ஒவ்வொரு வருடமும் மே மாதம் 23ஆம் திகதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை இவ் இளைஞர் தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாடாளவியரீதியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும்(Youth Club) இணைந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இந்நிலையில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், "முழு நாடும் ஒன்றாக" என்னும் தொனிப் பொருளின் கீழ், 'Say No' என்ற எண்ணக்கருவுடன் விழிப்புணர்வு நடைபவனி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(23.05.2026) நடைபெற்றது. யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி, வைத்தியசாலை வீதி ஊடாக பயணித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. விழிப்புணர்வு நடைபவனிக்கு முன்னதாக, போதைப் பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் முகமாக, போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகம், முனியப்பர் ஆலய வளாகத்தில் அரங்கேற்றப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியில், எமது மாவட்டத்தில் இருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்போம், இளைஞர், யுவதிகள் அனைவரும் ஒன்றுதிரள்வோம், எமது இளம் சந்ததியினரை போதையில் இருந்து பாதுகாப்போம், அழகான தேசத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டனர். நாட்டின் சகல பாகங்களிலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், வீதி நாடகங்கள், பேனர்கள் மற்றும் பல வினைத்திறன் மிக்க அம்சங்களுடன் இளைஞர், யுவதிகள் நடைபவணியாகவும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனப் பேரணிகளாகவும் சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க்கும் வகையில் விழிப்புணர்வு நடைபவனி மற்றும் பேரணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியில்,கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் வடக்கு மாகாண இணைப்பாளரும், யாழ். மாநகர சபையின் உறுப்பினருமாகிய கெளரவ சுந்தரமூர்த்தி கபிலன், யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திரு. தங்கமுத்து சத்தியமூர்த்தி, , யாழ்ப்பாண பிரதேச செயலாளர், இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

"அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" " என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்வு இன்று(23.05.2026) காலை 7.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு இலங்கையில் சம நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் யாழ். மாவட்டத்தில் கடற்கரையினை சுத்தப்படுத்தும் மாவட்ட நிகழ்வு பண்ணை கடற்கரையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் 'Clean SriLanka' திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல், டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு ஆகிய செயற்றிட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில், கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இன்றைய தினம் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ன அவர்களின் வழிகாட்டலிலும், 51ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக் அவர்களின் மேற்பார்வையிலும், 512ஆவது காலாட்படைப் பிரிகேடினால் பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெ.றஜீவன், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ன, 51 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் ஆளுநரின் செயலாளர், யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், யாழ்ப்பாணப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், பலாலி விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், படையினர், பொலிஸார், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் சிறப்புற நடைபெற்றது. குறித்த கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணியில் குப்பை கூலங்களுடன் பெருமளவான பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 256 கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையாக, யாழ்.குடாநாட்டின் கரையோரங்களை உள்ளடக்கிய வகையில் 30 சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கரவெட்டி, கோப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டநியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (21.05.2026) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் தீவுப்பகுதிக்கு விவாகப்பதிவாளராக திருமதி ஜிந்துஜா சசிகுமார் அவர்களுக்கும், எழுதுமட்டுவாழ் பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் தென்மராட்சி விவாகப்பதிவாளராக திருமதி காயத்திரி செந்தூரன் அவர்களுக்கும், கேப்பாய் பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் வலிகாமம் கிழக்கு விவாகப்பதிவாளராக திருமதி தாட்சாயினி சந்திரலிங்கம் அவர்களுக்கும், வட்டுக்கோட்டை பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் வலிகாமம் மேற்கு விவாகப்பதிவாளராக திருமதி ஜீவராஜினி ரமணன் அவர்களுக்கும், கரவெட்டி பிரதேசத்தின் மேலதிக விவாகப்பதிவாளராக (பொது) திருமதி தர்சிகா கஜதாசன் அவர்களுக்குமான நியமனக் கடிதங்களே அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், நியமனம் பெற்றவர்களுடன் அவர்களின் கடமைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், வடக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் திருமதி P. தாரகா, காணி மாவட்ட பதிவாளர் திருமதி எஸ். குணாஜினிஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ கருணநாதன்இளங்குமரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.05.