பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை (Northern Zonal Record Room) இன்று (30.07.2026) காலை 08.30 மணிக்கு வவுனியா மாவட்டம் A 9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் சேதமடைந்திருந்தால், அவற்றின் பிரதிகளை இதுவரை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
இனிமேல் குறித்த ஆவணங்களை வவுனியாவில் அமைந்துள்ள வடக்கு வலய பதிவறையிலேயே பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இன்றுமுதல் உடனடியாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இவ்வலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டாக்டர் செல்வத்தம்பி திலகநாதன், கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஏ. உமாமகேஸ்வரன், பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6 7
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.07.2026) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில், நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். மேலும், வடமாகாண கல்வித் திணைக்கள மாகாணப் பிரதிப் பணிப்பாளர் திரு. சுபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அத்துடன், யாழ் பிராந்திய லயன் கழகத்தின் லயன். செ. சிவலிங்கம், யாழ்ப்பாணம் லயன் கழகத்தின் லயன். க. கபிலேந்திரன், கற்றலிஸ்ற் லயன் கழகத்தின் லயன். அனிற்றா ரவிசங்கர் மற்றும் பிரதம பதிப்பாசிரியர் லயன் கழகங்களின் லயன். சி. பூபதி அம்மாள் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், பாதுகாப்பு சபையின் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்களை வரவேற்றார். மேலும், இலங்கை சமூக பாதுகாப்பு சபை தொடர்ச்சியாக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வுகளை முன்னெடுத்து வருவதுடன், அதற்கு அப்பாற்பட்டு சிறுவர்களைச் சேமிப்புப் பழக்கத்திற்கு ஊக்குவித்து, அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக பாதுகாப்பு சபையின் இணைப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்கள் இணைந்து தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் அதிகளவில் சேமிப்பை ஊக்குவிக்கும் பிரதேச செயலகங்களையும் மாவட்டங்களையும் கௌரவிக்கும் செயற்பாட்டை இலங்கை சமூக பாதுகாப்பு நாடாத்திவருவதாகவும், தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் மாவட்டம் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுவருவதனை பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும், குறைந்த வயதிலேயே பிள்ளைகளை இத்திட்டத்தில் இணைப்பதன் மூலம் அவர்கள் அறுபது வயதை அடையும் போது இயல்பாகவே ஓய்வூதியப் பயனைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகின்றது என்றார். அரச சேவையில் பலர் விரும்பும் முக்கிய அம்சங்களில் தொழில் பாதுகாப்பும் ஓய்வூதிய வசதியும் அடங்கும். ஆனால், அரச சேவையில் இணைந்திருக்காவிட்டாலும், இத்திட்டத்தின் மூலம் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஓய்வூதியப் பாதுகாப்பைப் பெற முடியும் என்பதால், இது மிகவும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், பெற்றோர்கள் தங்களது எதிர்கால பிள்ளைகள் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் இணைத்திருப்பது அவர்களின் அன்பையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துவதாகும் தெரிவித்தார். எனவே, மாணவர்கள் கல்விக் காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொண்டு, உயர்ந்த பொறுப்புகளையும் பதவிகளையும் அடைய முயற்சிக்க வேண்டும் என்றும், தங்களது பெற்றோரின் தியாகத்தையும் பெருந்தன்மையையும் என்றும் மதித்து வாழ வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, வடமாகாண சமூக பாதுகாப்புச் சபையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு. பா. பிரதீபன் அவர்கள் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விளக்கவுரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் திரு. எஸ். கபிலன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கௌரவ விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர் மற்றும் பிரதம விருந்தினர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. இந் நிகழ்வின் முக்கிய அம்சமாக, தகுதி பெற்ற 221 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இதில் 8 மாணவர்களுக்கு ரூபா 50000.00 வீதமும், 15 மாணவர்களுக்கு ரூபா 25000.00 வீதமும், உள்ளடங்கலாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் புலமைப் புலமைப் பரிசில்கள் வழ ங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக, அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. ஜே. விவேகா அவர்கள் நன்றியுரையாற்றியதுடன் நிகழ்வு நிறைவுற்றது. இந் நிகழ்வில் திட்மிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவில் கலந்துகொண்டார் கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 19 20
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு L.C.ஆனந்த் தலைமையில் இன்றைய தினம் (28.07.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இங்கு ஒன்று கூடியிருக்கும் இந் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தார். ஒரு குழந்தை தனது குடும்பச் சூழலில் இருந்து வெளியேறி முதன்முதலாக எதிர்கொள்ளும் சமூக நிறுவனம் முன்பள்ளியாகும். சமூகமயமாக்கல் எனும் செயன்முறையின் முதலாவது படியை அமைத்துக் கொடுப்பவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களே எனவும், ஒரு பிரஜையின் ஆளுமை உருவாக்கத்திலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் முன்பள்ளிக் கல்வியின் பங்கு மகத்தானது எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றாடல் பாதுகாப்பு என்பது இன்றைய காலத்தின் மிக அவசியமான தேவையாகும். எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து சுற்றாடல் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் மனோபாவ மாற்றமே முதன்மையாக வலியுறுத்தப்படுகிறது. அந்த மனோபாவ மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைப்பவர்கள் சிறுவர்களே என்றும் தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில், குறிப்பாக ஜப்பானில், சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு ஒழுக்கம், தூய்மை, பொறுப்புணர்வு போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் முறையாகக் கற்பிக்கப்படுகின்றன. அதேபோன்று எமது நாட்டிலும் சிறுவர் மட்டத்திலிருந்தே குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை, பொலித்தீன், பிளாஸ்டிக் என்பவற்றைத் தனித்தனியாக அகற்றும் பழக்கத்தை உருவாக்குவது அவசியம் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
