"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்பாடு - போதைப் பொருளுக்கு எதிராக "அகன்று செல்" எனும் தொனிப் பொருளினையும், முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் 1818 இனையும் உள்ளடக்கிய வகையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டும் நிகழ்வு உதவி பொலிஸ் அத்தியகட்சகர் திரு. நளிந்த திலிரூத் தலைமையில் இன்றைய தினம் (04.03.2026)மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்துடன்,விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினையும் பொதுமக்களுக்கு வழங்கிவைத்தார். இவ் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. சுரேக்க பிறேமரட்ண, யாழ்ப்பாண பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. கருணாரட்ன ஆகியோரும் பங்குபற்றி விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டினார்கள்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குப் பின்னரான கலந்துரையாடல்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.03.2026) பி. ப 03.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே ஆகியோர் பங்குபற்றினார்கள்.இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர்த்திருவிழா சிறப்பான முறையிலே பெப்ரவரி 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றது எனவும், கச்சதீவு திருவிழாவிற்கு எதிர்பார்த்த பக்தர்களின் எண்ணிக்கையினைவிட எதிர்பாராத விதமாக அதிகமாக காணப்பட்டதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதாகவும், எனினும் திருவிழாவிற்கு செல்ல வருகை தந்த அனைத்து பக்தர்களையும் அங்கு சென்றடைய கூடிய சந்தர்ப்பம் அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார் மேலும், எமது ஒழுங்கமைப்பிற்கு ஒத்துழைப்பு நல்கிய நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான சகல திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், மேலும் கடற்போக்குவரத்து ஒழுங்குகளை சிறப்பாக ஏற்பாடு செய்த வடபிராந்திய கடற்படை தளபதி அவர்களுக்கும், கடற்படையினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பக்த்தர்களுக்கான கடற்போக்குவரத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பினை வழங்கிய வடமாகாண கடற்படைத் தளபதி அரசாங்க அதிபராலும், மேலதிக அரசாங்க அதிபராலும்கெளரவிக்கப்பட்டார். மேலும், எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற ஒரு பின்தங்கிய தீவில், ஒரு பக்த்தர் ஏனும் தவறாமல் கச்சதீவு அழைத்து வந்து திருவிழாவில் பங்குபெற சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த அரசாங்க அதிபர் மற்றும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ஆகியோரையும் அவர்களின் உத்தியோகத்தர்களையும் பாராட்டுவதாக அருட்தந்தை அவர்களால் குறிப்பிடப்பட்டு, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் சார்பில் அருட்தந்தை அவர்களால் நினைவுச் சின்னம் அரசாங்க அதிபருக்கும், வடமாகாண கடற்படைத் தளபதிக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், , பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை), கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.03.2026) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலில் பொருட்களைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வது தொடர்பாக, குறிப்பாக அரிசி விலையினை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதனை உறுதிப்படுத்துவது தொடர்பாக அரசாங்க அதிபரால் கலந்துரையப்பட்டது. மேலும் வர்த்தக சங்கங்களின் கருத்துக்களை அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டதுடன், பொதுமக்கள் பாதிக்காதவகையில் செயற்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பாவனையாளர்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி திரு. எஸ். நிலாந்தன், புலனாய்வு உத்தியோகத்தர்கள் திரு. வை. பிரமிளன், மாவட்ட நிறுவைகள் அளவைகள் உதவி அத்தியட்சகர் திரு. பா. இராஜேஸ்வரன், யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் திரு. இ. ஜனத்குமார், செயலாளர் திரு. சிவகுமாரன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை உடல் ரீதியான தண்டனையிலிருந்து தடுப்பது மற்றும் அவர்களிடத்து நேர்மறையான ஒழுக்க அணுகுமுறைகளை ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய(04.03.2026) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிபர்களையும் ஒருங்கிணைக்கின்ற சந்தர்ப்பம் இச் செயலமர்வின் மூலம் கிடைத்துள்ளதுடன், பாடசாலை காலங்களை நினைவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமாக அமைந்திருப்பதனால் அனைவரும் பாடசாலை காலங்களில் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்த நினைவுகளை ஞாபகப்படுத்துவதாகவும் தெரிவித்தார். பாடசாலையில் அதிபரின் பங்கு முதன்மையானது முக்கியத்துவமானதாக காணப்படுவதாகவும், சமூகத்தின் முழுமையான கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு அதிபரிடமே உள்ளதாகவும், ஒவ்வொரு பிள்ளையின் கல்வி மேம்பாட்டினை ஏற்படுத்தும் பொறுப்பு பாடசாலையை வழிப்படுத்தும் தலைமை பொறுப்பும் அதிபரிடமே காணப்படுவதாகவும், பாடசாலை மாணவர்களை மட்டும் அல்லாமல் அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கட்டுப்பாட்டின் கீழ் வைத்து நடாத்தும் பொறுப்பும் அதிபரிடமே காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் ஒரு சமூக கட்டமைப்பை ஆற்றுப்படுத்தி நல்வழிப்படுத்தும் தலையாய பொறுப்பு அதிபரிடமே காணப்படுவதாகவும், குறிப்பாக பாடசாலை கல்வியானது அந்த காலத்தில் இருந்த