யாழ் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.06.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், எமது மாவட்டத்தின் கலைகளை வளர்க்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் எனவும், கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
01.கலைஞர்களை பிரதேச செயலக ரீதியாக ஒன்றுதிரட்டி "கலைச் சங்கமம்" நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
02. இளம் கலைஞர்களுக்கான கலை பயிலரங்கத்தினை மாவட்டச் செயலகத்தில் - யூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடாத்தவும், அதில் குறைந்தது 75 கலைஞர்கள் பங்குபற்ற ஒழுங்கு செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
03.மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கிடையிலான உத்தியோகத்தர்களுக்கான கவிதை, சிறுகதை, பேச்சு, அறிவிப்பாளர், தனி நடிப்பு, ஓவியம், நடனம் உள்ளிட்ட 16 வகையான கலைப் போட்டிகளை யூலை மாதத்திலிருந்து நடாத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு.எம்.வித்தியானந்தநேசன், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கி. மாலினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.06.2026) பி. ப. 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டீ.பி சரத் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா அவர்களும் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் தலையுரையினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களினால் கருத்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டீ.பி சரத் அவர்களினால் சிறப்புரையாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா ரூபா 02.00 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்படும் 827 வீடுகளில் இன்றைய தினம் 125 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூபா 400,000.00 வீதம் காசோலை வழங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளில் முதற்கட்டமாக 180 பயனாளிகளுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.06.2026) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகையில் காணி வழங்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விரிவாக ஆராயப்பட்டு, சில காணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனைய காணிகளுக்கான சாத்தியப்பாட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டதுடன், காணிப்பயன்பாட்டுத் திட்டம் தயாரிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், விவசாயத்ததிணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டீ.பி சரத் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.06.2026) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கெளரவ பிரதி அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை வரவேற்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இங்கு கூடியுள்ளதக்கவும், இவ் வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சினால் 827 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக 281 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்j.
மேலும், அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடுகளுக்கு - அமைச்சரவை மூலம் ஒரு வீட்டிற்கு 1.50 மில்லியன் ரூபாவிலிருந்து அதிகரித்து 2.00 மில்லியன் ரூபாவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கும், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டீ.பி சரத் அவர்களுக்கும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டதுடன், கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றில் நடைமுறைப்படுத்திவரும் வீடுகளுக்கான பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை மேலதிகமாக வழங்குவதற்கான கோரிக்கையையும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2018 மற்றும் 2019 இடைநடுவில் கைவிடப்பட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி வழங்குதல் தொடர்பான கோரிக்கையையும் முன்வைத்தார்.
கெளரவ அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் - காணி இல்லாதவர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாகவும், வீட்டுத்திட்டம் இல்லாதோர் விபரங்கள், வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள், எதிர்காலத்தில் தேவையான வீடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கெளரவ பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில், சூரிய சக்தி மற்றும் மின்சக்தி இணைப்பு தொடர்பான இரு நாள் பயிற்சி நெறி இன்றைய தினம் (15.06.2026) மேலதிக அரசாங்க திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், சூரிய சக்தி செயற்றிட்ட பயன்பாடு தற்போது அதிகரித்துவருவதாகவும், இப் பயிற்சி நெறி மூலம் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பாகவுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், உயர் தொழில் நுட்பம், இலகுவாக கையாளும் முறைமை, பொருத்து வேலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய வகையில் இப் பயிற்சி நெறி அமைகின்றது எனவும், இன்றைய காலகட்டத்தில் தேவைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இப் பயிற்சி நெறியினை சரியாக பயன்படுத்தி தொழிலில் முன்னேற்றம் அடைய தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், பயிற்சி நெறியின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக இழப்பீட்டு அலுவலகத்தினைச் சேர்ந்த உதவிப்பணிப்பாளர் திரு. அருண் பிரதீபன் விளக்கவுரையாற்றிய போது, இழப்பீட்டு அலுவலகத்தினால் இது வரை வேலணை குறிகட்டுவானில் ஆரோக்கிய உணவகம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், சண்டிலிப்பாய் பிரதேச பிரிவில் 40 பயனாளிகளுக்கு ஆரிவேர்க் (Aari Work) தையல் பயிற்சி வழங்கப்பட்டு 06 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊர்காவற்றுறை பிரதேச பிரிவில் 25 பயனாளிகளுக்கு ஆரிவேர்க் (Aari Work) தையல் பயிற்சி வழங்கப்பட்டு 06 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சாவகச்சேரி சந்திரபுர கிராமத்தில் 40 பேருக்கு பனைசார் உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், கோப்பாய் பிரதேசத்தில் மெழுகுவர்த்தி பயிற்சி 25 பேருக்கு வழங்கப்பட்டு 06 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் 25 பேருக்கு சூரிய சக்தி மற்றும் மின்சக்தி இணைப்பு பயிற்சி வழங்கப்படுவதாகவும், இதன் மூலம் NVQ Level Ill தரத்திலான சான்றிதழ் வழங்கப்படுவதுடன், சூரியகலன் இணைப்பினை வழங்கும் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு பெறவும் வழிஏற்படுத்திக்கொடுக்கப்படும் எனவும், தெரிவித்தார்.
இதன்போது வளவாளர்களாகக் கலந்துகொண்ட பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொறியியலாளர் திரு. கிரிசாந்தன் மற்றும் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் எந்திரி ரவீந்திர குருசிங்க, தொழில்நுட்ப உதவியாளர் திரு. B. W. A. R பிரியங்கர ஆகியோர் சூரிய சக்தி பயன்பாடு, மின்சக்தி இணைப்பு நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். இரு நாட்கள் நடைபெறவுள்ள இப் பயிற்சி நெறி, சூரிய சக்தி தொழில்நுட்பம் தொடர்பான அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், I Fix Green Solutions நிறுவனத்தினைச் சேர்ந்த திரு. வேனிட்டன், திரு. யே.தனு உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.






