தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டை அமுலாக்குமுகமாக, யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.16) வெள்ளிக்கிழமை பி.ப 02.00 மணிக்கு யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் 7000 இற்கு மேற்பட்ட மக்கள் பிரசன்னத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும்,
வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல் சம்பத் துயாகொந்த, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு ரவி செனவிரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்யா ஆகியோரும் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் போதைப் பொரு விற்பனை பாவனையிலிருந்த "அகன்று செல்" ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வரவேற்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் திரு சந்திரமெளலீசன் லலீசன் அவர்களின் விருந்தினர் உரையும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் உரையும் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருட்களை சுற்றிவளைப்பின் மூலம் கண்டுபிடித்த பொலிஸ் அணிகளுக்கான பணப்பரிசு அதிமேதகு சனாதிபதி அவர்களினால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். மேலும், நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான சத்தியப் பிரமாணம் எடுக்கப்பட்டது. இவ் நிகழ்வில் அதிமேதகு சனாதிபதி அவர்களால் விசேட உரையாற்றப்பட்டது. இறுதியாக யாழ்ப்பாண மக்கள் சார்பில் அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாண கடற்படைத் தளபதி, விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரி, பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரி, பிரதிப் பிரதம செயலாளர், வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் பங்குபற்றினார்கள்.







