யாழ். மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(19.05.2026) மு.ப 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச மற்றும் பாரம்பரியமாக வைத்தியம் செய்பவர்களாக பதிவு செய்யப்பட்ட 90 சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் கடமையாற்றுவதாகவும், நெடுந்தீவில் நிரந்தரமாக வைத்தியர் இல்லை எனவும், மருதங்கேணியில் ஒருவரும், காரைநகரில் ஒருவரும், அதேவேளை நல்லூர் பிரதேச செயலக பிரிவில் அதிகபட்சமாக அரச பாரம்பரிய வைத்தியர்களாக 27 வைத்தியர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சித்த ஆயுர்வேத வைத்திய முறைகள் மீதான உலகளாவிய நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் நாட்டிற்கு வருகை தரும் நிலை அதிகரித்துள்ளது எனவும், மேலு‌ம் சங்கீதம், பரதநாட்டியம் உட்பட்ட கலைகளில் நாம் கொடிகட்டிப் பறந்ததாகவும், தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் இக் கலைகளில் ஆர்வம் காட்டி கலைகளை வளர்த்துவருவதாகவும், புலம்பெயர்ந்த மக்கள் தமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் கலைகளில் காட்டிவரும் அக்கறை மகிழ்ச்சியளிப்பதாகவும்தெரிவித்தார். மேலும், சித்த ஆயுர்வேதம் நீண்டகாலத்தில் நோய்களை குணப்படுத்தும் என்றாலும், உள்ளார்ந்த ரீதியாக ஆர்வத்தோடு மக்கள் மருத்துவ சேவையினை நாடுவதாகவும் தெரிவித்ததுடன், 12 பிரதேச செயலகங்களில் பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படுவது மகிழ்ச்சியான விடயம் எனவும், யாப்பில் சங்கத்தின் நோக்கம், கடமைகள் விபரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபை” அமைப்பதன் நோக்கமானது நமது பாரம்பரிய மருத்துவ மரபையும், மக்களின் ஆரோக்கிய பாதுகாப்பையும், இயற்கை சார்ந்த வாழ்வியலையும் காக்கும் ஒரு பொறுப்புணர்வான சமூக முயற்சியாக காணப்படுகின்றது. மேலும், சுதேச மருத்துவம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனைக் காக்கும் பாரம்பரிய அறிவுக் களஞ்சியமாக இருக்கின்றது. இயற்கை மூலிகைகள், உணவு ஒழுங்கு, உடல் சமநிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னிறுத்தும் இந்த மருத்துவ முறை, இன்று உலகளவில் மீண்டும் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட மட்டத்தில் ஒரு பாதுகாப்புச் சபையை அமைப்பது மூலம் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.
1.ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாத்தல்.
2.தரமான சிகிச்சை சேவைகளை ஊக்குவித்தல்.
3.பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல்.
4.போலியான மற்றும் தரமற்ற மருந்துகள் குறித்து கண்காணித்தல்.
5.மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற முக்கிய பணிகளை ஒருங்கிணைத்தல்.
6.இந்த சபை அரச உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கிடையே ஒரு பாலமாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவும்.
