சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு இன்றைய தினம்(09.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் காலை 11.00மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று தற்போது சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கிராம ரீதியான செயற்பாடுகளில் நீண்ட கால அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள். இவர்கள் காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் தங்களது செயற்பாடுகளை கடந்த காலங்களில் சிறப்பாக முன்னெடுத்திருந்தார்கள். கிராம அலுவலர் பிரிவின் செயற்பாடுகளில் கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் கூட மக்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதில் இந்த மூன்று உத்தியோகத்தர்களும் இணைந்த வகையில் செயற்பட்டிருந்தார்கள்.
தற்போதைய அரசாங்கத்தினுடைய பிரதான கொள்கைகளாக கிளீன் ஸ்ரீலங்கா, டிஜிட்டல் மயமாக்கல், சமூக சக்தி ஆகிய செயற்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களாக அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் காணப்படுகிறோம். இந்தத் திட்டங்களை சமூக சக்தி செயற்பாட்டை பிரதேச மட்டத்தில் செயற்படுத்துவதில் இந்த சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றார்கள். குழுவின் செயலாளர்களாக இருந்து அந்தக் குழுவை கொண்டு நடாத்துகின்ற பொறுப்பு அவர்களைச் சார்ந்ததாக இருக்கிறது. கிராமத்தின் உடைய வறுமை நீங்கும் போது பிரதேசத்தினுடைய வறுமை நீங்கும். பிரதேசத்தினுடைய வறுமை நீங்கும் போது மாவட்டத்தினுடைய வறுமை நீங்கும். மாவட்டத்தினுடைய வறுமை நீங்கும் போது நாட்டினுடைய வறுமை நீங்கும். அந்த வகையில் கிராம மட்டத்திலேயே இந்த வறுமை நிலைகளை நீக்கும் தேவைப்பாடு இருக்கின்றது. ஆகவே சமூக சக்தி செயற்பாட்டை கிராமங்களில் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாட்டினை மேற்கொள்கின்றபோது உங்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் காணப்படுமாக இருந்தால் அந்த விடயங்களை தெரிவிப்பதன் மூலம் தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதோடு
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினுடைய வழிகாட்டல் ஆலோசனைகளுக்கு அமைய நாங்கள் இந்த செயற்பாடுகளை மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடும் கடப்பாடும் எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இந்த பல்பரிமாண வறுமை ஒழிப்பு வேலைத் திட்டத்தை பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்ற போது அமைச்சினுடைய சுற்று நிரூபனத்திற்கு அமைய சரியான செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் வறுமையினை நீக்க முடியும். அந்த வகையில் எமது மாவட்டத்திற்கு 651.96 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. 357.12 மில்லியன் ரூபாய் கிராம அலுவலர் பிரிவு எண்ணிக்கை அடிப்படையில் பங்கீடு செய்து வழங்கப்படவுள்ளது. மிகுதியாக உள்ள நிதி தங்களது பல் பரிமாண வறுமை ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக உங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் திட்டத்தின் அடிப்படையில் பங்கீடு செய்து வழங்கப்படவிருக்கிறது. உங்களது கிராமம் சார்ந்த விடயங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். வறுமைக்குரிய காரணங்களை அடையாளப்படுத்தி பிரதேச செயலாளர்கள் ஊடாக பொருத்தமான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த கோரிக்கைகளை அமைச்சுக்கு முன் வைக்கமுடியும். ஆகவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு நீங்கள் மிகச் சரியான முறையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்துகின்ற புதிய திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு குறித்த தெளிவூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது கலந்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்குரிய தெளிவூட்டல்களை இக்கூட்டத்தில் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ.சுரேந்திரநாதன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் , மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.சிவகுமாரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் திரு.எஸ்.கபிலன், நல்லூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விடய உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(09.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளை சிறப்பாகவும் ஒழுங்காகவும் முன்னெடுக்கும் நோக்கில் குறித்த முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 2.30 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அரச அதிபர் வெற்றிக் கிண்ண போட்டித் தொடர் வெற்றி பெறுவது என்பதுக்கு அப்பால் உத்தியோகத்தர்களின் உடல் ஆரோக்கியம், அவர்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இதன் ஊடாக உத்தியோகத்தர்களின விளையாட்டு திறன்களை மேம்படுத்தி, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதும் இப் போட்டியின் நோக்கமாகும். எனவே அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டு, அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளை குறிப்பிட்ட காலத்தினுள் சிறப்பாகவும் வெற்றிகரமாக நடாத்த அணைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அணிகள் கலந்துகொள்கின்றன. இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட புள்ளிவிபரவியலாளரும் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்க தலைவர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளின் திட்டமிடல் மற்றும் நடைமுறை அம்சங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து முடிவுகள் எட்டப்பட்டன. குறிப்பாக போட்டிகள் நடைபெறும் இடங்கள், நடைபெறும் போட்டிகளும் அதற்கான பொறுப்பு உத்தியோகத்தர்கள், கால அட்டவணை, பங்கேற்பு அணிகளின் பதிவுகள், நடுவர் குழு நியமனம், மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன. மேலும், போட்டிகள் சீரான முறையில் நடைபெற தேவையான வளங்கள் மற்றும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கிய உணவகம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (09.04.2026) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரோக்கிய உணவக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

