பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246), தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 1986ஆம் ஆண்டுகாலப்பகுதியில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இந் நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் நோக்கில் காணி உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் இன்றைய தினம்(04.08.2026) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. சிவகெங்கா அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றலுடன்நடைபெற்றது. குறித்த காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் விலை மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக் கொள்ளவது அவசியமென்பதால் இதற்கான சம்மதம் தெரிவிக்கும் படிவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. காணி உரிமையாளர்களின் காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்காகவே ஆகும். தொடர்ந்து தமது காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்த காணி உரிமையாளர்களிடம் விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களது காணிகளை 2022ஆம் காலப்பகுதிக்கு உரியதாக மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் காணி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட படிவத்தின் ஆங்கில மொழி மூலமான படிவமும் தமிழ் மொழி மூலமான படிவமும் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த படிவத்தில் தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டினை நட்ட ஈடாக பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன் என்ற சொற்றொடர் தமக்கு குழப்பமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய காணி உரிமையாளர்கள், அதனை விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விலை மதிப்பீட்டுக்கு உடன்படுகிறேன் என மாற்றுமாறு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தனர். குறித்த விடயம் அமைச்சுக்கு உட்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட அரசாங்க அதிபர் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக இதனைத் திருத்தி அமைச்சுக்கு அனுப்பி அவர்களிடமிருந்து முடிவினை பெற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டதுடன், அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக காணி உரிமையாளர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதுடன், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுக்க கடந்த 40 ஆண்டுகளாக பிரதேச செயலகம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளது. அதன் அடிப்படையில், 1986 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டிற்கு அமைய, நஷ்டஈடு வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான காணி உரிமையாளர்கள் தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்த போதிலும், ஒரு சில காணி உரிமையாளர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல், தமக்குரிய காணிகளை வழங்குமாறு கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் (SME) கொள்கை உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில் (SME) கொள்கையை உருவாக்கும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு கலந்துரையாடல் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாகாண பணிப்பாளர் திரு. சி. சிவகெங்காதரன் அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இக் கலந்துரையாடலில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாகத் திகழும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் அனுபவங்களும், கருத்துகளும், பரிந்துரைகளும் தேசியக் கொள்கை வடிவமைப்பில் உரிய முக்கியத்துவத்துடன் உள்வாங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என தெரிவித்தார். யுத்தத்திற்குப் பின்னர் மாவட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மிகச் சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில்களாக ஆரம்பிக்கப்பட்ட பல முயற்சிகள் இன்று சர்வதேச சந்தையை நோக்கி பயணிக்கும் ஏற்றுமதி நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றிருப்பது மாவட்டத்தின் தொழில்முனைவு ஆற்றலுக்குச் சான்றாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். ஒரு தொழில்முனைவோரின் வெற்றிப் பயணத்தை நிர்ணயிப்பவை அறிவு (Knowledge), திறன் (Skill), மனப்பான்மை (Attitude) என்ற மூன்று அடிப்படைத் தூண்களே எனக் குறிப்பிட்ட அவர், தரமான உற்பத்தி மட்டுமே போதுமானதல்ல அதனுடன் தரமான பொதியிடல், தனித்துவமான வர்த்தக அடையாளம் (Branding), வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தரும் சேவைத் தரம் மற்றும் நேர்மறைச் சிந்தனையுடன் கூடிய தொழில்முறை அணுகுமுறை ஆகியவையும் வெற்றிக்கான இன்றியமையாத கூறுகளாகும் எனத் தெரிவித்தார். மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் தமது நடைமுறை அனுபவங்களின் அடிப்படையில் முன்வைக்கும் கருத்துகளும் பரிந்துரைகளும் தேசியக் கொள்கை வகுப்பில் கட்டாயம் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும், அரச நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட்டாலேயே துறையின் நீண்டகால சவால்களுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி, வரி நிர்வாகம் மற்றும் தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் தொழில்முனைவோர் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்கு பயனுள்ள தீர்வுகளை அடையாளம் காண்பதே இக் கலந்துரையாடலின் நோக்கமாகும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், தொழில்முனைவோர் தங்களது கருத்துகளைத் தயக்கமின்றி ஆக்கபூர்வமாக முன்வைக்குமாறும், அவை அனைத்தும் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு எதிர்கால தேசியக் கொள்கை வடிவமைப்பில் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொழில்முனைவோரின் வெற்றியிலேயே தங்கியுள்ளது எனவும், அந்த வெற்றிக்கான பாதையை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் தங்களது துறைசார் சவால்கள், எதிர்கால வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்திக்கான பரிந்துரைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர். தொழில் முனைவோரின் அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளை தேசிய கொள்கை உருவாக்கத்தில் உள்வாங்கும் நோக்கில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல், உற்பத்தி, சந்தைப்படுத்தல், சேவைத் துறை, விவசாயம் சார்ந்த முயற்சிகள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியது.