இறுதியாக மாவட்டச் சபையின் தலைவராக கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் பா.பிரபாகரன் அவர்களும், செயலாளராக டாக்டர் இ. தில்லைவாசன் அவர்களும், பொருளாளராக டாக்டர் இ.கஜன் அவர்களும், உப தலைவராக டாக்டர் T.சபேசன் அவர்களும் மற்றும் 12 நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் K.நடேசராஜன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சுதேச மருத்துவ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.செ.சுகுணன், பிரதேச செயலாளர்கள், பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை வைத்தியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC), நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், யுனிசெப் இலங்கை மற்றும் ஐ.நா. தன்னார்வலர்களின் ஆதரவுடனும், தனது புதிய டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பு மற்றும் சமூக விசாரணைப் பொறிமுறையை நேற்றைய தினம் (18.05.2026) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேகமான, மேலும் வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆதரவை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய முன்னேடியாகும். இந்த டிஜிட்டல் அமைப்புகளின் தொடக்க விழா, பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர முன்னிலையில் நடைபெற்றது. புதிய டிஜிட்டல்மயமாக்கப்பட்ட இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பானது, அதிக நேரம் எடுக்கும் கைமுறை நடைமுறைகளை நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் செயல்முறையாக மாற்றுவதன் மூலம், அரசு அதிகாரிகள் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த பலருக்கு, கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்வதையோ அல்லது அரசு நிறுவனங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்வதையோ இந்த அமைப்பு நீக்குகிறது. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் கிராம அலுவலர்கள் மூலம் நிகழ்நிலை மூலம் இழப்பீட்டுக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்யலாம். இது காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, செயல்முறையை எளிமையாகவும் மேலும் திறமையாகவும் ஆக்குகிறது. நேற்று தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய அங்கமான சமூக விசாரணைப் பொறிமுறையானது, தித்வா புயல் பேரிடர் நிவாரணம், உதவித்தொகைகள் மற்றும் இழப்பீடுகள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சேவைகள் உள்ளிட்டவை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து பெறப்படும் விசாரணைகளை முறையாக நிர்வகிக்க உதவும். இந்த விசாரணைப் பொறிமுறையானது, பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் கேள்விகளை ஒரு QR குறியீடு வழியாகவோ அல்லது வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் செயல்படும் 0716 807 807 என்ற அவசர தொலைபேசி (Hotline) எண்ணை அழைப்பதன் மூலமாகவோ நேரடியாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடம் (NDRSC) சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.
ஒவ்வொரு விசாரணையும், ஒரு ஆரம்பகட்ட மதிப்பாய்வைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கை மற்றும் பின்தொடர்தலுக்காக சம்பந்தப்பட்ட தேசிய அல்லது மாவட்ட அளவிலான NDRSC அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படும். ஒரு வினவலைச் சமர்ப்பிக்கும்போது, ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு தனித்துவமான குறிப்புக் குறியீடு வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் QR குறியீடு அல்லது Qr.ndrsc.gov.lk அல்லது hotline வழியாகத் தங்கள் விசாரணைகளின் நிலையைத் தெரிந்துகொள்ள முடியும். இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர், அனர்த்த நிவாரண சேவைகள் பணிப்பாளர் நாயகம், சகல மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
 
 
1 2.1
யாழ் மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தினால் 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைப்பதாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்ற தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் தலைவி திருமதி. மதனரூபி நிரோஷானந் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.05.2026) வியாழக்கிழமை பி.