வேல்ட் விஷன் லங்கா நிறுவனம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களை மகிழ்வூட்டும் வகையிலான பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இன்றைய தினம் (09.04.2026) சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது. வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் சாவகச்சேரி மற்றும் சங்கானை பிரிவுகளுக்கான முகாமையாளர் திரு. ஆர்.அமிர்தநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. A.U நிஷாந்தன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F.C சத்தியசோதி, சங்கானை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய காலகட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் நிலைப்பாடுகள் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது எனவும், அதாவது இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான பிள்ளைகள் பாடசாலை செல்லாமல், வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி இருந்த நிலை இன்று முற்றிலும் மாற்றமடைந்து இவர்கள் சமூகத்தோடு இணைந்து சமூக மயமாக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து தமது திறமைகளை வெளிக்காட்டும் நிலைமை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
பிரதேச செயலகங்கள், பல்வேறு சமூகமட்ட அமைப்புகள் பல்வேறு பங்களிப்பை இதற்கு வழங்கி வருகின்றன எனவும், இந்த நிகழ்வில் சாவச்சேரி சங்கானை உட்பட மேலும் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து விசேட தேவையுடைய பிள்ளைகள் கலந்து கொண்டிருக்கின்றார்கள் எனவும், தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளிலும் எமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எமது மாவட்ட பிள்ளைகள் பங்குபற்றி வெற்றியடைந்தும் உள்ளனர் எனவும், இவர்கள் இவ்வாறன போட்டிகளில் பங்கு பற்றுவதே முக்கியமாகக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கடந்த வருடம் மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் எமது மாவட்ட சிறார்கள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர் எனவும், இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்துவது என்பது அப் பிள்ளைகளின் முயற்சியாகவே நாம் பார்க்கவேண்டும் எனவும், இவ்வாறான சமூக வலுவூட் டல் நிகழ்ச்சிகளை மேற்கொள்வது என்பது பெருமைக்குரிய விடயம் எனவும், இவ்வாறான வலுவூட்டல் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்திற்கு அரசாங்க அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பிறந்த தினத்தை கொண்டாடிய விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளை உள்ளடக்கிய வகையில் அவர்களை மகிழ்வூட்டும் வகையில் கேக் வெட்டப்பட்டு அவர்களுக்கு ஊட்டிவிடப்பட்டு அவர்களது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, கலந்து கொண்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தாமாக முன்வந்து பல்வேறு கலை நிகழ்வுகளை ஆற்றுகை செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் செயறிட்டங்கள் நடைபெறும் சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளுடன் பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 80 விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விசேட கல்வி அலகு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் இன்றைய தினம் (0704.2026) பி. ப. 02.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி தாரணி கஜரூபன் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தொடக்கவுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரிவுகளையும் உள்ளதாகியதான அங்கத்தவர்களையும் உள்ளதாக்கியதாக பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் இக் கலந்துரையாடல் கூட்டப்படுகிறது. இங்கு முன்வைக்கப்படும் விடயங்களுடன் தொடர்புடைய திணைக்களங்கள் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்படுகிறது. இதன் ஊடாக கடந்த காலங்களில் பல விடையங்களுக்கு தீர்வுகள் எட்டப்பட்டன எனவும், சில பிரச்சினைக்கள் தொடர் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், எங்களது விடயங்களுக்கு அப்பாற்பட்ட கடினமான விடயங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன எனவும், ஒட்டுமொத்ததித்தில் இனங்காணபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு சிறந்த செய்யற்றிட்டமாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், இங்கு பிரச்சினைகளுடன் தொடர்புடைய திணைக்களங்கள் அழைக்கப்படும் போது அதற்கு பதில் வழங்கக்கூடிய வகையில் தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள் தீர்வுகளை அறிந்து வரவேண்டும் எனவும் அல்லது தகவல்கள் உரியவாறு சென்றடைய வேண்டும் எனவும், இவற்றின் ஊடாக தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும் எனவும், இவை தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதன் ஊடாக இக் கலந்துரையாடல்களின் உண்மையான நோக்கம் நிறைவேறும், என தெரிவித்தார்.
இதன்போது கடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. தொடர்ந்து சமூகத்தில் அடையாளம் காணப்பட்டு இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய ஊராட்சி முற்றத்திற்கு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களால் வழங்கப்பட்டன. இக் கூட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி தயாபரி, பிரதேச செயலாளர்கள், தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள், கிறிசலிஸ் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், விடைய உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.






