வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்தன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட, ஊடகவியலாளர்களை ஊக்கமூட்டும் நிகழ்ச்சி இன்றைய தினம்(31.07.2026) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமை வகித்தார். இந் நிகழ்வில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.எச்.எஸ்.ஜே. பண்டார, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் (தொடர்பாடல்) திரு. எல்.பி.திலகரட்ண உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வரவேற்புரையுடன் தலமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான தெளிவூட்டல் மற்றும் ஊக்கமூட்டல் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், வட மாகாணத்தில் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வாண்டுக்கான தெளிவூட்டல் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்வாக இது அமைந்துள்ளதாகவும், ஊடகவியலாளர்களின் தொழில்முறை மேம்பாடு மற்றும் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து அவர்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடிதாகவும், பயிற்சி நிகழ்வினை நிறுத்தி இந் நிகழ்வினை ஊடகவியலாளர்களின் பிரச்சனைகளை கோரிக்கைகளை கலந்துரையாடுவதற்கான நிகழ்வாக இதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதில் கலந்துகொள்ளுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கையினை முன்வைத்ததாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். இது தொடர்பான விடயங்கள் கௌரவ பிரதி அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், மேலும், ஊடகவியலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கையுடன் இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் தொழில் முறைத் திறன்களை மேம்படுத்துவதில் இந் நிகழ்வு முக்கிய பங்காற்றும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் ஊடகத்துறை சார்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் எமது மாவட்டத்திற்கு நேரடியாக வருகை தந்துள்ளதுடன் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை, கோரிக்கைகளை, தேவைப்பாடுகளை முன்வைக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்திற்கு கௌரவ பிரதி அமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வு அரசாங்கத்தின் பிரதி அமைச்சருடன் ஊடகவியலாளர்கள் தங்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை கலந்துரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாகும் என தெரிவித்தார். தொடர்ந்து, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எச்.எஸ்.ஜே. பண்டார அவர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிகள் மற்றும் ஊடகங்களுடனான ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்பாக விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதற்கு பிரதி அமைச்சர் உரிய விளக்கங்களையும் பதில்களையும் வழங்கினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் 2025 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய "செயலக மடல்" யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் கௌரவ பிரதி அமைச்சர் அவர்களிடம் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் தலைமைப் பீட உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







