சங்கானை பிரதேச செயலர் பிரிவில் சதுப்புநில மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கண்டல் தாவரங்கள் (Mangroves) நடுகை செய்யும் திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு இன்றைய தினம் (20.05.2026) நடைபெற்றது. குறித்த ஆரம்ப நிகழ்வு சங்கானை பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், Child Fund நிறுவனத்தின் அனுசரணையோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தன்னுடைய சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளை மிக சிறப்பாக மேற்கொண்டுவரும் Save a life நிறுவனத்திற்கு அரசாங்க அதிபர் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதுடன், இந்தப் பிரதேசத்தில் கண்டல் தாவர வளர்ப்பு தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பித்து மேற்கொண்டுவரும் பொதுமக்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும், கண்டல் தாவரத்தின் விதைகள் வழங்கப்பட்டு தாவரங்களின் உற்பத்தி ஊடாக ஒரு வருமானத்தை பெறக்கூடிய வழியினை இந்த நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை கண்டால் தாவரங்களை கடற்கரை ஓரங்களில் நடுகின்ற போது பருவ சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்பதுடன், கண்டல் தாவரங்களை சரியான முறையில் வளர்ப்பதன் மூலம் அப்பிரதேசத்தினுடைய வளர்ச்சியை மேம்படுத்தி ஒரு சுற்றுலா சார்ந்த தளமாகவும் மாற்ற முடியும் எனவும், பொதுமக்கள் கண்டல் தாவரங்களை தங்களுடைய பிரதேசங்களில் வளர்க்கின்ற போது அதற்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்கும் இவ் நிறுவனங்கள் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறான நிறுவனங்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக வாழ்வாதார திட்டங்களை வழங்குகின்ற போது சிறிய பிள்ளைகளுடைய வளர்ச்சியிலும் மற்றும் அவர்களின் கல்வியிலும் அக்கறை காட்டி உதவிகளை வழங்குகிறார்கள். மேலும், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் நல்ல முறையில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பெற்றோர்கள் சிறந்த கல்வியை வழங்க வேண்டு எனவும், இதற்காக பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளை நிறுவனங்கள் வழங்குகின்றன எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திட்ட அறிமுகக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, அராலி கடற்கரையோரத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கண்டல் தாவரத்தினை நாட்டி வைத்து குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பசுமையான கடற்கரை, வலுவான சமூகங்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கான நிலையான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றிணையும் இந் நிகழ்வில் ChildFund நிறுவனத்தின் நாட்டு பணிப்பாளர் Aditi Ghosh, Child Fund நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் திரு. R.தவசீலன், Save a Life நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.கே. ராகுலன், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், சங்கானை பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், அராலி கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15