ப. 02.00 மணிக்கு யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபர் திரு. தில்லையம்பலம் வரதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் திருமதி தயாபரி கிரிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சத்தியப்பிரியா கிருஸ்ணகுமார், AVR. அறக்கட்டளையின் தலைவர் திரு. பொன்னுத்துரை சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் பிரதம விருந்தினர் உரையாற்றுகையில், தெல்லிப்பளை பிரதேசத்துக்கு ஒரு மகிழ்வான நாளாக இன்றைய நாள் அமைந்திருப்பதாகவும், இக் கல்லூரியில் இருந்து இரண்டு உதைபந்தாட்ட பெண்கள் அணிகளும் இறுதிப் போட்டி வரை பங்குபற்றியதன் மூலம் மண்ணினுடைய பெருமையை உலகறிய செய்யும் நிகழ்வினை பாடசாலை அதிபர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து அறிய முடிகிறது என்பதை குறிப்பிட்டதுடன், தேசிய ரீதியாக நடைபெற்ற உதைப்பந்தாட்ட பெண்கள் பிரிவில் 32 போட்டிகளில் யூனியன் கல்லூரி 15 வயதுக்குட்பட்ட மாணவிகள் பங்கு பற்றி தேசிய ரீதியில் முதலாமிடம் பெறுவது என்பது மிகவும் கடினமான விடயம் எனவும், இதற்கு அவர்களின் மன உறுதியே வெற்றியை பெற வைத்துள்ளது எனவும், தேசிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் போது அவர்கள் கல்வியில் நாட்டம் இல்லாமல் இருக்கின்றார்கள் என ஐயப்படும் நிலையே இன்றைய சூழலில் காணப்படுகின்ற நிலையில், அவர்கள் வெற்றியை தாங்கி நிற்கும் போது பெற்றோர்களின் மகிழ்ச்சி என்பது உண்மையில் அளவிட முடியாததொன்றாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனம் மாவட்ட ரீதியாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ள நிலையில் இன்று பிரதேச செயலக ரீதியாக அவர்களுடைய பணியை ஆரம்பித்துள்ளார்கள் எனவும், மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனம் பெண்களை கௌரவிக்கின்ற நிகழ்வினை பிரதேச செயலக ரீதியாக அங்குரார்ப்பணம் செய்கின்ற நிகழ்வாக இந் நிகழ்வு பார்க்கப்படுகின்றது எனவும். தெரிவித்தார். மேலும் பிள்ளைகளுடைய உதை பந்தாட்ட அணியில் பயிற்றுவிப்பாளராக பொலீஸ் உத்தியோகத்தரும் பயிற்சி வழங்கியிருப்பது பாராட்ட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது. மேலும், விளையாட்டில் மட்டுமின்றி கல்வி மட்டத்திலும் இம் மாணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற வேண்டியவர்களாக இருப்பதாகவும் ஏனென்றால் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் என்பதே பெற்றோர்களின் பெரும் அவாவாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், விளையாட்டுடன் கூடிய வெற்றியை குடும்பத்துடன் கொண்டாட கல்வியிலும் சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் அதற்கு அவர்களுக்கு இறைவன் துணை புரிய வேண்டும் எனவும், மேலும் தேசிய ரீதியாக பல்வேறுபட்ட போட்டிகளில் எவ்வித வசதிகளும் இன்றி பங்கு பற்றி வெற்றியை பெற்றுக் கொள்கின்றார்கள் எனத் தெரிவித்தார். தேசிய ரீதியான போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெறுவதென்பது பாடசாலைக்கு மட்டுமல்ல மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது எனவும், பிள்ளைகள் எதிர்கால வளர்ச்சியில் அக்கறை காட்டுவதோடு இத்தகைய உதைப்பந்தாட்ட போட்டிகளில் செயற்பட்டு தொடர்ச்சியாக முன்னேற்றம் காண்பதன் ஊடாக மாவட்ட , மாகாண, தேசிய ரீதியில் அணிகளில் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பல்வேறுபட்ட வீராங்கனைகள் இம் மண்ணிலே உருவாகி தேசிய ரீதியாகவும் விளையாட்டுக்களில் பங்குபற்றும் வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய உதைப்பந்தாட்ட அணிகளில் அங்கத்தவர்களாக பங்குபெறக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும், 15 வயதுக்குட்பட்ட மாணவிகளின் அணி அடைந்த வெற்றிக்கு யூனியன் கல்லூரி அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், யூனியன் கல்லூரி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் யாழ்ப்பாண மாவட்டம் பெருமைப்படுகின்ற நிகழ்வாக இந் நிகழ்வு அமைந்திருக்கின்றது எனவும் சாதனைப் பயணங்கள் மென்மேலும் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களின் இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் வீராங்கனைகளுக்கு பொன்னாடை மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் சம நேரத்தில் அவர்களுடைய தாய்மாரும் வுருந்தினர்களால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் யாழ் மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளன அங்கத்தவர்கள், பாடசாலை பிரதி உப அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 700354582_.jpg 3 4 5 6 7 8 9 10 13 14 15 111
 
