கொழும்பிற்கு இடமாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேட் கொமாண்டர் ருவான் குணரத்ன அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(04.05.2026) காலை 11.00மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்தரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு. பா.ஜெயகரன், மாவட்ட பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ.தர்ஷினி ஆகியோர் உடனிருந்தார்கள்.
 
 
1 2 4
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முதலாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.04.2026) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்கள் தொடர்பில் காலாண்டுக்கு ஒரு முறை கலந்துரையாடுவது வழமையானதாகும் எனவும், அந்த வகையில் நடப்பாண்டில் முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் மக்களை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட வாழ்வாதார, உட்கட்டுமான செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட அரசாங்க அதிபர், அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது பிரதேச செயலாளர்களுடன் சரியான தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் சரியான ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை பெற்று செயற்படுவதன் மூலம் மேன்மேலும் வினைத்திறனாக செயற்பட முடியும் எனவும், இவ் வருடம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களிற்காக 760 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், இதுவரை 212 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் செயற்பட்டுவரும்அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது நிறுவனங்களின் செயற்பாடுகள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதற்கான உரிய அறிவுறுத்தல்களையும் அரசாங்க அதிபர் வழங்கினார். மேலும் இக் கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி அரச சார்பற்ற, நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், பிரதேச செயலாளர்கள், திட்டங்களுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
அரச சேவையிலிருந்து இளைப்பாறும் விவசாயப் பணிப்பாளர் திருமதி. பாலகெளரி பவலீஸ்வரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க . சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.04.2026) பி.ப 2.30 மணிக்கு யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது திருமதி. பாலகெளரி பவலீஸ்வரன் அவர்கள், 1996ஆம் ஆண்டு இலங்கை விவசாய சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தராக இணைந்ததுடன் அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளராக 2024.11.20 லிருந்து 2025.08.31 வரை மாவட்ட பதில் விவசாய பணிப்பாளராகவும், 2025.08.01 லிருந்து 2026.04.28 ஆம் திகதிவரை மாவட்ட விவசாய பணிப்பாளராகவும் கடமையாற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டதுடன், தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது.
இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டச் செயலக விவசாயத்துறை செயற்பாடுகளை அடையாளம் காண மிகவும் சிறப்பாக செயற்பட்டவர் என்பதுடன், சகல உத்தியோகத்தர்களுடன் சகஜமாகவும் அமைதியாகவும் பழகும் உத்தியோகத்தராகவும் விளங்கினார். மேலும், முதலில் மாவட்ட செயலத்தில் பதில்கடமை விவசாய பணிப்பாளராகவும் பின்னர் நிரந்தர விவசாய பணிப்பாளராகவும் பணியாற்றியதுடன் அமைதியாகவும் துறை சார்ந்த விடயங்களை துணிச்சலாக கையாளும் திறமை கொண்டவர் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாய குழு கூட்டத்திலே விவசாயிகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு துல்லியமாக விடை கூறக்கூடியவராகவும் அதற்கான அறிவு கொண்டவராகவும் செயற்பட்டதுடன், பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான செயற்பாடுகளை ஒத்துழைப்பு வழங்கியதுடன் அவருடைய விவசாயத் துறை உத்தியோகத்தர்களும் பக்க துணையாக இருந்து ஒருங்கிணைந்து செயற்பட்டதாகவும், விவசாயம் சார்ந்த விடயங்களை வெளியிடுவதற்கு சிறப்பாக கடமையாற்றியதாகவும் அவருடைய ஓய்வு நிலை சிறப்பாக அமைய, வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. எம். வித்தியானந்தநேசன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சமுர்த்தி பனிப்பாளர் திரு. போ ஸ்ரீ வர்ணன், சமுர்த்தி கணக்காளர் திரு. இ. முருகதாஸ், பிரதி பதிவாளர் நாயகம் திரு. பிரபாகர், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் திருமதி.பாலகெளரி பவலீஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதியாக விவசாய பணிப்பாளர் திருமதி.