ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் வாசனை திரவியங்கள் தொடர்பான செயற்பாட்டு தொழில்நுட்பம் (spice processing technology) தொடர்பான பயிற்சி நெறி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(10.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், ஒவ்வொருவரும் இந்த நிலையின் ஆரம்ப கட்டத்தை பின்னோக்கி பார்ப்பீர்களாக இருந்தால் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்துள்ளீர்கள் என்பதை உங்களால் உணர முடியும் என்றும், இவ்வாறான தொழில் சுயமுயற்சியாளர்களுக்கு அரசாங்க அதிபர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்த துறையில் தொழிலுக்குரிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது எனவும் உற்பத்தி செயற்பாட்டின் போது பொருள்களுக்கான பொதி இடல் தொடர்பிலும் பல்வேறு நுட்பங்களை பயிற்சி மற்றும் அனுபவங்களூடாக பெற்றுள்ளதாகவும், இவ்வாறு பொதியிடல் மற்றும் பொருளின் தரம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொருளின் தரம் சரியாக இருக்குமே ஆனால் பொருளின் கேள்வியை அதிகரிக்க முடியும் என்றும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொண்டால் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு உற்பத்தி தொடர்பான இலகுவான தொழில்நுட்பங்களை கண்டறிந்து அந்த தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப உற்பத்திகளை மேற்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தொழில்துறையில் தொடர்ந்து நிலைத்திருந்து வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதியின் கருப்பொருளாக காணப்படும் வாசனை திரவியங்களே இன்று பேசுபொருளாக காணப்படுகிற நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பாரம்பரியமாக காணப்படும் அவ் வாசனை திரவியங்களை மீள கட்டியேழுப்புவதற்கான பயிற்சி நெறியாக இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை எவ்வாறு கட்டி எழுப்பலாம்,அதன் முக்கியத்துவத்தை எவ்வாறு மீள ஒழுங்கு செய்யலாம் வாசனை திரவியங்களை தெரிவு செய்தல் மற்றும் பதப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடக்கு மாகாண உதவி பணிப்பாளரும் மாகாண பிராந்தி இணைப்பாளருமான திரு க.கனோஜன், வளவாளராக தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் பொறுப்பதிகாரி நா.சோமநாத் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிறு தொழில், நடுத்தர முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம்(10.06.2026) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2026.06.15ஆம் திகதி தொடக்கம் 2026.06.30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், கடந்த திருவிழாவில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாகவும், குறிப்பாக கடற்போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
01.பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் - முதல் 10 நாள் வரை 25 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், இறுதி 5 நாட்களும் சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனவும், குறிகட்டுவானில் முதல் 10 நாள் வரை 5 பேரும் இறுதி 5 நாட்களில் மேலும்10 பேரும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
0 2.திருவிழாவிற்காக 42 தனியார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை வணிக கப்பல் துறை செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பரிசீலனை மேற்கொள்ளவதுடன் இந்த 42 படகுகளை தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும், அவ்வாறு வேறு படகுகளில் ஏற்றினால் பொலிஸாரின் நடவடிக்கை உட்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
03.படகோட்டிகள் மது பாவனையில் இருந்தால் படகும் அதன் ஓட்டுனரும் மூன்று மாதங்களுக்கு அப் படகினை ஓட்டுவதற்கு தடை விதித்தல் எனவும், இதற்கு படகு உரிமையாளர் சங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
04.நயினாதீவு பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் - படகுகளில் பயணிக்கும் போது உயிர்காப்பு அங்கி அணியாது பயணிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மதுபோதையில் படகுகள் செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மக்கள் சமூக பொறுப்புடன் செயல்படுமாறும் அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
05.படகுகளில் பக்தர்கள் உயிர்காப்பு அங்கிகள் அணியாது பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், பயன்படுத்தப்படும் உயர்காப்பு அங்கிகள் பாவணைக்கு உகந்தவையா எனவும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ், கடற்படை ஆகியோர் இணைந்து பரிசீலனை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
06.சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது மற்றும் இறுதி இரு திருவிழாவிற்கும் யாழ்ப்பாண மாவட்ட சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
07.குறிகட்டுவானிலிருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 100.00 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நயினாதீவிலிருந்து காலை 6.00 மணிக்கும் குறிகட்டுவானிலிருந்து காலை 6.30 மணிக்கும் போக்குவரத்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
08.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
09.நயினாதீவுக்கு கட்டடப் பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது குறிகட்டுவானிலிருந்து பி. ப 4.00 மணிக்கு பின்னர் ஏற்றலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
10.யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு முதல் 10 திருவிழாக்களுக்கும் ஒரு நாளுக்கு மூன்று பேரும் இறுதி ஐந்து திருவிழாக்களுக்கும் ஆறு பேருமாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
11.தனியார் மற்றும் அரச சேவை வீதிப்போக்குவரத்து சேவை கட்டணம் ரூபா 184.00 எனவும் தீர்மானிக்கப்பட்டது.