இக் கலந்துரையாடல் மூலம் தொழில் முயற்சியாளர்களின் உண்மையான தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்ட வலுவானதும் நடைமுறைசார் கொள்கையொன்றை உருவாக்குவதற்கான முக்கியமான கருத்துக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசகர்களான திரு. டென்வி செனவிரட்ண, திரு. ரணில் டிஸாரா, வட மாகாண கைத்தொழிலாளர் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், சேவை மற்றும் விவசாயம் சார்ந்த முயற்சியாளர்கள், கைத்தொழில் அபிவிருத்தி சபை, தொழில் திணைக்களம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உற்பத்தித் திறன் நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் திட்டத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், பயிற்சிப் பட்டறை ஒன்று இன்றைய தினம்(03.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், இத்திட்டம் தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளில் எதிர்நோக்கப்படும் சில நடைமுறைச் சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக மாவட்ட உதவி ஆணையாளர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பதால், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இதனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்திட்டம் முதன்முதலாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். காணி உரிமை தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகள் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டாலும், உரிமை ஆவணங்களைத் தயாரித்தல், பதிவு செய்தல் மற்றும் உரிய ஆவணங்களை மக்களிடம் கையளித்தல் போன்ற கட்டங்களில் சில நடைமுறைச் சிரமங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
தனியார் காணிகளின் உரிமையை தெளிவாகவும் சட்டரீதியாகவும் உறுதிப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக இருந்தாலும், எஞ்சியுள்ள சிக்கல்களுக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவது அவசியம் என்றும் தெரிவித்தார். காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ள நிலையில், இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, மக்களுக்கு அதிகபட்ச நன்மை கிடைக்கச் செய்வதற்காக அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன், உதவிப் பதிவாளர் நாயகம் J.K.S.K. கருணாரட்ண, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் ஆணையாளர் (விசாரணை) சுனேத்திரா கோரள ஆராய்ச்சி, உதவி ஆணையாளர்கள் D. ஜெயரட்ண மற்றும் O.G.C.M. குணவர்த்தன, மேலதிக உரித்துப் பதிவாளர் R.M.R. தேனுஜா பியரத்தின, உரித்துப் பதிவாளர் C.D. ஹெட்டியாராய்ச்சி, மேலதிக மாவட்ட பதிவாளர் W.A.H.L. ரத்னசூரியா, பிரதிப் பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்ணம், உதவிப் பதிவாளர் நாயகம் P. தாரகா, யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவாளர் குணாஜினி, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி ஆணையாளர் த. தயாளன் மற்றும் காணி உரித்து உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண பிரதேச பண்பாட்டுப் பெருவிழா யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன் தலைமையில் இன்று (05.08.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மேலும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு. கணேசமூர்த்தி பார்த்திபன் சிறப்பு விருந்தினராகவும், மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஷ்ணானந்தன் மற்றும் மூத்த நாட்டுக்கூத்துக் கலைஞர் கலாபூஷணம் வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
கலாபூஷணம் எலியாஸ் வரப்பிரகாசம் அவர்களின் கலைப் பணிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழா, தமிழ் பண்பாடு, கலை மற்றும் இலக்கிய மரபுகளைப் போற்றும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் சிறப்புற இடம்பெற்றது. பரியோவான் கல்லூரி முன்றலிலிருந்து தமிழ் இன்னியம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம் மற்றும் வரவேற்பு சிலம்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய வண்ணமயமான பண்பாட்டு ஊர்வலத்துடன் விருந்தினர்கள் விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து, கலாசாரப் பேரவை கீதம், சர்வமத ஆசியுரைகள் மற்றும் வேலாயுதம் சுப்பிரமணியம் குழுவினரின் மங்கல இசை ஆகியன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து யாழ். திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் திரு. யோ. யோன்சன் ராஜ்குமார் அவர்கள் அரங்க திறப்புரையாற்றினார். சுவஸ்திக் நுண்கலைக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி துஷியா கஜமுகனின் வரவேற்புரை, பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தனின் தலைமை உரை என்பன நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.