பாலகெளரி பவலீஸ்வரன் தமது ஏற்புரையில், இன்றைய பிரிவு உபசார விழாவிற்கு கௌரவித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் முதலில் கிளிநொச்சியில் கடுமையான போர்ச்சூழலில் மூன்று வருடங்கள் கடமையாற்றியதாகவும், பின்னர் திருநெல்வேலி விவசாய திணைக்களத்தில் பயிர் காப்பாளராக மாகாண மட்டத்திலே தனித்து நின்று முழு விவசாயிகளின் பிரச்சனைகளை கையாண்ட ஒருவராகவும் தான் செயற்பட்டதாகவும், மாவட்டச் செயலகத்திலே 17 மாதங்கள் மாவட்ட விவசாய பணிப்பாளராகவும் கடமையாக்கியதாகவும் தெரிவித்தார். மேலும் சகல வழிகளிலும் மாவட்ட பணிப்பாளராக கடமையாற்ற ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்க அதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் விவசாயத்துறை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அரசாங்க அதிபரின் சிறந்த தலைமையின் கீழ் மக்களுக்கு வினைத்திறனாக சேவையை ஆற்றி வருவதாகவும், அச் சேவை மென் மேலும் மக்களுக்கு சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், இன்றைய நிகழ்விற்கு வாழ்த்துரைகள் வழங்கிய உத்தியோகத்தர்களுக்கும் நிகழ்வில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினையும் விவசாய பணிப்பாளர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 78 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 24 25 26 27 28 29 30 31 32 33 34
சிறிய மற்றும் நடுத்தர, பாரியளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் SLCBC 2nd Consecutive Regional Excellence Awards விருதுகளுக்காக யாழ் மாவட்டத்திலிருந்து 209 விண்ணப்பப் படிவங்கள் அதிகாரப்பூர்வமாக இன்றைய தினம் (29.04.2026) கையளிக்கப்பட்டன. பிரதேச செயலகங்களிலிருந்து SLCBC 2nd Consecutive Regional Excellence Awards இற்காக விண்ணப்பித்த தொழில்முயற்சியாளர்களின் 155 விண்ணப்பப் படிவங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் 209 விண்ணப்ப படிவங்கள் கையளிக்கப்பட்டன. யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் ரீதியாக கிடைக்கப்பெற்ற விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் Sri Lanka Canada Businesses Council நிர்வாகப் பணிப்பாளர் திரு. இளங்கோ இரத்னசபாபதி அவர்களிடம் கையளித்தார். இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு கை.சிவகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ.சுரேந்திரநாதன், Sri Lanka - Canada Businesses council உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவின் தையிட்டி தெற்கு பகுதியில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் 17 காணி உரிமையாளர்கள் தமது காணி உரிமையினை கோரியிருந்தனர். இது தொடர்பில் புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் மூன்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருத்தன. குறித்த கலந்துரையாடல்களின் பிரகாரம் காணி உரிமையாளர்களின் உறுதிகள் ஆவணங்கள் அங்கு சமர்ப்பிக்கப்பட்டு அவை செவ்வை பார்க்கப்பட்ட பின்னர் புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் காணியினை அளவீடு செய்வதற்காக இன்றைய தினம்(28.04.2026) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, கொழும்பிலிருந்து வருகை தந்த புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், நிளஅவை திணைக்கள அதிகாரிகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர், நில அளவையாளர்கள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திரு.பா.ஜெயகரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சிவகங்கா, மாவட்ட சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் திரு என்.தர்மபாலா, நில அளவையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் காணிகளை அளக்கச் சென்றிருந்தனர்.
17 காணி உரிமையாளர்கள் சார்பில் 42 பேர் காணியை அளவீடு செய்வதற்காக பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தனர். காணி உரிமையாளர்கள் கொழும்பிலிருந்து வருகை தந்த சிங்கள நில அளவையாளர்கள் தமது காணிகளை அளக்கக்கூடாது என்ற கோரிக்கை முன்வைத்திருந்தனர். பின்னர் காணிகள் விடுவிக்கப்படுதல் தொடர்பாக உறுதிப்படுத்தல் கடிதங்களில் கையொப்பமிடுமாறு கோரிக்கையினை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை குறிப்பிட்டு தயாரிக்கப்பட்ட கடிதத்தில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பிரதேச செயலாளரின் பதவி முத்திரையுடன் கையொப்பமிடப்பட்ட கடிதத்தை வழங்கிய போது தெல்லிப்பளை பிரதேச செயலக கடிதத் தலைப்பிலே இக் கடிதம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உட்பட வெவ்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெல்லிப்பளை பிரதேச செயலக கடிதத் தலைப்பிலே கையொப்பமிடுவதென்பது பொருத்தமற்றதென காணி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு கடிதத் தலைப்பில் கையொப்பமிட்டு தராத பட்சத்தில் காணிகளை அளவீடு செய்ய தம்மால் ஒத்துழைக்க முடியாது என அவர்கள் தெரிவித்ததை அடுத்து காணி அளவீட்டு பணியானது மேற்கொள்ளப்படவில்லை. இன்றைய தினம் காலை 8.00மணிக்கு குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த உத்தியோகத்தர்கள் பி.ப 3.00மணிவரை அங்கு தரித்திருந்து குறித்த காணிகளை அளவீடு செய்யமுடியாததால் அங்கிருந்து திரும்பினர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16