நிலையும், இன்று இருக்கின்ற நிலையும் பாடசாலை உட்புற சூழல் நிலையும், சற்று வேறுபட்டதாக காணப்படுவதனை பல இடங்களில் அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும், பெற்றோரின் பங்களிப்பு என்பது பாடசாலை நிர்வாகத்துக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிள்ளைகளின் வளர்ச்சி மேம்பாடு அல்லது அவர்களின் குறைபாடு தொடர்பாக பெற்றோரை அழைத்து அது தொடர்பாக தெளிவுபடுத்துவது பெரும் சவாலாக உள்ளதாகவும், பாடசாலைப் பிள்ளைகள் சமூக பொருளாதார - பின்புல கட்டமைப்புகளோடு வருகின்ற பிள்ளைகளை ஆற்றுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு அதிபர்களிடத்தே காணப்படுவதாகவும், அன்று ஆசிரியர்களால் மாணவர்களுக்கு உபயோகித்த தண்டனைகளை இன்று பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், அவ்வாறான நிலையில் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக காணப்படுவதாகவும், அரசாங்கத்தாலும் சட்டத்தாலும் கடமைக் கூறுகள் பணிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு விடயங்களை உள்வாங்கி ஆசிரியர்கள், பிள்ளைகளை ஆற்றுப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான அதிபராக வளர்வது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்ததுடன், அது தொடர்பாக கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பாடசாலை நிர்வாக கட்டமைப்பை அரவணைத்து மனிதநேய, பிள்ளைநேய ஆசிரியர் நேய எல்லோரும் நேசிக்க தக்க வகையிலே பாடசாலை கட்டமைப்பை எவ்வாறு கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பாக செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கல்வி மேம்பாட்டு நிலைமைக்கு காரணகர்த்தாவாகவும் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் முன் நின்று செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்கும் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வித்திணைக்களம் ஆகியன இணைந்து அதிபர்களுக்கான இச் செயலமர்வு இதனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறுவர்களின் உரிமைகள் அவர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம், உடல் ரீதியான தண்டனையின் உடல், மன மற்றும் சமூக விளைவுகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் அதற்குப் பதிலாக நேர்மறை ஒழுக்க முறைமைகள் தொடர்பிலும், பிள்ளைகளை ஆற்றுப்படுத்துதல் தொடர்பிலும் விளக்கமாளிக்கப்பட்டதுடன், சிறுவர்களின் உறவை வலுப்படுத்தும் தொடர்பு திறன்கள், மனஅழுத்தக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் உடல் ரீதியான தண்டனை தொடர்பான தண்டனைச் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான சட்டக் கண்ணோட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன. இச் செயலமர்வில் சட்டத்தரணி திரு. ஜெ.தற்பரன், மாவட்ட உளநல வைத்திய நிபுணர் கனகரத்தினம் சிவதாஷ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், கல்வித்திணைக்கள அதிகாரிகள், வலையக் கல்விப் பணிப்பாளர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமைப்பீடத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய சுற்றாடல் சட்ட திருத்தம் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தல் மற்றும் கருத்தாய்வு சுற்றாடல் அமைச்சர் கெளரவ கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி தலைமையில், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (01.03.2026) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்தாய்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், சுற்றாடல் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி ரவீந்திர காரியவசம் ஆகியோர் பங்குபற்றினார்கள். இவ் கலந்தாய்வில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 1980 ஆம் ஆண்டின் 47 ஆம்இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தினுடைய திருத்தம் தொடர்பான இன்றைய கலந்துரையாடலுக்கு வருகை தந்துள்ள கெளரவ சுற்றாடல் அமைச்சர், கெளரவ கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றுக்கொண்டு, தேசிய ரீதியான சுற்றாடல் பாதுகாப்பு திருத்தமானது முக்கியமான ஒன்றாக காணப்படுவதாகவும், நாட்டினுடைய அல்லது மாவட்டத்தினுடைய அபிவிருத்தியில் சுற்றாடல் சார்ந்த விடயங்களை ஒருங்கிணைந்த வகையிலே அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் முக்கியமானதாக முதன்மையானதாக காணப்படுகின்றதாகவும், எவ்வாறான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று நோக்கும்போது சூழலியல் சார்ந்த செயற்பாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தேசிய சுற்றாடல் சட்டம் திருத்தம் தொடர்பான முன்மொழிகள் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட வேண்டி இருப்பதாகவும் அதில் ஓர் அங்கமாக சட்டமூலத்திலே காணப்படும் 1980 ஆண்டு 41 ஆம் இலக்க சுற்றாடல் செயற்பாடு சட்டமானது மீண்டும் திருத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதிலே திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் முதன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும், கௌரவ அமைச்சர் அவர்கள் சுற்றாடல் திட்டம் தொடர்பாக கருத்துக்களை வழங்குவதற்காக கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாகவும், மாவட்டத்திலே சுற்றாடல் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற போது சுற்றாடல் சார்ந்த விடயங்களை கவனத்தில் எடுத்து மேற்கொள் கொள்ளுகின்ற போது சட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினைக்குள்ள விடயங்களை