மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுவின் அலுவலக பயன்பாட்டுக்குத் தேவையான கணினித் தொகுதி மற்றும் தளபாடங்கள் Fairmed foundation நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி அவர்களால் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்களிடம் இன்றைய தினம் (20.01.2026) மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Fairmed foundation நிறுவனம் அவற்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, அரச சார்பற்ற நிறுவன மாவட்ட இனணப்பாளர் திரு ந. தயாபரன், மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி. உமாசங்கர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் , மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டை அமுலாக்குமுகமாக, யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.16) வெள்ளிக்கிழமை பி.ப 02.00 மணிக்கு யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் 7000 இற்கு மேற்பட்ட மக்கள் பிரசன்னத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும்,
வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல் சம்பத் துயாகொந்த, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு ரவி செனவிரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்யா ஆகியோரும் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் போதைப் பொரு விற்பனை பாவனையிலிருந்த "அகன்று செல்" ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வரவேற்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் திரு சந்திரமெளலீசன் லலீசன் அவர்களின் விருந்தினர் உரையும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் உரையும் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருட்களை சுற்றிவளைப்பின் மூலம் கண்டுபிடித்த பொலிஸ் அணிகளுக்கான பணப்பரிசு அதிமேதகு சனாதிபதி அவர்களினால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். மேலும், நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான சத்தியப் பிரமாணம் எடுக்கப்பட்டது. இவ் நிகழ்வில் அதிமேதகு சனாதிபதி அவர்களால் விசேட உரையாற்றப்பட்டது. இறுதியாக யாழ்ப்பாண மக்கள் சார்பில் அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாண கடற்படைத் தளபதி, விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரி, பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரி, பிரதிப் பிரதம செயலாளர், வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் பங்குபற்றினார்கள்.


'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (16.01.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் அதிமேதகு சனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன. நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் எந்திரி எல்.பி.குமுது லால் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந் நிகழ்வில், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அதிமேதகு சனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால, வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் அதிகாரிகள், மாகாண திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், விடைய உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இன்றைய தினம் (2026.01.16) மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட பிரதி ஆணையாளர் திரு அருணாச்சலம் கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப் பொங்கல் விழாவில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர்நாயகம் திரு. கமல் அமரசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் என்பதுடன், வடக்கு மாகாண சபை மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திருமதி காஞ்சனா குணசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதன்முறையாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஆணையாளர் நாயகத்தின் பங்கு பற்றுதலுடன் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இப் பொங்கல் விழாவில் கொழும்பிலிருந்து வருகை தந்த திணைக்களத்தின் ஆணையாளர்கள், பிரதம கணக்காளர், உயர் அதிகாரிகளும், யாழ்ப்பாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக இவ்வாண்டு முதற்கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதற்கு அமைவாக, அதிமேதகு சனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் இன்றைய தினம் (16.01.2026)காலை 09.30 மணிக்கு மீசாலை கிழக்கில் வீடமைப்புத் திட்டத்திற்காகதெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கான வீட்டுக்கான அடிக்கல் சம்பிரதாய பூர்வமாக நாட்டப்பட்டது. இந் நிகழ்வில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சர் கெளரவ கலாநிதி எச். எம். சுசில் ரணசிங்ஹ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி ஆகியோரும் பங்குபற்றினார்கள்.






