யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 04.04.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (20.04.2026) காலை 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் 51 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் M.R. ராசிக், பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த பிரிகேடியர் ரூவான் பெர்ணாண்டோ, லெப்டினன்ட் கேணல் சமிந்த கருணாதிலக ஆகியோர் உடனிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கணக்காளராக திரு. வல்லவராஜன் ரதீஸ் இன்றைய தினம் (20.04.2026) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக கணக்காளர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். கணக்காளராக கடமையேற்ற திரு. வ. ரதீஸ் அவர்கள், முன்னர் யாழ்ப்பாணம் தபால் திணைக்களத்தின் - பிராந்திய கணக்கு அலுவலகத்தின் கணக்காளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணம் தபால் திணைக்களத்திற்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ். மாவட்ட செயலக கணக்காளர் திரு. அழகராஜா நிர்மல் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.04.2026) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. திரு. அ. நிர்மல் அவர்கள், 2014 ஆம் ஆண்டு கணக்காளர் சேவையில் இணைந்துடன் அதன் தொடர்ச்சியாக 04.09.2019 ஆம் திகதி தொடக்கம் 17.04.2026 வரை யாழ். மாவட்டச் செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டதுடன், தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது. இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டச் செயலக நிதி செயற்பாடுகளில் மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெற்றவராக வினைத்திறனாக செயற்பட்டவர் என்பதுடன், சகல உத்தியோகத்தர்களுடன் சகஜமாக பழகும் உத்தியோகத்தராகவும் கணக்காளர் திரு. நிர்மல் அவர்கள் விளங்கினார்.
மேலும், இதற்கு மேலதிகமாக மாவட்ட செயலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் குறிப்பாக நலன்புரி சங்கத்தின் தலைவராக இருந்து சிறப்பாக செயற்பட்டவர் எனவும் குறிப்பிட்டார். மேலும், மாவட்டச் செயலகத்தின் அவசர அவசிய செயற்பாடுகளுக்கான நிதி ஏற்பாடுகள் விடயத்தில் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிவந்தவர் என்பதுடன், நிதியாண்டிற்குரிய கொடுப்பனவுகளை சரியான உறுதிப்பாடுகளுடன் காலதாமதமின்றி வழங்கி மாவட்டச் செயலகத்தின் விரைவான செயற்பாடுகளுக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கியவர் எனத் தெரிவித்தார். மேலும், வெலிஓயா, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியதுடன், மாவட்டச் செயலகத்தில் 07 ஆண்டுகள் சிறப்பாக கடமையாற்றியவர் எனவும், தாம் கடமையாற்றிய திணைக்களங்களில் நட்பு ரீதியாக எல்லோரோடும் பழகி தமது செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்தார் என பாராட்டு வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், விரைவில் கணக்காளர் சேவையின் தரம் ஒன்றிற்கு பதவியுயர்வு பெறவுள்ளதாகவும் இவரின் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. எம். வித்தியானந்தநேசன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சமுர்த்தி கணக்காளர் திரு. இ. முருகதாஸ், பிரதி பதிவாளர் நாயகம் திரு. பிரபாகர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ். சிவகுமாரன், மொழிபெயர்ப்பாளர் திருமதி பி. நித்தியகலா, நிர்வாக உத்தியோகத்தர் திரு. கி. பொ. தனபால உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. கணக்காளர் திரு. அ. நிர்மல் அவர்களின் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய காலப்பகுதிக்கான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் கணக்காளர் திரு. அ. நிர்மல் அவர்கள் பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதியாக கணக்காளர் தமது ஏற்புரையில், மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றுவது ஒரு பொன்னான அரிய வாய்ப்பு எனவும், மாவட்டச் செயலகம் தமது உயர்விற்கும், அனுபவத்திற்கும் பல நல்ல தொடர்புகளுக்கும் வழிவகுத்தது எனவும், எமது அரசாங்கம் அதிபர் அவர்கள் உத்தியோகத்தர்களை சிறப்பாக ஒன்றிணைத்து நல்ல பொறிமுறையினை உருவாக்கி செயற்படுகின்றார் எனவும், நிகழ்வுகளை நடாத்துவதில் அரசாங்க அதிபர் தனிக் கலையினை பெற்றுள்ளார் எனவும் குறிப்பிட்டதுடன், அண்மையில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் பங்குபற்றிய "முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு" அரசாங்க அதிபரால் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டதாகவும் - தாம் அரசாங்க அதிபருடன் பணியாற்றியதன் மூலம் சிறப்பான வழிகாட்டுதல்களையும், அனுபவங்களையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் நடவடிக்கைகள், வெள்ள, அனர்த்த நிலைமைகள்நலன்புரிக் கழகத்தின் செயற்பாடுகள் போன்றவற்றில் தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்கு பக்கபலமாகவிருந்து வழிகாட்டிய அரசாங்க அதிபர் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், இன்றைய நிகழ்விற்கு வாழ்த்துரைகள் வழங்கிய உத்தியோகத்தர்களுக்கும் நிகழ்வில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினையும் கணக்காளர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் 51வது காலால் படை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் 18.04.2026ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . இந்த விழாவில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தேசிய கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பாரம்பரிய மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. இதன் போது பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வட மாகாண கடற்படைத் தளபதி அட்மிரல் புடிக்ஹ லியனகமகேஅவர்கள், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்கள், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் (17.04.2026) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15 ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,தெல்லிப்பளை பிரதேச செயலாளர், சிரேஸ்டநில அளவைத் திணைக்கள அத்தியட்சகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,காணி நிர்ணயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாக இருந்தார்கள்.






