2026 - T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்று (01.02.2026) மு.ப 03.15 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு எடுத்துவரப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்றலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர சபை முதல்வர் கெளரவ மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் T20 உலகக்கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் போது அதிகாரிகள், விளையாட்டு வீர வீராங்கனைகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிண்ணத்தை பார்வையிட்டனர்.தொடர்ந்து கலாசார நடனமும் நடைபெற்றது. தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக் உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றதற்கமைய இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கிண்ணம் எடுத்துவரப்பட்டுள்ளது. உலகக்கிண்ணத் தொடர் தொடர்பான விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலும் கிரிக்கெட் இரசிகர்கள் இந்த உலகக் கிண்ணத்தை நேரில் கண்டு மகிழ்வதற்காக இக் கிண்ணப் நாட்டின் முக்கிய நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு யாழ்ப்பாண நகரத்தினை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்கான பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கான பங்குதாரர் ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.30) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் தலைமையில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்தாண்டு இறுதியில் நடாத்தப்பட்டது எனவும், அக் கலந்துரையாடலில் தாமும் கலந்து கொண்டதாகவும், இலங்கையில் 10 நகரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் இத் திட்டத்திற்காக யாழ்ப்பாணம்மற்றும் வவுனியா நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும், நகரங்கள் அபிவிருத்தி செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இதன்போது யாழ்ப்பான மாவட்டம் சார்ந்த துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூக மட்ட பிரதிநிதிகள் ஆகியோருக்கு இத் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆலோசனைகளை பெறவேண்டிய தேவைப்பாட்டினை தாம் கூட்டத்தில் தெரிவித்திருந்தாகவும், அதனடிப்படையில் தொடர்புடைய பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்டறியும் நோக்கிலும், இச் செயற்றிட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முன்னுரிமை வழங்கவேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு திறம்பட பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யபட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், இங்கு நிறுவனம் சமூகம் சார்ந்து கருத்துக்கள் பரிமாறுவது அரோக்கியமாக அமையும் எனவும், குறித்த கலந்துரையாடலில் நகரத்தின் வடிக்காலமைப்பு குறித்து தெளிவுபடுத்தியிருந்ததாகவும் தெரிவித்ததுடன், நகர அமைப்பு, போக்குவரத்து நெரிசல், வாகன பாதுகாப்பு உள்ளடங்களாக நகர அமைப்பு சரிவர பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், நாமும் அதனை கண்கூடாகப் பார்க்கிறோம்எனவும், யாழ் நகரம் அழகுடையதாக அரோக்கியமானதாக அமைவதுடன், அதனை தனித்துவ அடையாளமாக மாற்றியமைக்கும் தேவைப்பாடு அனைவருக்கும் இருக்கிறது எனவும், எனவே அது குறித்து ஆலோசனைகளை தெரிவிக்கவேண்டும் எனவும், இங்கு பெறப்பட்ட கருத்துக்கள் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை வடிவமைப்பதற்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து யாழ்ப்பான நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்காக பங்குதாரர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இதன் போது கலந்து கொண்டிருந்தவர்கள் யாழ் நகர அபிவிருத்தி தொடர்பான திட்ட முன்மொழிவுகளுடன் தங்கள் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முன்வைத்தனர். இக் கலந்துரையாடலில் மாநகர சபையின் கெளரவ முதல்வர், நல்லூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியாசலை பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பிரதிநிதிகள் என உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.