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15.05.2026) மு.ப 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இக் கூட்டமானது இரண்டாவது கூட்டம் எனவும், மத்திய மற்றும் மாகாணங்கள் இணைந்த வகையில் மாதாந்தம் இக் கூட்டத்தினை நடாத்த வேண்டும் எனவும், க்ளீன் ஸ்ரீலங்கா, வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிற்றல் மயமாக்கல் போன்ற அரசாங்க கொள்கைகளை முன்னெடுக்கும் போது சரியான பயனுறுதிவாய்ந்த திட்டங்களைஇனங்காண வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், இக் கூட்டம் ஆரோக்கியமாக நடைபெற ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை வரவேற்றதுடன், வடமாகாண அமைச்சின் செயலாளர்கள், கெளரவ உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்டவர்களை வரவேற்று, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினுடைய 2025.03.02ம் திகதிய சுற்றறிக்கைக்கு அமைவாக, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடுவதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராயும் இரண்டாவது கூட்டமாக இது நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் திட்டங்கள் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும், அக் கூட்டங்களில் விடயங்களை முழுமையாக ஆராய முடியாத காரணத்தினால் தனியான ஒரு குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஏனைய திட்டங்கள் தொடர்பாக வீதி, கல்வி சுற்றுலா, சுகாதாரம் தொடர்பாக
ஒவ்வொரு துறை சார்ந்த கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், அரசாங்கத்தினுடைய நிதியை சரியான முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்தி திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும், மாவட்ட மக்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் மாவட்ட அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதற்காக இத்தகைய திட்டங்கள் தொடர்பாக ஆராய உள்ளதாகவும், அதற்கு ஒவ்வொருவரும் திட்டங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குவதனூடாக மாவட்ட அபிவிருத்திக்காக ஒன்றிணைந்த வகையில் முன்னோக்கிச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார். இக் கூட்டத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் அத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களும் அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டதுடன், நெடுந்தீவு மக்களுக்கான கடற்போக்குவரத்து, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அபிவிருத்தி, விவசாயம், பனை அபிவிருத்தி சபை, பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மலசலகூடத்தினை இயங்கவைப்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், மாவட்ட மட்டத்தில் சகல நிதி மூலங்களையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் அவர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2027 - 2028 ஆண்டுக்களில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் முன்வைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாகாண அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8
இக் கலந்துரையாடல் இன்றைய தினம் (14.05.2026) வியாழக்கிழமை பி.ப 01.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 2021 ஆம் ஆண்டு 11 தீவகப் பாடசாலைகள் உட்பட 28 பாடசாலைகளில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ( RO Plant) நிறுவப்பட்டுள்ள நிலையில், அதில் 12 இயந்திரங்கள் இயங்காத நிலையில் இருப்பதாகவும், குறிப்பாக தீவுப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் இயங்காத நிலை அதிகமாகவுள்ளதாகவும், தமது கவனத்திற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் கொண்டுவரப்பட்டதற்கு அமைய, இதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இக் கலந்துரையாடலில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், சில பாடசாலைகளில் இயங்காத நிலையிலுள்ளதற்கான காரணத்தினை தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு அமைய ஒவ்வொரு பாடசாலை அதிபர்களும் தற்போதைய நிலமைகளை தெளிவுபடுத்தினார்கள். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் அவர்கள், தாளையடியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரானது பாடசாலைக்கு அருகாமையில் குழாய் காணப்படுமிடத்து அப் பாடசாலையிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாதமொன்றுக்கு 20 நாட்களுக்கு ஒருவருக்கு 20 லீற்றர் வீதம் இலவசமாக குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்ததுடன், பாடசாலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 28 நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை பராமரிப்பதற்காக இவ்வாண்டு ரூபா 7.50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ். சிவகுமாரன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்டப் பொறியியலாளர், வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஒப்பந்தகாரர் கலந்து கொண்டனர்.
 
 
1.1 2.1 2 4 5