திருத்துகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதாகவும், ஆகவே சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி சட்டத்தில் அவ்வாறான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்குமாறும் மாகாண மாவட்ட தேசிய ரீதியாக சுற்றாடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது ஒரு தீர்வாக அமையுமெனம் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்தாய்வில் கருத்து தெரிவித்த கெளரவ ஆளுநர் அவர்கள், வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல முதலீட்டாளர்கள் வருகை தருவதாகவும், அவர்களுக்கான முதலீட்டு அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், சுற்றாடல் அமைச்சின் கீழான நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாமதங்கள் மற்றும் தடைகள் இயலுமானவரை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், சுற்றாடல் அமைச்சின் கீழான வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காணிகள் தொடர்பாகவும் கவனம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், எமக்கு அபிவிருத்தி அவசியம் எனவும், அதற்காகச் சுற்றாடல் சார்ந்த அபிவிருத்தி தேவை எனவும், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மர நடுகைத் திட்டங்களை இங்கு சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும், தெரிவித்ததுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் திண்மக் கழிவகற்றல் தொடர்பாகவும் கெளரவ ஆளுநரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இக் கலந்தாய்வில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், எமது மாகாணத்தின் சுற்றாடல் பிரச்சினை முக்கியத்துவமானது எனவும், தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளன எனவும், சட்டவரைவு திருத்தம் தொடர்பான உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், சுற்றாடல் அமைச்சின் கீழான வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் கரையோரம் பேணல் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடத்தில் அதிருப்தி இருப்பதாகவும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இருப்பதாகவும், இத்திணைகள அதிகாரிகளின் ஒத்துழைப்பு உரிய வகையில் இல்லை எனவும் தெரிவித்தார் . இங்குவரும் முதலீட்டாளர்கள் தமக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், ஒரு முதலீட்டாளர்களுக்கான அனுமதிகள் தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும், எந்த பிரதேசத்தில் முதலீடு செய்யவிருக்கிறார்களோ அப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி முதலீட்டாளர்களுக்கான ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு பொறுப்பேற்குமாறும் கேட்டுக் கொண்டார். சுற்றாடல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக படபெந்தி அவர்கள் தமதுரையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்தடவையாக வருகைதந்துள்ளதாகவும், கடற்றொழி்ல் அமைச்சர், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோருடன் சூழல் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்ததாகவும், காணிப் பிரச்சினை உள்ளன எனவும், இன்றைய கூட்டத்தில் உடனடியாக தீர்க்க முடியாது விட்டாலும், அணுகக் கூடியதாகவிருக்கும் எனவும், மாகாணத்தின் போரின் பின்னர் குறித்த இரண்டு திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் எல்லைப்படுத்தலில் காணப்படும் தவறுகள் திணைக்களங்களுக்கிடையில் இணைந்த வகையில் தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் இக்காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் விசேட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது எனவும், இந்த உபகுழு தற்போது மாவட்ட ரீதியாகத் தரவுகளைச் சேகரித்து வருவதுடன், எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், எமது அமைச்சின் கீழான நிறுவனங்களில் நிலவும் ஆளணி வெற்றிடங்கள் காரணமாகவே முதலீட்டாளர்களுக்கான அனுமதிகளை வழங்குவதில் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன எனவும், தற்போது இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக 1,685 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும் அதிகளவில் விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும், எதிர்காலத்தில் அனுமதிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் முற்றாகச் சீராகும் எனவும், கடந்த காலங்களில் எமது அமைச்சின் கீழான நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை என்ற குறைபாட்டை அவதானித்ததாகவும், பிரதேச உத்தியோகத்தர்கள் அமைச்சுடன் இணைந்து கடமையாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வினைத்திறனாக சேவைக்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய சுற்றாடல் சட்டத்திருத்தம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி ரவீந்திர காரியவசம் அவர்களால் முன்வைப்பின் ஊடக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக பழைய பூங்காவில் கெளரவ சுற்றாடல் அமைச்சர் அவர்களினால் மரம் நாட்டப்பட்டது. இவ் கலந்தாய்வில், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், கடற்கரை பாதுகாப்பு முகாமைத்துவ வளங்களின் பொறியியலாளர் , அரச மர கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர், நீர் வளங்கள் சபையினுடைய மாகாண முகாமையாளர், மாவட்ட வன வள ஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய முகாமையாளர், அரச திணைக்களங்களின் சுற்றாடல் சார் அதிகாரிகள், மாகாண மட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.






