யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், ஊராட்சி முற்றக்கூட்டம், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் (05.02.2026) பி. ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி எஸ். லதுமீரா ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தொடக்கவுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கிராம மட்டத்தில் அடையாளம் காணப்படும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இக் கலந்துரையாடல்கள் அமைவதாகவும், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற'"ஊராட்சி முற்றம்" கூட்டத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யில் இடவசதி போதாமையால் குறித்த கட்டடத்தினை விரிவாக்கம் தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அமைய, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் விரிவாக்கப்பட்டதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, இக் கலந்துரையாடல் ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் கெளரவ மதிவதனி விவேகானந்தராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் திருமதி ம. தமிழ்செல்வி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கூட்டம் நடைபெற்றது. மேலும், மக்கள் எதிர்நோக்கும் பல்துறைசாா் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஊராட்சி முற்றத்தில் கலந்துரையாடி தீர்வு வழங்குவதை நோக்காக கொண்டு இக்கூட்டம் நாடாத்தப்பட்டது. இதில் ஊராட்சி முற்ற கூட்டத்தின் நோக்கம்,
மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சிறுவர், பெண்கள் நலன் மற்றும் குழுக்கள், பாதுகாப்பு, கல்வி, விவசாயம், பெண்கள் சிறு சிறு கைத்தொழில் உற்பத்தி உள்ளிட்ட பல காத்திரமான விடயத் தலைப்புகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், தொடர்புடைய அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட குடிசார் அமைப்புகளின் சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.

மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (05.02.2026) மு. ப 11.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த கெளரவ மாநகர முதல்வர், கெளரவ தவிசாளர்களை வரவேற்றதுடன், இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்ததன் மூலம் ஆரோக்கியமான தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும், சுற்றாடல் குழு கூட்டமானது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை நடாத்தப்பட வேண்டும் என சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், திண்மக்கழிவகற்றல் பொறிமுறை சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும், அதற்கு பொதுமக்களின் விழிப்புணர்வு செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும், குப்பைகளை வீதிகளில் பொறுப்பற்ற முறையில் வீசுபவர்களை கண்காணிப்பதற்கு - உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிப்பு கமராக்களை பூட்டி அவதானிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பிரதேச செயலகங்களில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் சுற்றாடலுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் இருப்பதனால் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது. இக் கூட்டத்தில் பிரதானமாக பின்வரும் விடயங்கள் அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் திண்மக் கழிவுகள் தொடர்பாக பொதுமக்களுக்கான போதியளவு விழிப்புணர்வு இருப்பதனால் கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2.யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அரச, தனியார் நிறுவன திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறும், மார்ச் முதலாம் திகதியிலிருந்து உள்ளுர் அதிகார சபையினால் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
3.ஏதாவது திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் பொலீசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென
கூட்டத்தில் தெரிக்கப்பட்டது .
4.ஒலிபெருக்கியின் பாவனையால் அதிகப்படியான இடையூறு ஏற்படின், குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு தகவல்களை வழங்குவதன் ஊடாக பிரதேச செயலாளர்கள் அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
5.பொதுமக்கள் வளி மாசடைதல் தொடர்பாக WWW.CA.AQ.LK என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
6.டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் டெங்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர், உள்ளூர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றிகளை அரசாங்க அதிபர் தெரிவித்து தொடர்ச்சியான கண்காணிப்புக்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாநகர கெளரவ முதல்வர், பிரதேச சபையின் கெளரவ தவிசாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் மாவட்டச் செயலக முன்றலில் நாட்டிவைப்பு "பனைமரம் என்னும் கற்பகத் தருவினைப் பேணிப் பாதுகாப்போம்" எனும் நோக்கத்தோடு இன்றைய மாவட்ட சுதந்திரதின நிகழ்வில் - யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நாட்டிவைக்கப்பட்டது.

அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.02.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டு அரசசார்பற்ற நிறுவனங்களினால் பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டத்திற்கும், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தினால் அவசர அவசியத் தேவை கருதி முன்வைக்கப்படும் கோரிக்கைகளை பரிசீலித்து ஒத்துழைப்பு வழங்கிவருகின்றமைக்கும் நன்றியினைத் தெரிவித்தார். அரசசாா்பற்ற நிறுவனங்கள் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் செயற்படுவதன் மூலம் வினைத்திறனாக மேன்மேலும் செயற்பட முடியும் எனவும் தெரிவித்து, ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்களுக்கான (Action Plan) உரிய அறிவுறுத்தல்களையும் அரசாங்க அதிபர் வழங்கினார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
01.அரச சார்பற்ற நிறுவனங்களுடனான மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தினை காலாண்டுக்கு ஒரு தடவை நடாத்தப்பட வேண்டும் எனவும், பிரதேச செயலக ரீதியாக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பிரதேச செயலாளர்கள் சீரான முறையில் முன்னேற்றக் கூட்டத்தினை நடாத்துமாறு பிரதேச செயலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
02.பிரதேச செயலக ரீதியான தேவைப்பாடுகளில் பிரதானமான 03 முன்னுரிமை தேவைப்பாடுகளின் விபரங்களை பிரதேச செயலாளர்கள் ஒரு வார காலத்திற்குள் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும், அதனை தொகுத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்திற்கு சமர்ப்பித்து ஒருங்கிணைப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
03.2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கூட்டத்தினை நடாத்தி அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேவைப்பாடுகளின் முன்மொழிவு களை தெரிவு செய்வதன் மூலம், சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்கு பொருத்தமான முன்மொழிவுகளை 2027 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தக் கூடிய வினைத்திறனாக செயற்பாட்டிற்கு அக் கூட்டம் வலுச் சேர்க்கும் எனத் தெரிவித்தார்.
04 நெடுந்தீவு, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வறுமையான குடும்பங்கள அதிகமுள்ளதால் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை அதிகம் எதிர்பார்ப்பதாகவும், ஏனைய 10 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் உள்ள வறுமையான கிராமங்களின் விபரங்கள் மாவட்டச் செயலகத்தினால் சமர்ப்பிக்கப்படும் எனவும், அக் கிராமங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களை முன்னுரிமைப்படுத்துமாறும் தெரிவித்தார்.
05.அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை (Action Plan) சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைப்பதுடன், பிரதேச செயலாளர்கள் சுகாதாரம், கல்வி போன்ற அரசாங்க பங்குதாரர்களுடன் இணைந்து அத் திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
06.பாடசாலைகளில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கொடுப்பனவுகளை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வழங்கி செயற்பட்டுவருவதனால், அரசாங்கத்தினால் மாற்றுத்திறனாளிகளின் கொடுப்பனவிற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் அல்லது கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரங்களை பிரதேச செயலாளர்கள் 15 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டச் செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
07.யாழ்ப்பாண பிரதேச செயலக கரையோரப் பகுதியல் சடுதியாக புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதேச செயலாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக, பிரதேச செயலாளருடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் இணைந்து ஆராய்ந்து உரிய செயற்றிட்டத்தினை இனங்காணுமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், பிரதேச செயலாளர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய தினம்(04.02.2026) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், யாழ் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்களின் சாரணிய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், மர நடுகை மற்றும் சிரமதான நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக் அவர்கள், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.