\ கிராமியப் பாடல்கள், கும்மி நடனம், வாத்திய இசை, இஸ்லாமிய கலை நிகழ்வு, சிலம்பாட்டம், சமூக விழிப்புணர்வு நாடகம் மற்றும் ஈழத்து கூத்திசைப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் கலாசாரச் செழுமையை வெளிக்கொணர்ந்தன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வடக்கு மாகாணத்தில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக பல ஆண்டுகளாக பண்பாட்டு பெருவிழாக்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது பாராட்டத்தக்க பண்பாட்டு மரபாகும் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போன்ற பல இன மக்கள் வாழும் நகர்ப்புறப் பகுதியில் இவ்வாறான பெருவிழா சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாவும் தெரிவித்தார். பண்பாட்டு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், நினைவுப் பேருரைகள், கலைஞர்களின் கலை வெளிப்பாடுகள் என நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் தமிழர் பண்பாட்டின் வளத்தையும் பெருமையையும் வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமன்றி, வருங்கால சந்ததியினருக்கும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழர் பண்பாட்டை அறிமுகப்படுத்த பல்வேறு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்து வருவதாகவும், அதேபோல் தாயகத்திலும் பெற்றோர் தமது பிள்ளைகளை பாரம்பரியக் கலைகளில் ஈடுபடுத்துவது பாராட்டத்தக்க விடயமாகும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களின் பணி நிர்வாகச் சேவைகளை வழங்குவதில் மட்டும் மட்டுப்படாமல், சமூகத்தின் கலை, கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்குள்ளதாகவும் எனவும் தெரிவித்தார். அழிந்து வரும் பாரம்பரியக் கலை வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என்றும், அதனை முன்னெடுப்பதில் யாழ்ப்பாண பிரதேச செயலகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். வயதில் மூத்த கலைஞர்களை கௌரவிப்பதோடு மட்டுமன்றி, இளம் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவது அவர்களின் கலைப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் சிறந்த முன்முயற்சியாகும் என்றும், "யாழ் ரத்னா" உள்ளிட்ட விருதுகள் கலைஞர்களுக்கான சமூக அங்கீகாரத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் தமிழர்களுடன் முஸ்லிம் மக்களும் வாழும் பல்வகை சமூக அமைப்பு காணப்படுவதால், அனைத்து சமூகங்களின் பண்பாட்டு அடையாளங்களையும் உள்ளடக்கிய வகையில் இப்பண்பாட்டு பெருவிழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை அதன் தனிச்சிறப்பாகும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கலை மற்றும் அழகியல் துறையில் பட்டம் பெற்ற பல உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த மாவட்ட மட்டத்தில் நிரந்தர கலை மேடைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்தார்.
குறிப்பிட்ட நாட்களில் மாவட்ட செயலக வளாகத்தில் இலவச கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலாசார உத்தியோகத்தரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் அரச உத்தியோகத்தர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் கலை ஆர்வலர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதோடு, மாவட்டத்தின் கலை வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இவ் விழாவில் யாழ் ரத்னா மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டதுடன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய கலைப் போட்டிகளில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு – ரூ. 8.9 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் ஆரம்பம்! யாழ்ப்பாணம் தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.எஸ். கபிலன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் திருமதி சிவகங்கா, மதகுருமார்கள், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர், துறைசார்ந்த அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இத் திட்டத்திற்காக அமைச்சினால் ரூபா. 8.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதையடுத்து கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், அதிதிகள் உரைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான ஆவணத்தை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் கையளித்தார்.






