா கேசவன், கிராம சேவையாளர் திருமதி தீசன் கோபிகா, முன்பள்ளி இணைப்பாளர் திருமதி ரகுநாதன் சத்தியரூபி, பொது சுகாதாரப் பரிசோதகர் திரு. ஜெயராஜசிங்கம் கோபிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருந்தினர்களின் வருகையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், மும் மொழிகளில் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்புரை, ஆசியுரை, விளையாட்டுப் போட்டிகள் என்பன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள், வினோத உடைப் போட்டி, வரவேற்பு நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும், நினைவு வெளியீடு வெளியிடப்பட்டது டன், இசையமைப்பாளர்கள், சேவையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 9 8 10 11 12