12.கோயில் கோபுரத்திற்கு முன்பக்கமாக தனியார் கடைகள், தாகசாந்தி நிலையம் அமைப்பதனை தவிர்க்குமாறு பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டது
மேலும், குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ்.கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் திரு.கே.சரவணபவானந்தன், வேலணை பிரதேச செயலாளர் ரி.அகிலன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(09.06.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இவ் வருடத்துக்கான இரண்டாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டமாக இது அமைந்துள்ளதாகவும், பிரதேச செயலாளர்கள் உள்ளக கணக்காய்வு முகாமைத்துவ பொறிமுறையினை வினைத்திறனாக செயற்படுத்தினால் கணக்காய்வுத் திணைக்களத்தின் பெருமளவான ஐயா வினாக்களை குறைக்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும், கணக்காய்வுத் திணைக்களம் சரியான முறையில் செயற்பட ஆற்றுப்படுத்தி வினைத்திறனான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதனை குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், அபிவிருத்தி திட்டங்களுக்கு கணக்காய்வு முகாமைத்துவ கூட்டமானது மிகவும் முக்கியமானதாக அமைவதாகவும் குறிப்பிட்டார்.
இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. பிரபாகரன், கணக்காய்வு அத்தியட்சகர் திருமதி விஜயசிறி பிரேமதாஸ, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி. பொன்ராணி பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. மேலும், இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருபா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ்.கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க.திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இசுரேந்திரநாதன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், துறைசார்ந்த கிளைத்தலைவர்கள் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு இன்றைய தினம்(09.06.2026) யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் இருக்கின்ற 500 ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமாகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய தினம் காலையிலிருந்து போட்டிகள் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றதாகவும், அதற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைகள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாராட்டுவதோடு அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார். மேலும், பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இச் செயற்பாட்டை சிறப்பாக மேற்கொள்வதாகவும், அதற்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் காத்திரமான பங்களிப்பபையும் வழங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய நிகழ்விலும் கடந்த ஆண்டு நிகழ்வுகளிலும் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாகவிருந்தும்
சமூகத்திலே உயர்ந்தவர்களாகவும், சாதனை படைத்தவர்களாகவும் சாதனை படைத்து கொண்டிருக்கின்றவர்களாக விளங்குவதனை அடையாளப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், தெற்காசிய விளையாட்டுக் போட்டிகளில் பங்கு பற்றி பதக்கம் பெற்றவர்களும் இன்று கலந்து கொண்டு இருப்பதும் மகிழ்வான விடயம் எனவும் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் ஒதுங்கியிருந்த காலம் போய் இன்று உயர்ந்த நிலையில் விளங்கிவருவதாகவும், இன்றைய தினம் 84 போட்டிகள் நடாத்தப்பட்டு அதில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு பங்கு பற்றி இருப்பதாகவும் அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைத்திருப்பதாகவும், விளையாட்டு நிகழ்வுகளோடு முடித்து விடாமல் உங்களது முயற்சியிலும், வளர்ச்சியில் என்றும் துணை நிற்போம் எனவும், இந்த நிகழ்வில் 15 பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் பதவிநிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருப்பதோடு அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது. இன்றைய போட்டியில் 84 வகையான விளையாட்டுக்கள் நடைபெற்றன. இவ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், நல்லூர் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சங்கானை பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மேலும் நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்றையதினம் (09.06.2026) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் சுன்னாகம் "வாழ்வகம்" விழிப்புல வலுவிழந்தோர் இல்ல தலைவருமான ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்புவிருந்தினராக வட்டுக்கோட்டையாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் திருமதி. ருஷிறா குலசிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பொதுநலவாய நாடுகளிற்கிடையிலான கனிஸ்ட பிரிவு பளு தூக்கும் போட்டி 2026ல் வெண்கல பதக்கம் வென்றுள்ள வீரர் திரு.பரமலிங்கம் தாரகன் அவர்களும் தெற்காசிய தடகள Championship 2025 குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள வீரர் திரு.சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் விருந்தினர்கள் பண்டவாத்திய இசையுடன் மைதானம் வரை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், கொடியேற்றலுடன் ஒழும்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் சாம்பிர்தாய பூர்வாமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த தடகள விளையாட்டுப் போட்டியில், யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலர் ரீதியான அணிகள் கலந்து கொண்டுள்ளன. மேலும் பி.ப 2.30 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






