தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (2026.01.22)காலை 10.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அதிபர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய நிகழ்வு மதங்களுக்கு இடையிலான நல்லுறவை பேணுகின்ற ஒரு விடயமாக காணப்படுவதாகவும், மனிதனின் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் மதம் அடிப்படையாகவுள்ளது எனவும், பிறப்பிலிருந்து அம் மதத்தை கடைப்பிடித்து ஒழுகி வருவதாகவும், நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல மதம் ஒரு ஊடகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சமூகத்தை ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை மதங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு பிள்ளையினுடைய சமூகமயமாக்கல் செயற்பாட்டில் மதங்கள் பாரிய செல்வாக்கு செலுத்தி வருவதாகவும், ஒரு குழந்தை ஆரம்ப கல்வி, பாடசாலை கல்வி கற்பதன் ஊடாக மதம் சார்ந்ததாக மாற்றப்படுவதாகவும் மத நம்பிக்கை மற்றும் பின்பற்றப்படும் அனுட்டானங்கள், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் பழகுகின்ற போது பிள்ளை இயல்பாகவே மதங்களின் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். மேலும் மதங்கள் இரண்டு விதமான விடயங்களை கூறுவதாகவும், ஒன்று மதங்கள் நல்லிணக்கத்தையும் நல்ல செயற்பாடுகளையும் சமூகத்துக்கு மேற்கொள்கின்றது எனவும், மற்றையது மதங்களுக்கு இடையே நல்லிணக்க செயற்பாட்டை வலுப்பெற செய்வதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை நல்லிணக்கச் செயற்பாடுகள் வலுப்பெற்று வருவதாகவும், முன்னைய காலத்தில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டதாகவும் அவை தற்போது மாறி வலுப்பெற்று வருவதாகவும் , முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்ப்பதற்கான இயலுமை மத தலைவர்களிடம் காணப்படுவதாகவும், பொது நிகழ்வுகளில் மதத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி வருவது சமூக நல்லிணக்கத்திற்கான தொடக்க செயற்பாடாகவும் தெரிவித்தார். மேலும், இறைவன் பொதுவான ஒருவராக காணப்பட்டாலும் அவரை பல்வேறு மதங்களும் ஒவ்வொரு மத பிரமாணத்துடன் வழிபட்டு வருவதாகவும் , விழுமியங்கள் , பண்பாடுகள், கலாசாரங்கள் ஆகிய நெறிமுறைகளை சரியாக பேணுவோமேயனால் மத நல்லிணக்கம் பேசு பொருளாய் இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படாது எனவும், சமூகப் போக்கில் மத நிகழ்வுகளோடு மட்டும் நின்றுவிடாமல் சமூக நல்லிணக்கம், சமூக விழிப்புணர்வு சமூக செயற்பாடுகளில் உயர்ந்தளவு மத விழுமியங்கள் தேவைப்படுதாகவும், ஒரு மனிதனை மனிதனாக மாற்றுவதற்கு இம் மதங்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் மத நல்லிணக்க செயற்பாடுகள் நல்ல நிலையில் காணப்படுவதாகவும், அதனை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்க அனைவரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறுகேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட சர்வமத தலைவர்கள் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு ச.செந்தூர்ராஜா, தேசிய சமாதானப் பேரவையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு உத்தியோகத்தர் த.நிலக்சி, PAIRS நிறுவன யாழ்ப்பாண,வவுனியா மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்ட செயலக துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10
 
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளருமான திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (21.01.2026) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது. இத் தைப்பொங்கல் நிகழ்வில் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் கெளரவ H. E. Wiebe De Boer அவர்களின் அரசாங்க அதிபருடனான சந்திப்பின் பின்னர் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இணைந்து பங்குபற்றி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத் தைப்பொங்கல் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 9 10 12 13 14 15 16
 
நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் கெளரவ H. E. Wiebe De Boer அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.01.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் மீள்குடியேற்ற நிலைமைகள், இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் மற்றும் மீளக்குடியமரவுள்ள குடும்பங்கள் தொடர்பாகவும், அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார் . விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் அத் துறைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாகவும், மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார நிலவரங்கள், தீவக அபிவிருத்தி குறிப்பாக முதலீட்டு வாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் டித்வா புயல் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், யாழ்ப்பாண கோட்டை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களிடம் வினாவிய போது, தற்போது யாழ்ப்பாண கோட்டை சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அதிகம் வருகைதரும் இடமாகவும், தொல்லியல் திணைக்களம் மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் உள்பகுதியில் சுற்றுலாவிகளை கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை உயர்ஸ்தானிகருக்கு அரசாங்க அதிபர் விபரித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி சம்பந்தமாக அக்கறை செலுத்தி பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தீவுப் பகுதி சுற்றுலா அபிவிருத்தி குறிப்பாக நெடுந்தீவு பிரதேச சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது. இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் நெதர்லாந்து தொடர்பான ஆவணப் புத்தகம் அரசாங்க அதிபரிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சந்திப்பில் நெதர்லாந்து உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான சிரேஷ்ட ஆலோசகர் திரு. நாமல் பெரேரா அவர்களும், கலாசார ஆலோசகர் திரு. கிறைசனி மெண்டிஸ் அவர்களும் உடனிருந்தார்கள்.
 
1 2 3 4 5
வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு 2026 (Northern Investment Summit - NIS26) இன்று (21.01.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மிகப் பிரமாண்டமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. வடக்கு மாகாணத்திலுள்ள முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், "Empowering Growth, Insightful Innovations" என்ற கருப்பொருளின் கீழ், இந்த மாநாடு இன்றைய தினம் ஆரம்பம்மாகி நாளை (22. 01.2026) வியாழக்கிழமையுமாக இரு தினங்கள் இடம்பெறவுள்ளது. இன்றைய நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் கெளரவ சாய்முரளி, வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, ஆகியோர் பங்குபற்றினார்கள்.
குறித்த மாநாட்டினை இலங்கை முகாமைத்துவக் கழகம் (The Management Club - TMC) வட மாகாணத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பொருளாதார ஆற்றல்களை அடையாளம் கண்டு, நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட முதலீட்டு மேடையை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதன் போது விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றப்பட்டது. வரவேற்பு நடனத்தினை யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீட மாணவர்கள் ஆற்றுகை செய்தனர். தொடர்ந்து வரவேற்புரையை இலங்கை முகாமைத்துவக் கழகத்தின்(TMC) தலைவர் திரு. ரோஜர் தலயரத்னவும், உச்சிமாநாட்டின் நோக்கம் மற்றும் அறிமுக உரையை மாநாட்டின் செயற்றிட்டத் தலைவர் இந்திக கௌசால் ராஜபக்சவும் நிகழ்த்தினார்கள். வட மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான குழு விவாதத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக 'வடக்கு முதலீட்டு மாநாடு – 2026' (Northern Investment Summit - NIS26), ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 12 13 5 6 7 8 9 10 11
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கெளரவ ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.01.2026) காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் டித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக வினாவிய போது, டித்வா புயல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20023 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளை சுத்தம் செய்வதற்காக 13168 குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 15260 பாடசாலை மாணவர்களுக்கு 15000 ரூபா வீதம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கி தொடர்ச்சியான கல்விக்கு உறுதுணையாகவிருந்ததாகவும், மேலும், சேதமடைந்த வீதிகள் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் எமது இளைஞர் யுவதிகள் திறமை பெற்றுள்ளதாகவும், பொருத்தமான வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மாவட்டம் மற்றும் நாடு பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இச் சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான இரண்டாம் செயலாளர் திரு. இராமன் செட்டியார் அவர்களும், அரசியலுக்கான அலுவலர் ஃபாறா பிர்தௌஸ் அவர்களும் உடனிருந்தார்கள்.
 
 
1 2 3 4 5