மிகக் குறைந்த கொடுப்பனவிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இப்புனிதமான பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை உயர்வாக மதிப்பதுடன், அவர்களுக்கான உரிய அங்கீகாரமும் ஊக்குவிப்பும் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகளும் சுற்றாடல் கல்விக்கான வளங்களும் வழங்கப்படவுள்ளதாகவும், அவற்றைப் பெற்று பயனுள்ளதாகப் பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 110 முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், இன்றைய தினம் (28.07.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் (சிறப்புத் திட்டங்கள்) திரு. எஸ். எஸ். கொடகண்டா ஆராய்ச்சிகே, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (சிறப்புத் திட்டங்கள்) திரு. எச். கே. எஸ். எஸ். குணசேகர, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திருமதி பிரசாந்தி சங்கர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. எஸ். சிறிவாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்த கௌரவ அமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், மாவட்டத்தின் போக்குவரத்து தொடர்பான முன்னேற்றங்களை அமுல்படுத்துவதற்கும், போக்குவரத்து தொடர்பான விடயங்களை ஒருங்கிணைத்து கையாள்வதற்குமான போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இக் கூட்டத்தில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்கள் கலந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளில் அனைவரும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்படலாம், மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்கலாம், அதேபோன்று வீதி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் எவ்வாறு கூடுதல் அக்கறை செலுத்தி, மாவட்டத்தை போக்குவரத்துத் துறையில் சிறந்ததும் ஆரோக்கியமானதுமான மாவட்டமாக மாற்ற முடியும் என்பதற்காக அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாண போக்குவரத்து உபகுழுக் கூட்டத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளையும், மத்திய அரசாங்கத்தின் வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக இக் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது சர்வதேச சூழ்நிலைகளின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வீதிகளுக்குத் தேவையான தார் கொள்வனவு குறைவடைந்துள்ளதாகவும், அதனால் வீதி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மீண்டும் நிதி அமைச்சிற்கு திரும்பிச் செல்லாமல், மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் வீதி தேவைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். வீதி அபிவிருத்தி தொடர்பான தேவைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்மொழியுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆரம்ப காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய அனைத்து வீதிகளும் தரமான வீதிகளாக அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வீதிகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி, முன்னுரிமை அடிப்படையில் வீதிகளின் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மேலும், பாடசாலை போக்குவரத்து சேவைகள் தொடர்பான விபரங்களை கல்வித் திணைக்களங்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. விசேட தினங்களில் நயினாதீவு கடற்போக்குவரத்து படகுச் சேவையை அதிகரிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
கௌரவ அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் எனக் குறிப்பிட்டார். தற்போது வீதிப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், வீதிகளை புனரமைப்பதற்குத் தேவையான உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் வீதிப் பணிகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) முன்னர் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். முன்னைய காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்திப் பணிகளை முன்மாதிரியாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்றும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள், இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நிறைவு பெறாத வீதிகளின் மதிப்பீடு, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், புகையிரதத் திணைக்களத்தின் சேவைகள், இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள், ஆளணி, கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வீதிகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு இக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதுடன், அவற்றிற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இறுதி அனுமதி பெறவும் தீர்மானிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் முகாமையாளர்கள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

1 2 3 4 5 6 7 8 9 10

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை"தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது "நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி இன்று (28.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்தும், கெளரவ ஆளுநர் செயலகத்திலிருந்தும் சமநேரத்தில் ஆரம்பமாகியது.
இந் நடைபவனியில் - மாவட்டச் செயலகத்திலிருந்து மாவட்டச செயலக உத்தியோகத்தர்கள், அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், பொலிஸ் மற்றும் முப்படையினரும், அதேவேளை கெளரவ ஆளுநர் செயகத்திலிருந்து ஆளுநர் செயலகம், பிரதம செயலாளர் செயலகம், மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள். இவ் நடைபவனியில் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், பிரதிப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.எஸ் கபிலன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
மேலும், இந் நடைபவனி மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகி - வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படி சந்தியை அடைந்து, அங்கிருந்து முதலாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதியைச் சென்றடைந்து, பஸ்ரியான் சந்தி மற்றும் கண்டி வீதி ஊடாக மீண்டும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் செயலகத்தை காலை 10.00 மணியளவில் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

1 32 4 5 6 7 8 8 9 11 1314 15