வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எந்திரி. எல். குமுடு லால் பொகவற்ர அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (12.02.2026) 12:30 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் அமைப்பதற்கான பொருத்தமான காணியை அடையாளப்படுத்தல் தொடர்பாக அரசாங்க அதிபருடன் விரிவான கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் ஆகியோர் உடனிருந்தார்கள். மேலும் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சின் செயலாளருடன், அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஆகியோர் களவிஜயம் செய்து காணிகளை ஆய்வு செய்தார்கள்.
 
 
1 2 3 4 5 6
சமூக சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி W.G.தர்ஷினி கருணாரத்ன அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (12.02.2026) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பான மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையுரையாற்றுகையில், கொழும்பிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தினை நடாத்தியமைக்கு நன்றி கூறியதுடன், திணைக்களம் சார்ந்து ஆளணி வளப்பற்றாக்குறையினை சுழற்சி முறையில் இடமாற்றங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதான் ஊடாக அனைத்து உத்தியோகத்தர்களும் பயனடைந்து கொள்ள முடியும் எனவும், மேலும் சமூக சேவைகள் பணியானது மிகவும் கடினமான வித்தியாசமான பணியாகும் எனவும் குறிப்பிட்டதுடன், சமூக சேவைகள் திணைக்களம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கூடுதலான கவனம் செலுத்திவருவதனையிட்டு அரசாங்க அதிபர் பராட்டினார். மேலும் திணைக்களங்களுடானான உறவுகளை மேலும் உத்தியோகத்தர்கள் பலப்படுத்திக்கொண்டு தங்களது பணிகளை தொடர வேண்டும் எனவும்,
பொதுமக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்க வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடவடிக்கைகளில் வினைத்திறனாக செயற்பாட்டின் அவசியத்தினை எடுத்துக்கூறியதுடன், அவர்களின் வாழ்வாதார தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுடன், அதுவே முதன்மையான பணியாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். சமூக சேவைகள் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலைகளை மதிப்பீடு செய்து, சமூக சேவைகள் திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலப் பணிகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்தும், எதிர்கால செயற்பாடுகளை திட்டமிடும் நோக்கில் குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன.
சமூக சேவைகள் திணைக்களத்தின்யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. தி.உமாசங்கர் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு. சி.மதீசன், ஆகியோர் தமது மாவட்டங்களுக்கான செயற்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கையினை முன்னளிக்கை செய்தனர். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9
சாவகச்சேரி சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறப்பு விழா சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. எவ். சி. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.02.2026 ) பி.ப 05.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (குறுநிதி) திரு. மகேஷ் பெர்ணாண்டோ அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதுடன் விருந்தினர்களால் ஆரோக்கிய உணவகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான சிப்தொர புலமைப் பரிசில் கொடுப்பனவும், தேசிய வலுவூட்டல் பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான கருத்து பகிர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (10.02.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் காங்கேசன்துறை முதலீட்டு வலயம் தொடர்பான சாத்தியப்பாடுகள் கண்டறிந்த யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் குழுவினர் சார்பில் மருத்துவபீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமார், பேராசிரியர் பி. ஐங்கரன், பேராசிரியர் ரி. முகுந்தன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஈ. வை. ஏ. சார்ள்ஸ், கலாநிதி (திருமதி) சாதனா வைத்தியநாதன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் முதலீட்டு வலயங்களை அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பளை காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பான கலந்துரையாடலாக இது அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள முதலீட்டு வலயங்களின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவினர் அதன் சாதக பாதக தன்மைகளை ஆராய்ந்து அது தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்கி கருத்துக்களை பரிமாறவுள்ள கலந்துரையாடலாக அமைய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் கைத்தொழில் துறை சார்ந்த கோப்பாய் பிரதேசத்தில் காணப்படும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டை பகுதியில் 65 ஏக்கர் காணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 25 ஏக்கர் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ளூர் முதலீடுகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து இயங்கி வருகின்ற போதும் வளப்பற்றாக்குறை காரணமாக முழுமையான வளர்ச்சி பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் முதலீட்டு வலயத்தை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச தர ரீதியாக உற்பத்தி சார்ந்த விடயங்களை இந்த முதலீட்டு வலயத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்குரிய அனுமதிகள் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின் இணைப்புக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதலீட்டு வலயம் மூலம் இளைஞர்கள் யுவதிகளுக்கு எவ்வாறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் அதன் சாதக பாதகத் தன்மைகளை ஆராய்வதன் மூலமாக இத் திட்டங்கள் வெற்றி அளிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலை ஆக்கபூர்வமாக கருத்துக்களை வழங்கி சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் காங்கேசன்துறை அமையவுள்ள முதலீட்டு வலயத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார நன்மைகள், வேலைவாய்ப்புக்களின் சாத்தியப்பாடுகள், கிடைக்கக்கூடிய உள்ளூர் மூலப்பொருட்கள், சவால்கள் போன்ற விடயங்கள் ஆரோக்கியமான முறையில் கருத்துக்கள் பகிரப்பட்டன. இக் கலந்துரையாடலில் வலி வடக்கு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர் ,விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், இலங்கை முதலீட்டுச் சபையின் உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசனம், மின்சார சபை, புகையிரதம், தொலைத்தொடர்பு, இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களத்தின் பிரதிநிதிகள், வணிகர் கழகத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9
நெல்லியடி சமுர்த்தி சமுதாய அடிப்படைவங்கிக் கட்டடம் திறப்பு விழா பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.02.2026 ) பி.ப 03.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினரும், கரவெட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ,சமுர்த்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (குறுநிதி) திரு. மகேஷ் பெர்ணாண்டோ அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதுடன் விருந்தினர்களால் வங்கி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு.F.C. சத்தியசோதி அவர்களும் ,சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14