யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.03.2026) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாணவர் இடைவிலகல், பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகள், சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் உள்ளிட்டவை கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலக ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19.03.2026) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வைத்தியர்களினால் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன், இரத்த அழுத்தம், கருப்பை தொடர்பான பரிசோதனை ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப நிகழ்வில் வைத்திய அதிகாரி திரு.ரி.கஜன் ,உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி தாதியர்களான திருமதி.சு.சுகன்யா, திருமதி ரி.விஜயபாரதி, திருமதி எஸ்.சர்மிளா ஆகியோரும் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையிலான இன்று(15.03.2026) மாவட்ட செயலகத்தில் இரவு 8.00மணிக்கு நடைபெற்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறை(QR Code) தீவகப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகள், நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதனைவிட டிஜிட்டல் குறியீட்டு முறை(QR Code) அறிமுகத்தினால் நாளை தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுடன், எரிபொருளுக்காக நீண்ட வரிசை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலாளர்கள் மட்டத்தில் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. G.H மாறப்பண, பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் திரு. எஸ்.சிவகரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. பொ. கி. தனபாலா, பிரதேச செயலாளர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 4 5 6 7 8 9
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் "சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்களை" அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் இன்றைய தினம் (16.03.2026) காலை 10.00 மணிக்கு களுத்துறை பிரதேச செயலக பிரிவின் 'சிவ்தேவிகம' கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, தொடர்ந்து சமநேரத்தில் நாடளாவிய ரீதியாக ஆரம்பமாகியது. அந்தவகையில் யாழ் மாவட்டத்திற்கான சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலர் பிரிவின் கரவெட்டி மேற்கு கிராம சேவகர் பிரிவின், இராஜ கிராமத்தின் கரவைச்சுடர் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டு குறித்த மாதிரிக் கிராமப் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆசியுரையினை செல்லிசீமா முருகன் ஆலயக் குருக்கள் வணக்கத்திற்குரிய கணேஸ்வர குருக்கள் நிகழ்த்தினார். வரவேற்பு நடனத்தினைத் தொடர்ந்து, வரவேற்புரையினை கரவெட்டி பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள் நிகழ்த்தினார். சமூக உற்பத்தித்திறன் திட்டம் பற்றிய தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் தொனிப்பொருளிலான காணொளி, Clean Sri Lanka செயலகத்தின் விளம்பர காணொளி ஆகியன காண்பிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாண மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் சமூக உற்பத்தித்திறன் திட்டம் மற்றும் அதன் நோக்கங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம செயற்திட்டத்தை செயற்படுத்தும் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு தூண்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி அதனை ஒரு பொறிமுறையின் கீழ் கண்காணிப்பதனூடாக இக்கிராமத்தை வளர்த்து பலப்படுத்த வேண்டும் என்பது தேசிய உற்பத்தி திறன் செயலகம் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினது நோக்கமாக காணப்படுவதாகவும், இந்த நோக்கத்தை அடைவதன் ஊடாக எதிர்காலத்தில் ஒரு சிறந்த கிராமமாகவும் மாதிரி கிராமமாகவும் வளம்மிக்க கிராமமாகவும் மாற்றப்பட வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பு என்றும் இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் வெற்றி தங்கியிருப்பதாகவும் இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் இந்த ஆறு தூண்கள் தொடர்பில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் வீட்டு முகாமை, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற ஆறு விடயங்களையும் உள்வாங்கி செயற்பாடுகளை ஒன்றிணைக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், இவ் உற்பத்தி கிராமம் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினுடைய செயற்பாடு அல்லது கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினுடைய செயற்பாடுகள் மட்டுமல்லாமல் நாம் செயற்படுத்துகின்ற அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒருமைப்படுத்துகின்ற போது