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள், போக்குவரத்துத் துறை மிகவும் இன்றி அமையாததுடன் இங்கு நேரமுகாமைத்தவம் முக்கியமானது எனவும், போக்குவரத்தில் தடங்கல்கள் காலதாமதங்கள் ஏற்பட்டால் திட்டமிடப்பட்டவை அனைத்தும் பின்னோக்கி நகரும் எனவும், இதனால் சீரான போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி முக்கியமானது எனத் தெரிவித்தார். மேலும், கடந்த வருடம் கிராமிய வீதிகளுக்கான 1000 மில்லியன் ரூபா மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கான 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசுசரிய - பாடசாலை பேரூந்துச் சேவை, கெமி செரிய - கிராமிய இணைப்பு பேரூந்து சேவை, நிசி செரிய - பின்னிரவு பேரூந்து சேவை மற்றும் கடல்வழிப் போக்குவரத்து ஆகியன தொடர்பாக விரிவாக ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஒரு அபிவிருத்தி வேலையினை ஆரம்பிக்கும் போது நிதி ஒதுக்கீட்டுக்கு அமைய, பகுதியளவில் மேற்கொள்ளாமல் முழுமையாக நிறைவேற்றி முடிப்பதே ஆரோக்கியமானது எனவும், யாழ்ப்பாண மாவட்டமானது அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மையாக விளங்குகிறது எனவும், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட வேலைத் திட்டங்களை ஒன்றிணைந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கு காத்தரமான பங்களிப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும், 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், கிராமிய பாலங்கள் அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற பிரதேசங்களை சீர்ப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு - அனுமதிகளும் வழங்கப்பட்டன மேலும், குமுதினிப் படகு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் கெளரவ இ.தயாளன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு.எஸ்.சிறிவாகீசன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ். சிவகுமாரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினார்கள்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட தபால் முகாமைத்துவ நிகழ்நிலை மென்பொருள்(District Mail Management System) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம்(20.05.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் மென் பொருளானது அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.கி.பொ. தனபால அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், சென்ற வாரம் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கிடையிலான நிதி நிலைசார் கட்டுப்பாடுகளையும், எந்நேரமும் துல்லியமான கணக்கீடுகளை மேற்கொண்டு காலதாமதமற்ற வெளிப்படையான மற்றும் உன்னதமான அரச சேவையை உறுதி செய்வதற்காக மென்பொருள் வடிவமைப்பு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதற்கு அமைவாக, தற்போது மாவட்டச் செயலகத்திற்கு வரும் கடிதங்கள் - குறிப்பாக பொதுமக்களின் கடிதங்களுக்கு வினைத்திறனான சேவைகளை காலதாமதமின்றி வழங்குவதற்காக - அக் கடிதங்கள் மாவட்டச் செயலகத்தின் உரிய பிரிவுகளுக்கு அனுப்பி வைத்து அதற்கான நடவடிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்கப்பட்டனவா என்பதனை எவ்வேளையிலும் கண்டறிந்து கொள்வதற்கும் ஏற்ற வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இவ்வாறான மென்பொருளின் ஊடாக வினைத்திறனான சேவைகளை விரைவாக வழங்கவும், கண்காணிக்கவும் முடியும் எனவும் தெரிவித்ததுடன், அதிமேதகு சனாதிபதி அவர்களின் டிஜிற்றல் மயமாக்குதல் திட்டத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என்பதுடன், திட்டமிடல் பிரிவு உள்ளிட்ட ஏனைய பிரிவுகளும் இவ்வாறான பொருத்தமான மென்பொருளினை வடிவமைத்து வினைத்திறனாக செயற்பாட்டிற்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார். இந் நிகழ்வில் இவ் மென்பொருளினை வடிவமைத்த நிர்வாக உத்தியோகத்தர் திரு.கி.பொ. தனபால அவர்களுக்கு மெச்சுரை வழங்கி கெளரவிக்கப்பட்டார். இதற்கான தனி அலகு ஒன்றினையும் அரசாங்க அதிபர் நாடாவெட்டி ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ்.கிருபாகரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. எஸ்.ரமேஷ்குமார், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