40 ஆண்டுகால அரச சேவையிலிருந்து இன்றுடன் (27.01.2026) இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆறுமுகம் சத்தியமூர்த்தி அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. திரு. ஆ. சத்தியமூர்த்தி அவர்கள், 1986 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சேவையில் இணைந்து, மாவட்டச் செயலகத்தில் பல்வேறு காலகட்டங்களில் கடமையாற்றியதுடன், இறுதியாக 02.04.2020 தொடக்கம் இன்றைய தினம் வரை நிர்வாக உத்தியோகத்தராக சிறப்பாக கடமையாற்றி தமது 40 வருட அரச சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டது. இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், முன்கூட்டியே திகதி குறிப்பிடப்பட்டு செய்யப்படும் ஒரே ஒரு தினம் இந்த ஓய்வு தினமாகும் எனவும், மாவட்ட செயலக நிர்வாகம் என்பது பல்வேறு பொறுப்பு மிக்கதும் பல்வேறு இடர்பாடுகளைக் கொண்டதுமாகும் எனவும், இந்த பணியை ஆற்றுவது என்பது பாராட்டுதலுக்கு உரியது எனவும் அந்தவகையில் திரு சத்தியமூர்த்தி நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி இன்றுடன் அரச சேவையில் ஓய்வுபெறுவது குறித்து வாழ்த்துவதாகத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டம் குறித்த அனைத்து விடயங்களையும் அறிந்தவர் என்ற ரீதியிலும் தாபன விதிக்கோவை குறித்த முழுமையான பூரணமான அறிவினை கொண்டவர் என்ற அடிப்படையிலும் மாவட்ட செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக இவர் தெரிவு செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.மேலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கோவையோடு சேவையாற்றுவார்கள் என்று கருதாமல் ஒருவருடைய வாழ்க்கையும் அதில் அடங்கியுள்ளது என்ற அடிப்படையில் அவர்தம் கடமைகளை பொறுப்புடன் மேற்கொண்டதாகவும், அந்த வகையில் அவரின் பணி மென்மேலும் போற்றுதலுக்குரியதாகும் எனவும் தெரிவித்தார். மேலும் யாழ் மாவட்டத்தில் உத்தியோகத்தர்களின் வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைக்கு இவர் பல்வேறு வழிகாட்டுதல்களையும் பயிற்சிகளையும் வழங்கியுள்ளதுடன் ஏனைய வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற வெளி மாவட்ட உத்தியோகத்தர்களும் இவரின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியினை பெற்று சித்தியடைந்தார்கள் என்பது பெருமைக்குரிய விடயம் எனவும், மாவட்ட செயலகத்தில் தாபன விதி கோவை தொடர்பில் ஏதேனும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் நிர்வாக உத்தியோகத்தரை அழைத்து அது தொடர்பாக கேட்கும் போது மிக துல்லியமான முடிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும், அதற்காக அவருக்கு நன்றிகளையும் தெரிவித்தார் மேலும், அதிமேதகு சனாதிபதியின் வருகையின் போதான கடமைகளிலும் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் போன்ற காலகட்டங்களில் தன்னாலான உடல், உள சேவைகளை ஆற்றியுள்ளமைக்கும் அவருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அலுவலக தடை தாண்டல் பரீட்சை பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு தனது சேவையினை மென்மேலும் ஆற்றவேண்டும் என்றும் அவருக்கு துணை நிற்கும் அவரின் பாரியார் அவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து, தம்பதிகளுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதி பதிவாளர் நாயகம், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி அவர்களின் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தொடர்பான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி அவர்தம் பாரியார் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதியாக நிர்வாக உத்தியோகத்தர் தமது ஏற்புரையில், இன்று தமக்கு நடைபெற்ற சிறப்பான கெளரவிப்பினை தாம் நினைத்துப் பார்க்க வில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்து, அதற்காக ஏற்பாடு செய்த அரசாங்க அதிபர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், அரச சேவையில் திறமை மற்றும் நேர்மையிருந்தால் மதிப்பு மரியாதை தேடிவரும் எனவும் தெரிவித்தார். மேலும், அரசாங்க சேவையில் தான் முன்னேறி வந்த அனுபவப் பகிர்வை தெரிவித்து, தம்முடன் கடமையாற்றி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உத்தியோகத்தர்களும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.01.2026) மு.ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், கடந்த வருடம் நிறைவேற்றிய அபிவிருத்தித் திட்டங்களை அனுபவமாகக் கொண்டு, இவ்வாண்டு மேன்மேலும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியதுடன், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய திட்டங்களை பதிவேற்றம் செய்வதை துரிதப்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புள்ளிவிவர தரவுகள் தொடர்பாக தரவுத்தளம் (Database) ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், இவ்வாண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அபிவிருத்தி திட்டங்களில் மக்களின் சமூக , பொருளாதாரத்தை மேம்படுத்தும் 15 திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பாகவும் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், விவசாய பணிப்பாளர், மாவட்ட பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக பிரதி,உதவி, திட்டமிடல் பணிப்பாளர்கள் ,மாவட்டச் செயலக துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (27.01.2026) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, விழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிதி விடயங்கள் தொடர்பிலான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் கெளரவ தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என்.பிரபாகரன், கடற்படை அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர், விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