குழுவாக செயற்பட்டு அபிவிருத்தி நோக்கியதான அனைத்து நிதிகளையும் ஒருங்கிணைத்து சரியான முறையில் சிறந்த ஒரு கிராமமாக மாற்றுவதற்கான அடிப்படைகளை நாங்கள் மேற்கொண்டு வந்துள்ளதாகவும், இந்த திட்டத்தினுடைய 6 தூண்களுக்கும் செயற்திறன் குறிகாட்டிகளை ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அந்த குறிகாட்டிகளின் அடிப்படையில் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருக்கின்றதா என்பதனை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் கண்காணித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதன் முன்னேற்றங்களை சரியான முறையில் அளவிட வேண்டும் என்பதே இன்றைய இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் இலக்காக உள்ளதாகவும், இவ்வாறு பல்வேறுபட்ட திட்டங்களை ஆரம்பிக்கும் போது அதன் இலக்கினை இலகுவாக அடைய முடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும், உற்பத்தி திறன் செயலகத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனால் இதன் இலக்கு சரியான முறையில் திட்டமிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், செயற்திறன் குறிகாட்டிகளின்படி ஒவ்வொரு இலக்குகள் மற்றும்
குறிகாட்டிகள் இந்த உற்பத்தி திறன் குழு சரியான முறையில் இனம் கண்டு அதற்கேற்ற முறையில் செயற்பட உள்ளதாகவும், இதனை சரியான முறையில் செயற்படுத்தப்படுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்றும், அதேபோன்று உத்தியோகத்தர்கள் இதற்கு சரியான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் தேசத்தை வளர்க்கும் மக்களால் நிரம்பிய கிராமமாக இக் கிராமம் எதிர்காலத்தில் மிளிர வேண்டும் என்றும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நிகழ்வின் கருத்துரைகளை பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ திரு.ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும், Clean Sri Lanka திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பாளருமான திரு எஸ். கபிலன், Clean Sri Lanka திட்ட மாவட்ட பிரதிநிதி திரு. பரமசிவம் கஜமுகன் ஆகியோர் வழங்கினர். மேலும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரால் அடையாளம் காணப்பட்ட சமூக உற்பத்தித்திறன் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டத்தின் அறிக்கை நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளுக்கு கையளிக்கப்பட்டன. கிராமத்தின் உறுப்பினர்களால் கலாசார நிகழ்ச்சிகளும் அளிக்கை செய்யப்பட்டன. கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், உள்ளூர் வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமங்களில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவது முக்கிய குறிக்கோளாகக் கருதப்படுகிறது. இத் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் கெளரவ குமாரசுவாமி சுரேந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. ப. ஜெயகரன், பிரதம உள்ளகக் கணக்காளர் திரு.எஸ் ரமேஷ்குமார், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, Clean Srilanka ஒருங்கிணைப்பாளர் திரு.T.திலீபன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கணக்காளர், புள்ளிவிபர திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கரவெட்டி பிரதேச சபை செயலாளர், கரவெட்டி பிரதேச வைத்திய அதிகாரி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், உற்பத்தித்திறன் பிரிவு உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 19
 
இலங்கை சமூக பாதுகாப்பு சபை முற்றிலும் கணினி மயப்படுத்தப்பட்ட புதிய தகவல் முறைமையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (12.03.2026) அமைச்சர் கெளரவ கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் தவிசாளர் திரு. எம். கே. பி. திசாநாயக்க ஆகியோரது பங்கு பற்றலுடன் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சமூக பாதுகாப்பு சபையின் செயற்பாடுகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டதுடன், பயனாளிகள் நிகழ்நிலை (Online) மூலம் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பும் உறுதிப்பத்திரங்களை உடனடியாக நிகழ்நிலை (Online) மூலம் பொற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. இவ் அறிமுக நிகழ்வை தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சமூக பாதுகாப்பு சபை அலுவலகத்தில் பயனாளி ஒருவர் நிகழ்நிலை (Online) ஊடாக
இணைப்பு செய்யப்பட்டு புதிய MIS முறை மூலம் உறுதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடமாகாண சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு. பா. பிரதீபன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சமநேரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் முகாமைத்துவ முறைமை யாழ் மாவட்டத்திலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
1 2 3